Thursday 22 September 2011

செய்திகள் 22/09


ஐநாவில் போர்க்குற்றம்
ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்க இருப்பதாக ஐ.நா.மனித உரிமை பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் இன்று நண்பகல் ஒருமணிக்கு முதல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கால கெடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் இன்று காலையில் கனடா இத்தீர்மானத்தை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்க உள்ளதாக தெரியவருகிறது.
கனடா இன்று காலை இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சிறிலங்கா குழு இதை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் ஜெனிவாவில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரேரணை அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் என தெரியவருகிறது.
18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்து கொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*******************

தூக்கிவீச கோரும் ஸ்ரீலங்கா!
மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஸ், மாலைதீவு, கியூபா ஆகிய ஒன்பது நாடுகள் மட்டுமே ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளிடம் இருந்து இந்தக் கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கு சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்தியா, இந்த விடயத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது என்றும், அது பற்றிய விவாதம் ஒன்று வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
*******************


மாற்றம் தெரிகிறது - ததேகூ
சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

பேசிப் பேசிக் காலத்தை இழுத்தடிக்க முடியாது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது.
அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்காது என்று சொல்லமுடியாது. ஒரு தீர்வைக் கொடுப்பதற்கு அரசுக்கு இன்னும் மனமில்லாமல்தான் இருக்கிறது என்று தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அதற்கான தீவிர பிரசாரத்தில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
கல்முனை 2ஆம் பிரிவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் கூறினார்.
தமிழர்களின் பிரச்சினை முடிந்துவிட்டது இனிமேல் இனப்பிரச்சினை என்று ஒன்று இந்த நாட்டில் இல்லை என்று உலகுக்குச் சொல்லவே அரசு விரும்புகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு அதற்கு முயன்றபோதும், அரசால் அது முடியவில்லை.
முன்னர் இருந்த நிலையைவிட அரசு இன்று மிகவும் இக்கட்டான நிலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பல அமைச்சர்களை அனுப்பி, இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்று சொல்வதற்கு அரசு முயன்றது.
ஐ.நா. கூட்டத் தொடர் ஆரம்பித்த முதல் நாளிளேயே, தமிழர்கள் இந்த நாட்டில் சம மதிப்புப் பெற்ற குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதை அறிந்ததும் ஒரே இரவில் உண்மையை விளக்கி சர்வதேச சமூகத்துக்கு அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சொன்னவை அனைத்தும் பொய்யானவை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் கருத்துக்கள் என்பதைப் பகிரங்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 11ஆம் சுற்றுப் பேச்சின் போது அவர்கள் அது பற்றி முறைப்பட்டார்கள்.
அந்த அறிக்கையால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள் என்றும் கேட்டார்கள்.

இதற்குப் பதிலளித்த தமது தலைவர் சம்பந்தன், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததில் ஒரு விடயமாவது தவறானது என்று சுட்டிக்காட்ட முடியுமா? என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியதாகவும் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர்கள் மௌனம் சாதித்தனர். பொய்ப் பிரசாரம் செய்யும்போது, அது எமது மக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதிக்கும்போது தாம் மௌனமாக இருப்போம் என்று நினைக்கவேண்டாம்.
இந்த முறை அறிக்கை மட்டுமே விடுத்தோம். அடுத்த தடவை நேரடியாக ஜெனீவா வந்து சர்வதேச சமூகத்துக்கு உண்மையைப் புரிய வைப்போம் என்று சம்பந்தன் தெரிவித்ததாக சுமத்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

உடனே அவர்கள் அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு பேச்சைத் தொடர்வோம் என்று கூறி நழுவிவிட்டார்கள்.
அரசுடன் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பித்துள்ள பேச்சுத் தொடர்பில் பலருக்கு சந்தேகங்கள், கேள்விகள் இருக்கின்றன.
முன்பு நடந்த பேச்சுக்களில் ஒன்றுமே நடக்காத நிலையில், அரசு உரிய பதிலைத் தராத நிலையில்தான் தாம் அரசுடனான பேச்சை இடைநிறுத்தினோம் எனவும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அரசு மீது சர்வதேச சமூகம் கடும் அழுத்தங்களைக் கொடுத்ததாலும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தாம் ஆக்கபூர்வமாகச் செயற்படுகிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு காட்டவேண்டிய நிர்பந்தத்தாலும் மீண்டும் பேச்சைத் தொடங்க அரசு சம்மதித்தது.
எப்படியான சூழலில் தாங்கள் திரும்பவும் பேச முடியும் என்று செல்லியிருந்தோமோ அந்தச் சூழ்நிலை உருவாக்கப்பட்டதன் காரணமாகத்தான் தாம் திரும்பவும் பேச்சுக்குப் போனதாகவும் குறிப்பிட்டார்.

