Friday 14 October 2011

செய்திகள் 14/10


முடிவுக்கு வரும் மாவீரர் தின சர்ச்சை

விடுதலைப் போரில் ஆகுதியான மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதும் அவர்களை போற்றி வணக்குவதும் ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும்.
இந்தக் கடமையை ஆண்டு தோறும் உலகத் தமிழினம் தவறாமல் செய்து வருகின்றது.
தற்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு தமிழீழ தேசம் அன்னியப் படைகளால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள சூழலில், தாயகத்தில் மக்கள் தமது மனங்களில் மாவீரர் வணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் புலம்பெயர் தேசங்களில் மக்களால் நடத்தப்படும் மாவீரர் நிகழ்வுகளே முக்கியத்துவம் பெறுகின்றது.
இவற்றைக் குழப்ப பொது எதிரிகள் பலவிதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் சிலர் இன்று அமைச்சர், முதலமைச்சர், அரச தலைவரின் ஆலோசகர் என்ற பதவிகளுக்காககவும், சுகபோகங்களுக்காகவும், பேதை, போதைகளுக்காகவும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல தேசியத் தலைவரினதும், தேசியத்தினதும் பெயரை உச்சரித்தபடி புலம்பெயர் நாடுகளில் தாமே விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ பிரதிநிதிகள் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மாவீரர் தின நிகழ்வுகள் என்பது தமிழீழத்தை, தமிழீழ விடுதலையை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, மாவீரரை நேசிக்கும் அனைத்து மக்களுக்குமான நிகழ்வாகும்.
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாத்திரமன்றி இனவிடுதலையை விரும்பும், மாவீரர்களின் தியகத்தை மதிக்கும் அனைத்து தேசங்களிலும் இந்த நிகழ்வுகள் தற்போது நடத்தப்படுகின்றன.
தென்னாபிரிக்கா, மியன்மார், மொறிஸியஸ், ரஷ்யா, மலேசியா இந்தியா என உலக நாடுகளில் தமிழின உணர்வாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
இது தமிழின உணர்வாளர்களின் இன உணர்வையும், தமிழீழ விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு செலுத்தும் மரியாதையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தாமே விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பிரிதிநிதிகள், தமக்கே மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தும் உரிமை உண்டு எனத் தெரிவித்து உரிமை கோரும் தகுதியும், அடிப்படையும் நியாயமும் எவருக்கும் கிடையாது.
கடந்த காலங்களில் நடத்தியவர்களால் கணக்கறிக்கைகள் காண்பிக்கப்படாமல் நிதி மோசடிகள் இடம்பெற்றதனாலேயே இந்த குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டு மக்களால் உருவாக்கப்பட்ட தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு ஏற்கெனவே மக்களால் அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இனியும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த முற்படாமல் நடக்கவிருக்கும் தேசிய மாவீரர் நிகழ்வுகளை குழப்பாமல், தெளிவான தேசிய சிந்தனையில் இருக்கும் மக்களை ஆத்திரமடைய வைக்காமல், ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் மீண்டும் ஆணித்தரமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த கால மாவீரர் தின நிகழ்வுகளின் கணக்கு விபரங்களை சம்பந்தப்பட்டவாகள் வெளிப்படுத்தி தமது நியாயத்தையும், உண்மைத் தன்மையையும் நிலை நாட்ட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
அதுவரையில் அவர்களின் செயற்பாடுகள் மீதான மக்களின் சந்தேகங்கள் தொடரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*****************

