Monday 3 October 2011

செய்திகள் 02/10


பிற்போடப்பட்ட சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேச்சுக்களில் பங்கேற்கும் அரச தரப்பு பிரதிநிதிகள் எதிர்வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போட்டிருப்பதாகவும் அது தொடர்பான அறிவித்தல் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டிருப்பதை அரசதரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த சுற்றுப்பேச்சுக்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளதாக கேள்வியுற்றதாகவும், ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ள
*******************

நாடகம்!
அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் அலரிமாளிகையில் வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, 1800 முன்னாள் போராளிகளும் மீண்டும் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் போராளிகளை சிறிலங்காஅதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் விடுதலை செய்திருந்தார்.
முன்னாள் போராளிகளை விடுவிக்கும் இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 30 முன்னாள் போராளிகள் மட்டுமே பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.
அதற்கென 30 பெற்றோர் மட்டும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் சிறிலங்கா அதிபரால் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு சிறிலங்கா அரச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் அவர்கள் மீண்டும் பேருந்துகளில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பிள்ளைகளைப் பொறுப்பேற்க கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 30 பெற்றோர்களும் பெரும் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதேவேளை, கொழும்பில் நடைபெற்றது ஒரு அதிகாரபூர்வ விடுவிப்பு நிகழ்வே என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு அமைச்சின் மூத்த ஆலோசகர் சதீஸ்குமார் கூறியுள்ளார்.
விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அனைவரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் பயற்சி பெற்றதற்கான ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்தச் சான்றிதழ்கள் அதிகாரிகளினால் தயார் செய்யப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*******************

பயிரை மேய்ந்த வேலி?
யாழ்.காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் காவல்துறையினருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த காவல்துறை உயரதிகாரி சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் காவல்துறையினருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.காவல் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது.
வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் காவல்துறையினருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் காவல்துறை அதிகாரி தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெண் காவல்துறை அதிகாரியின் பெற்றோர் யாழ்.பிரதிக் காவல்துறைமா அதிபர் நீல் தலுவத்தயிடம் முறையிட்டதை அடுத்து குறித்த காவல்துறை உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிகாரியின் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட பெண் காவல்துறை அதிகாரி தற்பொது காவல்துறை உத்தியோகத்தை விட்டு விலகியுள்ளதாக தெரியவருகிறது.
*******************

ஐநாவுக்காக அழுகிறது சிங்களம்!
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு பிளவுபடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரிவிர பத்திரிகையின் அரசியல் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக கூடுதலாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உறுப்பு நாடுகள் பிளவடைந்து வேறும் ஓர் அமைப்பு உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*******************

மூன்றாம் தரப்பே முடிந்து விட்டது - ஜே.வி.பி
ஜே.வி.பி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பாரிய குழப்ப நிலைமைகளுக்கும் மூன்றாம் தரப்பினருக்கும் இடையில் தொடர்பு காணப்படலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை குறித்து ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள், குறிப்பாக அரசாங்க ஊடகங்களில் அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் விவகாரங்களில் காவல்துறையினர் மிகவும் நெகிழ்வுப் போக்குடன் செயற்படுகின்றனர்.
காலாணித்துவம், முதலாளித்துவம் போன்றவற்றுக்கு எதிரான ஜே.வி.பி.யின் முன்நகர்வுகளை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் மீள இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கிய சிலரைத் தவிர ஏனைய அனைவரும் மீளவும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
*******************

கவலைப்படும் தமாரா?
18 வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நிறைவடைந்தது.
இதன்போது வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகதன்மை குறித்து இலங்கையின் பிரதிநிதி உரையாற்றியுள்ளார்.
இலங்கைக்கான ஜெனீவாவின் நிரந்தர பிரதிநிதி தாமரா குணநாயகம் உரையாற்றுகையில், மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் என்பன தமது நிதி மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கைக்கு அறிவிக்காமல் அனுப்பியமையை அடுத்தே இந்த விமர்சன கருத்தை இலங்கையின் பிரதிநிதி வெளியிட்டுள்ளார்.
*******************

மீண்டும் பதவி மாற்றங்கள்
இலங்கை அரசாங்க அமைச்சரவை, அடுத்த வருட ஆரம்பத்தில் மீளமைக்கப்படவுள்ளது.
இதன் போது சில அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து அகற்றப்படவுள்ளனர்.
அரசுத் தலைவர் சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் தமது பொறுப்புகளில் தற்போது திருப்தி கொள்ளாத பல அமைச்சர்களை திருப்தி கொள்ளவைக்கவும் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது பாதுகாப்பு, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் நிதி போன்ற துறைகளுக்கான அமைச்சை அரசுத் தலைவர் கொண்டிருக்கிறார்.
பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித்துறையை அவருடைய சகோதரர் பசில் ராஜபக்ச கொண்டிருக்கிறார்.
இலங்கையில் தற்போதைய நிலையில் 59 அமைச்சர்களும் 33 பிரதியமைச்சர்களும் பதவியில் உள்ளனர்.
*******************