இப்போதும் ஒரு தீர்வைத் தமிழர்களுக்குக் கொடுக்க அரசுக்கு மனமில்லாமல்தான் இருக்கிறது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை அளித்ததன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூடமைப்புடன் அரசு பேசவேண்டும் என்று உலக நாடுகள் இன்று அரசை நிர்ப்பந்திக்கின்றன.
சர்வதேச அரங்கில் அரசுக்கு எதிராக எழும்பியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றால் ஏற்படும் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்புவதற்கு, இவற்றுக்கெல்லாம் காரணமான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை வலியுறுத்துகின்றது எனவும் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
*******************

ஆதரவு தேடும் மகிந்த
நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் அவர், நைஜீரிய அதிபர் குட்லக் எபெலே ஜொனாத்தனையும், கிர்கிஸ்தான் அதிபர் றோசா ஒட்டுன்பயேவா அம்மையாரையும், ஸ்லோவேனிய அதிபர் டானியோ டக்கையும், செனகல் அதிபர் அப்துலாவ் வாடேயையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் செயலக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபருக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை பான் கி மூன் வெளியிட்ட பின்னர் முதல்முறையாக மகிந்த ராஜபக்ச அவரைச் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தவாரம் சந்திக்கவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு மகிந்த ராஜபக்ச விளக்கமளிப்பார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
*******************

அனைவரும் அணி திரள வேண்டுகோள்
ஐ.நா சபையில் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருக்கும் உரைக்கான திகதியில் மாற்றமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு அறியத் தருகின்றது.
மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த தினமான செப் 23 அன்று பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா முன்றலில் திரள்வதை முடக்கு முகமாக ராஜபக்சவின் உரை முன்போடப்பட்டதாக, ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பான ஊடகங்களால் செய்தியொன்று கசிய விடப்பட்டிருந்தது.
அச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்பதனால் நாடு கடந்த தமிழீழ மக்களை வீண் குழப்பமடைய வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் உரை ஐ.நா. சபை நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் 23ம் திகதி நடைபெறும் என்பதையும் அவரது உரை முன்னகர்த்தப்பட்டுள்ளது என்று வெளிவந்த செய்தியானது திட்டமிட்டுக் கசியவிடப்பட்ட பொய்பிரச்சாரம் என்றும், நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்கித் தமிழ் மக்கள் பேரணியாய்த்திரள்வார்கள் என்ற பயத்தின் நிமித்தமே இவ்வாறான செய்தியைச் ஸ்ரீலங்கா அரசு கசிய விட்டிருந்தது என்று மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மகிந்தவின் உரை 23ம் திகதி நடைபெறும் என்பதை ஸ்ரீலங்கா அரசின் உத்தியோகபூர்வ இணையத் தளம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஸ்ரீலங்கா அரசு சார் மற்றுமொரு இணையத்தளமும் 23ம் திகதியே ஸ்ரீலங்கா அரசுத் தலைவரின் உரை நிகழும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
நாளுக்கு நாள் சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக எழுந்துவரும் மனித உரிமை மீறல், இனப்படுகொலை,மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கான குற்றச்சாட்டுக்களால் ஐ.நா சபையில் ஏற்படக்கூடிய தர்ம சங்கடமான நிலையைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறான பொய்ப் பரப்புரை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அலையலையாக அணியணியாகப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பொங்குதமிழின் உயிர்மூச்சுப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
*******************

கோபமுற்ற ஆக்கிரமிப்பாளர்கள்
அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவைப்படின் நீதிமன்றமும் செல்வோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று அரசாங்கம் மறுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவந்து நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக்காட்டுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்துவரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டு இனங்களே இருக்கின்றன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்கள் நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்கள் என்று அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னர் ஒரு தடவை தெரிவித்த யதார்த்தபூர்வமான கருத்துக்கு போலி அர்த்தத்தைக் கொடுத்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சிலர் இவ்விதம் தவறான தகவல்களை எடுத்துரைப்பது மன்னிக்கமுடியாத குற்றமென்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழினம் என்றொன்று இலங்கைத்தீவில் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகங்களில் அரங்கேற்றி வருகிறதென்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் புதிதாக சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
இந்தக் குடும்பங்களுக்கு புதிதாக காணிகளும் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து இந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தமிழர் காணிகளையும் அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இல்லாத பிரச்சினைகளை போலியாக சோடித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்விதம் பிரசாரங்களை செய்து வருவதை அரசாங்கம் கண்டிக்கிறதென்றும், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய காலத்தில் சரியான பதிலை கொடுக்குமென்றும் கூறினார்.
ஆதாரபூர்வமாக வெளிப்படையாக தெரியும் இந்தப் பிரச்சனையை கூட ஏற்றுக் கொள்ள முடியாத இந்த அரசு எப்படி தமிழர்களின் உரிமைப் பிரச்சனையை ஏற்றுக் கொள்ளப் போகின்றது என்ற கேள்வி அரசியல் அவதானிகளால் எழுப்பப்பட்டுள்ளது.
*******************