வாக்களார் பதிவு
கடந்த காலத்தில் நிலவிய யுத்தசூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் வாக்காளர் இடாப்பில் இடம்பெறாதவர்களைப் பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டம் தேர்தல் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழ அகதிகளை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து இதுவரை எந்த வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பில் அதிகாரிகள் எவரும் இதுவரை அக்கறை கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களின் பெயர் இந்த ஆண்டு வாக்காளர் இடாப்பில் இடம் பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தினால் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்காளர்களைப் பதிவு செய்யும் விசேட பணிகள் இடம் பெற்று வருகின்றன.
இதன் மூலம் யுத்தத்தினால் இந்த இரண்டு பிரதேசங்களையும் விட்டு வெளியேறியவர்கள் இந்த விசேட திட்டத்தின் கீழ் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இதனை விட இலங்கையைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்கு வாக்காளராகப் பதிய விரும்பினால் தமது கடவுச்சீட்டு இலக்கத்தைக் கொடுத்துப் பதிவை மேற்கொள்ள முடியும்.
ஆனால் இந்தியாவில் உள்ள 2 லட்சம் ஈழ கைதிகள் இந்தப் பதிவை மேற்கொள் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அவர்களில் பலர் இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக கப்பல் மூலமாகவே இந்தியாவுக்கச் சென்றனர்.
இதனால் இவர்கள் அகதி முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புதிய விண்ணப்பப்படிவம் மூலம் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் தேர்தல் திணைக்களத்தில் தமிழ்க்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பின்போது இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளையும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களையும் வாக்காளராகப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
அதேவேளை வடபகுதியை விட்டு வெளியேறியுள்ள முஸ்ஸிம் மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் வாக்காளராகப் பதிய வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்திருந்தது.
இதனடிப்படையிலேயே தேர்தல் ஆணையாளரினால் விசேட படிவம் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களும், நாட்டுக்குள் இடம் பெயர்ந்து உள்ளவர்களும் வாக்காளராகப் பதிய முடியும்.
ஆயினும் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அவ்வாறு பதிவு செய்ய முடியாது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரும், தமிழ் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
*****************

ஐநாவுக்கு மேன்முறையிடும் த.தே.கூ
அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவசர காலச் சட்டத்தின் கீழ் இருந்த ஐந்து விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டன.
இதனை எதிர்த்துத் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை சேனாதிராசா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்றுமுன்தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை நிராகரித்தனர்.
குறித்த விதிமுறைகள் நிர்வாகத்திற்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத் திற்கோ உட்பட்டவை அல்லவென பிரதி சொலி சிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னான்டோ தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர்.
இவ்வாறு தமது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது.
தமது தரப்பு வாதத்தைச் சொல்வதற்கு இடமளிக்கப்படாததுடன் நியாயம் பெறக் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று கருதும் கூட்டமைப்பு அதற்கு எதிராகவே ஐ.நாவை நாட உள்ளது.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அதற்கு எதிராகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதே ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் பணியாகும்.
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் சார்பில் அப்போதைய அரசுத் தலைவர் சந்திரிகா குமாரணதுங்க கையெழுத்திட்டுள்ளார்.
எனவே அந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு இலங்கை நடக்கவேண்டும்.
இந்த உடன்படிக்கையானது ஐ.நாவின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வரையறைகளைப் பாதுகாப்பது.
இதில் கையெழுத்திட்டுள்ள எந்தவொரு நாட்டின் குடிமகனோ அல்லது அரசுகளோ உடன்படிக்கையின் சரத்துக்கறை மீறினால் அதற்கு எதிராக முறையிடமுடியும்.
ராவய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் நல்லரத்தினம் சிங்கராஜர் என்ற நபருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும் ஏற்கனவே இந்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் முறையிடப்பட்டிருந்தது.
அதனை விசாரித்த குழு உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்புக்கள் தவறானவை என்று அறிவித்ததுடன் 3 மாதகாலத்துக்குள் அந்த வழக்குகளை விசாரித்து உடனடியாக சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் முடிவை இலங்கை செயற்படுத்தவில்லை.
அதனைச் செயற்படுத்தாதமை குறித்து ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, குறித்த சர்வதேச உடன்படிக்கையில் தனிநபரான சந்திரிகா குமாரதுங்க கையெழுத்திட்டமை இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார்.
அவர் கையெழுத்திட்டதை ஏற்றுக்கொண்டு அந்த உடன்படிக்கையை இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மட்டுமே அது நாட்டுக்குள் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தமது மனு மீதான தீர்ப்பை எதிர்த்து ஐ.நா. மனித உரிமைகள் குழுவிடம் தமிழ்க் கூட்டமைப்பு முறையிட உள்ளது
*****************

