Saturday 1 October 2011

செய்திகள் 01/10


அழுகின்றது ஸ்ரீலங்கா?
கனடாவில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கிக்காக சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவை விலையாகக் கொடுக்கவும் கனடா தயாராகி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கனடா வலியுறுத்தி வருகிறது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட், சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிலும் சிறிலங்கா விவகாரத்தை கனடா பிரச்சினையாக்கும் என்று கருதப்படுகிறது.
அத்துடன், கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜோன் பயார்ட், சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கடுமையான விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையிலேயே அங்குள்ள தமிழர்களின் வாக்குகளுக்காக சிறிலங்காவின் இராஜதந்திர உறவையும் இழக்க கனடா தயாராகி விட்டதாக சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவில் பெருமளவு தமிழர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டுள்ளதால், அவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே கனேடிய அரசாங்கம் செயற்படுவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான கனடாவின் நடவடிக்கைகள் கொழும்பை பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாகவும், கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன
*******************

கனடாவின் மனித உரிமை அக்கறை தொடரும்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களின் பொறுப்புடைமை தொடர்பிலும், தமிழ் மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் மிக ஆர்வத்துடன் அவதானித்து வருவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தாம் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் மனித உரிமை தொடர்பில் பேசுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் கனடா தயாராகவே உள்ளது என அவர் கனேடிய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குறித்து இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளை கைதுசெய்து சர்வதேச நீதிமன்றில் ஆஜர் செய்யும் வரை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்குமாறு கனேடிய பிரதமரிடம் அந்நாட்டு பாராளுன்றில் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கனேடிய எதிர்க்கட்சித் தலைவரான ஜிம் கரியஜியானி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீவ் ஹாபரிம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் இது குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வினவியபோது, பொறுப்புடன் செயற்படாதபோது 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய கூட்டத்தொடரில் பங்குபற்றுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க நேரிடும் என கனேடிய பிரமதர் அறிவித்திருந்ததாக கூறினார்.
அது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டினை அந்த நாட்டிலுள்ள தூதுவர் கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு மிகத் தெளிவான முறையில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விடயங்களை எதிர்கொள்ளும் சக்தி இலங்கைக்கு உள்ளதுடன் எவ்வித பிரச்சினைகள் ஏற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடத்தப்படுவது தொடர்பில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றமை தொடர்பில் இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.
அனைத்து நாடுகளும் இணங்கியே இலங்கைக்கு 2013 ஆம் ஆண்டை வழங்கியுள்ளதுடன் அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கான இயலுமை கனடாவுக்கு இருப்பதாக தெரியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் முதல் நான்கு இலட்சம் வரையான புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் கனடாவில் உள்ளதுடன் அந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்த அதிகமானோர் வாழ்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
*******************

ஐநா அறிக்கை குறித்து பேச முற்படும் ஸ்ரீலங்கா
ஐநா அறிக்கை தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை கவுன்ஸிலில் உத்தியோகப் பற்றற்ற முறையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராயப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஐநா அறிக்கையையும் ஒப்பீடு செய்து கருத்துக்களை வெளியிட மனித உரிமைக் கவுன்ஸில் உத்தேசித்துள்ளது.
இதேவேளை, மனித உரிமைக் கவுன்ஸில் அமர்வுகள் நடைபெறும் காலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை முறியடித்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலிப் பிரச்சாரங்களினால் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்ட தரப்பினருக்கு, நாட்டின் உண்மை நிலைமை பற்றி விளக்கமளிப்பது கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
*******************


தாழ்வு மனப்பான்மை கொண்ட மகிந்த!
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச குறுகிய மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டவர் என்று சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸ் உடனான சந்திப்பொன்றின் போதே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச இதனைத் தெரிவித்திருந்ததாக பற்றீசியா புட்டெனிஸ் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியிருந்த ரகசிய கேபிள் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது தொடர்பான தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ செல்வாக்கானதும், மக்களால் மதிக்கப்படுவதுமான பரம்பரையொன்றிலிருந்து அரசியலுக்கு வராதவர் என்பதன் காரணமாக அவருக்குள் தாழ்வுமனப்பான்மையொன்று நிலவுவதாகவும், அத்துடன் அவர் கல்விமான்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சந்தேக மனப்பான்மை கொண்டவராக இருப்பதாகவும் அந்தச் சந்திப்பின்போது சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்போது இலங்கையின் ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது
*******************

வழக்கிற்கு அஞ்சும் அதிகார வர்க்கம்
ஐ.நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கான அனைத்து விடயங்களையும் அரசாங்கம் கையாளும் என முன்னாள் சட்டமா அதிபரான மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும் அதனை முகங்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
*******************

தொடரும் ஆபத்து!
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவர முயற்சித்த தீர்மானங்களைப் பாரிய சவால்களுக்கு மத்தியில் தோல்வியடையச் செய்ததாகவும், இருப்பினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகள் அச்சுறுத்தலானதும் ஆபத்தானதுமாகவே அமையும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கனடா மிக தீவிரமாக இலங்கைக்கு எதிராக செயற்பட்டது.
அதேபோன்று ஐ.நா தலைமையகமும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தலைமைத்துவமும் இணைந்து இலங்கையை சிறைப்படுத்த முயற்சித்தது.
ஆனால், இந்தியா உட்பட பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கே ஆதரவளித்திருந்தன எனத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இராஜதந்திர உத்திகளைக் கையாள்வதோடு உள்நாட்டில் மனித உரிமைகள் மற்றும் வடக்கு பிரச்சினைகளின் தீர்வுகளில் மேம்பாட்டை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் கூறினார்.
ஜெனீவா மனித உரிமை அமர்வுகளில் பங்கு கொள்ளவந்திருந்த 29 நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கியதாகவும் தெரிவித்தார்.
தற்போதைக்கு நிலைமை ஓரளவுக்கு சுமுகமாகக் காணப்பட்டாலும் மார்ச் அமர்வுகள் பெரும் சவாலாகவே அமையும்.
பாகிஸ்தான், கியூபா, நைஜீரியா, மலேசியா, பங்களதேஷ், பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் குரல் கொடுத்தன எனவும் தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. இலங்கையை முட்டாளாக்க நினைப்பது அந்நாடுகளின் முட்டாள் தனம் என்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டள்ளார்.
*******************

விடுதலையை வியாபாரமாக்கும் ஸ்ரீலங்கா
அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அலரிமாளிகையில் வைத்து நேற்று ஆயிரத்து 800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங்கம், இப்போது வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முன்னிலையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேற்றைய நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வின் போது தொழிற்பயிற்சிகளை நிறைவு முன்னாள் போராளிகளுக்கான சான்றிதழ்களையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளே வழங்கியுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்கும், இந்தமாத இறுதியில் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தவிர்ப்பதற்குமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையோடு அனைத்துலக இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளன.
*******************

சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் விடுதலை
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த ஆயிரத்து 800 முன்னாள் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று விடுதலை செய்துள்ளது.
சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அலரி மாளிகையில் பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகள் முன்னிலையில், ஆயிரத்து 800 முன்னாள் போராளிகளையும் விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் முன்னாள் போராளிகளின் இறுதி அணி இதுவே என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாம்களில் மேலும் நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
இந்தநிலையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் இறுதி அணியே நேற்று விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னமும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மத்தியில் கவலையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த சுமார் 12ஆயிரம் போராளிகளில் சுமார் 800 வரையானோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.
கடந்தவாரம் நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 2ஆயிரம் முன்னாள் போராளிகள் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக கூறியிருந்தார்.
இதனால் புனர்வாழ்வு அளிக்கப்படும் ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் மீதும் சிறிலங்கா அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
*******************