சர்வதேச உறவுகளை மேம்படுத்து நா.க.த.அ
தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர கனகரட்னம், ஜ.நாவுக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய ஒன்றியத்திற்கான தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தென்சூடானினதும், தமிழீழ மக்களினதும் இருபக்க நலன்கள் குறித்த பல்வேறு வகையான விடயங்களுடன், மனித உரிமைகள் மற்றும் தென்சூடானில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியதாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் இரு அரசாங்களிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி கொள்ளவும், தென்சூடானுடனும், சர்வதேசத்துடனும் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
*******************

கோபம் கொண்ட பீரிஸ்
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மதிய விருந்து அளித்திருந்தார்.
அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியொரும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தூதுவர் ஒருவர், அன்று காலையில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்ததாக அங்கு கூறினார்.
சிறிலங்கா மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மதிய விருந்து நடந்து கொண்டிருந்த போதே உடனடியாக பீரிஸ் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பீரிஸ் சொன்ன செய்தி அவருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதற்குப் பின்னர் தான் ஐ.நா பொதுச்செயலரின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாலித கொஹன்னவுக்கு நிபுணர் குழு அறிக்கை ஜெனிவா செல்வது பற்றி அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அனுப்பி வைத்த மனிதாபிமான நடவடிக்கை குறித்த அறிக்கையின் பிரதியையும் நிபுணர்குழு அறிக்கையுடன் இணைந்து அனுப்பவுள்ளதாகவும் நம்பியார் கூறியுள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் அதிர்ச்சியான அந்தச் செய்தியை அறியாதிருந்தது பீரிசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாலித கொஹன்னவிடம் அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகமும் பீரிசின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அவர், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக மிகக் கடுமையான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
இவரது இந்த உரையின் ஒழுங்குகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கும் சரி, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் சரி, மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.
ஏனெனில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருடன் அவர் இன்னும் பல காலம் பணியாற்ற வேண்டியிருப்பதால் அவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*******************

தண்டனை விதிக்க கோரிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் படை சிப்பாய்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் அவசரமாக இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐநா நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 16ம் திகதி இந்த விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
*******************

குழப்பம் இல்லை ஆனால் இருக்கிறது - ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னணி முன்னை போன்றே செயற்படுகிறது.
இக்கட்சிக்குள் பேசுவதுபோன்று எந்தவிதமான குழப்பமும் இல்லை.
வதந்திகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியமும் தனக்கில்லை என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாங்கள் இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதால் இப்படியான வதந்திகளை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார். 
ஜே.வி.பி.க்குள் குழப்பம் உருவாகியிருப்பதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கேட்டபோது கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற சதி முயற்சிகளுக்கு தாங்கள் ஒருபோதும் கையசைத்துப் போகப்போவதில்லை.
இவ்விடயம் தொடர்பில் முன்னையை விட கூடிய கவனத்தினைச் செலுத்தி பிரச்சினைகளை களையவிருக்கிறோம்.
கட்சியினை புதிய சக்தியுடன் வலுவடையச் செய்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது பற்றி கூடிய கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
கட்சி அங்கத்தவர்களுக்குள் ஏதாவது குழப்பம் நிலவினால் அதனை உரியமுறையில் தீர்த்து வைத்து மக்கள் முன்னணியை சக்திமிக்க கட்சியாக உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்புவதே தங்களது குறிக்கோள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
1987 காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சிதத்தின் சகோதரரான பிரேமகுமார் குணரத்தினம் தலைமையில் புதிய ஜே.வி.பி. உருவாகி வருகிறது என்ற செய்தி அண்மையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************

சொத்துக்கு ஆசைப்பட்டு........?
இலங்கைப் பிரஜையொருவர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடுவாரேயானால் அவரது அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்றும் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு பணப் புழங்கலை புலனாய்வு செய்யும் மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிதித் தொழில் சட்டமூலம், பணம் தூயதாக்கல் தடைத் திருத்தச் சட்ட மூலம், பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தலை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டமூலம், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் பந்துல இதனைத் தெரிவித்தார்.
*******************