Thursday 8 September 2011

செய்திகள் 07/09


விசாரணைப் பொறிமுறை குறித்து கருத்தாய்வு
போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு எதிராக ஏற்படுத்துவது தொடர்பாக அங்குள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் முயற்சியில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகும் நிலையில் மேற்கு ராஜதந்திரிகளால் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
அதில் போர்க் குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த மேற்கு நாடுகள் கடும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இலங்கை தனது பொறுப்புக்கூறும் கடமையைத் தட்டிக்கழிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால், ஜெனீவா மாநாட்டில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்வைக்கக்கூடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது என்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. அலுவலக இலங்கை அதிகாரிகள் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதேவேளையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான சர்வதேச விசாரணை ஒன்று குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன என்பதை அறிய, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார்கள்; நடத்தி வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜேர்மன் ஆகியவற்றுக்கான தூதவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இது தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறி இருந்தனர்.
ஜெனிவா கூட்டத் தொடரில் பேசப்படவுள்ள நம்பப்படும் விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தமிழ்க்கட்சிகளின் பிரமுகர்களுடனும் பேச்சுகளை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதே நோக்கத்துக்காகவே கொழும்பு வர இருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவைத் தாக்கிய புயல் காரணமாக அந்தச் சந்திப்பு பின்னர் கைவிடப்பட்டிருந்தது.
பிளேக்கின் பயணத்தின்போது அவர், அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பில் தீர்க்கமாகப் பேச எண்ணியிருந்தார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலுள்ள தூதவர்களின் இத்தகைய செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
*****************

குடும்ப மயமாகும் ஸ்ரீலங்காவின் சர்வாதிகார ஆட்சி
சிறிலங்கா அதிபரின் பதில் செயலராக கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாடு சென்றுள்ளதாலேயே கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வழக்கத்தில் லலித் வீரதுங்க வெளிநாடு செல்கின்ற போது, சிறிலங்கா அதிபரின் பணியக தலைமை அதிகாரி காமினி சேனாரத் பதில் செயலராக கடமையாற்றுவார்.
ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லலித் வீரதுங்க நாடு திரும்பும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.
சிறிலங்காவின் அடுத்த பிரதமராக கோத்தாபய ராஜபக்சவை முன்னிறுத்த சிறிலங்கா அதிபர் முனைவதையே இது காட்டுவதாக அமைச்சர்கள் பலரும் விசனமடைந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
*****************

நடுநிலையாளரை ஏற்க மறுத்த ஸ்ரீலங்கா
போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக்குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை மே 19ம் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும், பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நோர்வே தூதுவர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள போராளிகளை சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் சிறிலங்கா அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
மே 17ம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளை சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் போர் முடிந்து விட்டது என்று கூறி கோத்தாபய ராஜபக்ச அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்து விட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு படையினருக்கு தான் அறுவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை அன்றையநாள் போர் வலயத்தில் இருந்து சடலங்களையும். காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வேண்டுகோளை நிராகரித்த பசில் ராஜபக்ச, சிறிலங்கா அரசாங்கமே அதனைப் பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
*****************

பொய் சொல்லும் ஆவணப்படம்
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த "டுநைள யுபசநநன ருpழn" என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.
சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட- வெள்ளைக்கொடி விவகாரத்தில் பாலித கொஹன்னவின் பங்கு என்ன என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர் நம்பியாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.
இதுபற்றி தாம் நம்பியாரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
ஆனால் அல்-ஜெசீராவுக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அப்போதைய வெளிவிவகார செயலர் பாலித கொஹன்னவுடன் பேசுமாறு கூறியிருந்தாகவும் இன்னர் சிற்றிபிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் நேற்று பாலித கொஹன்னவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது இராணுவத்தில் தனது பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விடுதியில் நம்பியாரைச் சந்தித்துப் பேசியதை ஒப்புக்கொண்ட கோஹன்ன, அந்த உரையாடலை நினைவுபடுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் 58வது டிவிசன் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு, தனது 58வது டிவிசன் பற்றி அந்த அறிக்கையில் கூறப்படவில்லை என்று முதலில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பதிலளித்திருந்தார்.
இதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் 55வது, 58வது டிவிசன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தியை உரத்து வாசித்துக் காண்பித்தார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, அந்த அறிக்கை தவறானது என்றும், அது 53வது டிவிசன் என்றும் கூறியதுடன் 55வது டிவிசன் அப்போது வேறாரு இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது, அது ஐ.நா அறிக்கை அல்ல என்று பாலித கொஹன்ன வாதிட்டுள்ளார்.
*****************

கொடிய சட்டங்களை உருவாக்க தயங்காத அரசு!
நாட்டைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கும் என அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தயங்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் ஆற்றிய உரைக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைக் கூறினார்.
இராணுவத்தினர்தான் வடக்கு, கிழக்கில் மக்களைப் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றினர்.
அவர்களால் கிறீஸ் பூத பீதியைக் கட்டுப்படுத்த முடியாது என்று ரணில் கூறுவது அபத்தம்.
யாழ். மக்கள் இப்போது இயல்பு வாழ்க்கை நடத்துகின்றனர்.
இந்த நிலையைக் குழப்புவதற்காக மக்கள் மத்தியில் பீதி கிளப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் முயற்சி வெளிநாட்டுச் சக்திகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தங்கொடுப்பதே என்றும் அவர் சாடினார்.
நாட்டைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதற்கும் அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்குத் தயங்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
*****************

அவசரப்பட்டு அவசரகாலச் சட்டத்தை நீக்கியதன் மர்மம் என்ன?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வு ஆரம்பமாவதை முன்னிட்டே இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக தெ புரொன்ட் லைன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீது எண்ணற்ற மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டு வர மேற்குலக நாடுகளும் முயற்சித்து வருகி;ன்றன.
இந்தநிலையிலேயே அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இலங்கை நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் நீக்குவதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவித்தார் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமைக்கு இந்திய அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டது.
எனினும் அதனை இலங்கை மறுத்துள்ளது.
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்படுவதை பல நாடுகளும் வரவேற்றுள்ளன.
எனினும் இந்த அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் விடுதலைக்குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கேள்வி எழுப்பியுள்ளது.
மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் சேம் ஸராபி, இது தொடர்பில் கருத்துரைக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை தாம் தடுத்து வைத்துள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலைக் குறித்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளமைக்கும் திட்டம் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் அல்லது நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஸராபி கோரிக்கை விடுத்துள்ளார்.
*****************

பொதுச் சொத்துக்களின் துஸ்பிரயோகம் தொடர்கின்றது.
இம்முறை தேர்தலின் போதும் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக தேர்தல் முக்கிய கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதுடன், சட்டவிரோத பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் சட்ட விதிகளை மீறியக் குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*****************

அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளதா?
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை அரசாங்கம் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.
அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீள அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
22 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழான இந்நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இல்லாத சட்டத்தின் கீழ் எப்படி இந்த நியமனத்தை மேற்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீள அறிமுகப்படுத்தப்படுகிறது.
குறைந்தபட்சம் 4 வர்த்தமானி அறிவித்தல்கள் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக வர்த்தமானிகள் அரசாங்க இணையத்தளத்தில் வெளியிடப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் யோசனை தெரிவித்தார்.
*****************

இனக்கலவரம்?
சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் கூறியுள்ளது.
இந்த மோதலைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறை தவறிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அரசியல் மற்றும் வர்த்தகப் போட்டியே இதன்பின்னணியில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************