Thursday 29 September 2011

செய்திகள் 29/09


தஞ்சம் கோரும் ஸ்ரீலங்கா
ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அவர் முகம் கொடுப்பதற்கான சகல உதவி ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  
*****************

ஸ்ரீலங்காவை அச்சுறுத்தும் இரகசிய சந்திப்பு
அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான 'நாம் இலங்கையர்' அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்ன, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளரைச் சந்தித்துப் பேசியுள்ளார் என சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்றும் அவை அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் நாம் இலங்கையர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
*****************

தொடரும் மர்மனிதர்களின் தாக்குதல்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள மர்மநபர்கள் நடமாட்டத்தினால் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
நேற்றைய தினம் திருவையாறு பிரதேசத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டில் தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்மநபர்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு 5பேர் கொண்ட மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்தவர்கள் உடனடியாகவே வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தந்தையான 60 வயதான பொன்னையா பாலசிங்கம், 32 வயதான மகன் பாலசிங்கம் தினேஸ் ஆகியோரை வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் தந்தைக்கு முதுகிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மகனுக்கு வயிற்றுப்பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டபோதும், அயலவர்கள் எவரும் உதவ வரவில்லை.
இதேவேளை காயமடைந்த மகனுக்கும் மர்மநபர்களுக்கும் இடையில் நடந்த சண்டையினால் தொடர்ந்தும் நிற்;க முடியாத மர்மநபர்கள் வீட்டிலிருந்த 9பவுண் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடைபெற்று மர்மநபர்கள் வெளியேறிச் சென்று அரை மணிநேரத்தின் பின்னரே காயமடைந்தவர்கள் மீட்;கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கடந்தவாரமும் இதேபகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 10பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலுமொரு வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் 36ஆயிரம் ரூபாவைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை 5பேர் கொண்ட குழுவே இந்தக் கொள்ளை மற்றும் கண்முடித்தனமான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டு வருவதாகவும், இவர்கள் காற்சட்டையும், ரீசேட்டும் அணிந்திருப்பதுடன் இவர்களில் ஒருவர் சிங்கள மொழிபேசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இத்தகைய மர்மநபர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மிகநெருக்கமாக இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
*****************

உலகை மீண்டும் ஏமாற்ற முயற்சி
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் உலக நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து உலக நாடுகளுக்கு புரிய வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து சில நாடுகள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தாருஸ்மான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
*****************

உண்மையை உணருமா?
நேற்று மதியம் மூன்று மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த ஐம்பது இலங்கை அகதிகளில் 36பேர் பிரித்தானியா சட்டத்தரணிகளின் அதிரடி நகர்வினால் தடுத்து நிறுத்தபட்டுள்ளனர்.
இருபது நன்கு மணித்தியாலங்கள் இவர்களது பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
ஆயினும் நாளையே இவர்களின் பயண விடயம் தொடர்பாக தெளிவாக தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்கள ஆதாரம் சான்றாக உள்ளதுடன் மனித உரிமை அமைப்புகளின் ஆதாரங்களும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.
அத்தோடு நாடு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் காணமல் போவர் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டபட்டுள்ளது.
சனல் 4 இந்த தடுப்பிற்கு முக்கிய பணியாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து பிரித்தானியா அரசு கவலை கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
50 இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக விமானத்தினை பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவரமைப்பின் அதிகாரிகள் தயார்படுத்திய போது பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இலங்கைத் தமிழர்கள் நாடு திருப்பப்படின் 50 இலங்கைத் தமிழர்களும் கொடுமைக்கு உள்ளாகலாம் என எச்சரித்திருந்தனர்.
இறுதி நேரத்தில் கூட நாடு கடத்தப்படுவோரின் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.ஓ.எம் என்ற சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தினர்.
எனினும் அந்த அமைப்பு, நாடு கடத்தப்படுவோரின் பாதுகாப்பு குறித்து தம்மால் உறுதிப்பாட்டை தெரிவிக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் நாடு கடத்தப்படுவோரிடம் தமது கொழும்பு உயர்ஸ்தானிகர தொலைபேசி இலக்கங்களை கொடுத்துள்ளது.
எனினும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் தலைவர் கீத் பெஸ்ட், நாடு கடத்தப்படுவோர் தொடர்பில், பிரித்தானிய எல்லைப்பாதுகாப்பு சபையின் தலைவர் ரொப் வைட்மானுடன் தொடர்பு கொண்டு, நாடு கடத்தப்படுவோரின் தொடர்பு தகவல்களை பெற்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதேவேளை நாடு கடத்தப்படும் தமிழர்கள் நிச்சயமாக இலங்கையில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
*****************

நிராதரவான தமிழர்கள் - செஞ்சிலுவைச் சங்கம்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வட இலங்கை மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்பு யுத்தப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றி இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் குரல்கொடுத்துள்ளது.
யுத்தத்துக்கு பின் மீள்குடியேறிவருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள்கூட இல்லை என்றும், சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை என்றும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடிநீர் கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்துவருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேயசிங்க கூறினார்.
இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினைகள் தொடர்ந்து காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
ஆனால் செஞ்சிலுவை சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கியக் கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னார்ட் சேவெஜ் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் வழங்கக் தாங்கள் தயங்குவதில்லை என அவர் கூறினார்.
இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஆதரித்து வரவே செய்கிறது என்றும், உறைவிடம், வாழ்வாதாரம், நிரந்தர வீடுகள் தொடர்பாக இலங்கையில் அடுத்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்படுகின்ற உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கி வரவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் நிலவரம், மனித உரிமைகள் நிலவரம் இவற்றையெல்லாம் கண்டு மனிதாபிமான உதவிகள் விஷயத்தில் மாற்றங்கள் வர தாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வரத்தான் செய்கின்றன.
ஐ.நா.மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கை இந்த வருடம் ஐ.நா. முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியில் சர்வதேச கொடையாளிகளிடம் இருந்து நான்கில் ஒரு பங்கு நிதிதான் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
*****************

மறுக்கும் மாலைதீவு
நியுயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து மாலைதீவு உதவி அதிபர் மொகமட் வாகிட் ஹசன் கலந்துரையாடியதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை மாலைதீவு உதவி அதிபரின் செயலகம் நிராகரித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது சிறிலங்கா அதிபரை மாலைதீவு உதவி அதிபர் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதஉரிமை நிலைமைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக மாலைதீவு உதவி அதிபர், சிறிலங்கா அதிபருக்கு வாக்குறுதி அளித்ததாக ஹவீரு என்ற ஊடகத்துக்கு சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாலைதீவு உதவி அதிபரின் செயலகம், மகிந்த ராஜபக்சவை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாகவும், அதில் வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் ஐ.நாவில் வடக்கு, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து எதுவுமே பேசப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் பரப்புரைகளில் மாலைதீவு அதிபர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

நோர்வையை கண்டிக்கும் ஸ்ரீலங்கா
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை ஒளிபரப்ப நோர்வேயின் என்ஆர்கே தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த ஆவணப்படம் முற்றிலும பக்கச்சார்பானது என்றும், இதில் சிறிலங்கா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேக்கான சிறிலங்கா தூதுவர் றொட்னி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகைய ஆவணப்படத்தை ஒளிபரப்புவது அதனைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகள் அடங்கிய காணொலியை ஒளிபரப்புவதன் மூலம் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மட்டுமன்றி அதன் பணியாளர்களுக்கும் நோர்வேயில் வசிக்கும் சிறிலங்கர்கள் அனைவருக்குமே பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவது குறித்து கவனம் செலுத்துமாறும் என்ஆர்கே தொலைக்காட்சியிடம் சிறிலங்கா தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் சிறிலங்கா துதரகத்தின் கடும் எதிர்ப்பை என்ஆர்கே தொலைக்காட்சி கண்டுகொள்ளவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக்களை புறக்கணித்து சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை என்ஆர்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
*****************