சீன இராணுவ ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான உறவுகளை பலப்படுத்த சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத் தபளதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து உரையாடிய போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் க்யான் லி{ஹ, வெளிவிவகார பிரதான அலுவலகம், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றுள்ள க்யான் லி{ஹ இலங்கை இராணுவத்தினருக்கு தொழில்முறை பயிற்சி, உடற்பயிற்சி என்பவற்றை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 இலங்கை படையினருக்கு கண்ணிவெடி அகற்றப் பயன்படும் கவசங்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.
இதேவேளை கண்ணிவெடி அகற்றும் படையினர் சிலர் சீனாவில் பயிற்சி பெற்றுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தாம் உதவியதாகவும் தொடர்ந்தும் அவ்வுதவிகளை வழங்கத் தயார் எனவும் சீன மக்கள் விடுதலை இராணுவ மேஜர் ஜெனரல் க்யான் லி{ஹ கூறியுள்ளார்.
இதேவேளை, சீனாவின் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் சீனா இலங்கையுடன் கலந்துரையாடியுள்ளது.
*****************

நாடாளுமன்ற விவாதம்
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்கின்றனர்.
அவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முழு நேர விவாதத்திற்கான பிரேரணையை கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்.
அதன்போது தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படும் என்பதுடன் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் வடக்கில் இடம்பெற்று வரும் காணிப்பதிவு தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தினையும் நாடவுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
*****************

ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மகிந்த
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கொண்ட போருக்கு தானே பொறுப்பாளி என்றும், சிறிலங்கா அதிபராக இருக்கும் வரை தன்னை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக இருக்கும் இராஜதந்திரிக்கு எதிராக, அனைத்துலக சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் ரமேஸ் என்ற விடுதலைப் புலிகளின் தளபதியின் மனைவி எனவும் இந்தப் பெண், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்து போராளியாக போரில் ஈடுபட்ட போது எடுத்த படங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் தான் தங்கள் தூதுவருக்கு எதிராக மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டையும், போர்க்குற்றங்களைப் புரிந்ததாகவும் குற்றம்சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போர் முடிவடைந்த இறுதி நாட்களில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் தானே பொறுப்பாளி எனவும் தெரிவித்தார்.
தாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை. விரும்பினால் தனக்கு எதிராகவும் வழக்கு தொடரட்டும். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் தனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்ட செய்திகளை தலைப்புச் செய்தியாக வெளியிட சில நாளிதழ்களுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கியுள்ளனர் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
தற்போது மகிந்த ராஜபக்கச வெளியட்ட கருத்துக்கள் அவரின் கற்ற ஓப்புதல் வாக்கு மூலங்களாக கொள்ளப்படலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*****************

சந்தேகநபர்கள் நாடு கடத்தல்
சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் மும்பையில் இருந்து நேற்று அதிகாலை கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 8ம் நாள் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை அடுத்து 32 வயதான ஜெயநாத் எனப்படும் சிறிநாயகி சமிந்த ரவி, 28 வயதான மொகமட் சர்பாரர் சிப்லி ஆகிய இரு சந்தேகநபர்களும், கடந்த 9ம் நாள் மும்பைக்குத் தப்பிச் சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரையும் கைது செய்து நாடுகடத்தும்படி சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் இந்தியாவிடம் கேட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 11ம் நாள் மும்பையில் இந்திய பாதுகாப்பு முகவர்கள் இவர்களைக் கண்டறிந்து நெருக்கமாக கண்காணித்து வந்தனர்.
பின்னர் இவர்களின் இந்திய நுழைவிசைவு ரத்துச் செய்யப்பட்டு, நுழைவிசைவு இல்லாமல் தங்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகளால் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று அதிகாலை 2.10 மணியளவில் ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஜெயநாத் என்பவரிடம் இருந்து இரண்டு சிறிலங்கா கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் ஒரு நடவடிக்கையாகவே, இந்த நாடுகடத்தல் இடம்பெற்றதாக இந்திய அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, நாடுகடத்தப்பட்ட இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகாக்கள் என்று சிறிலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
*****************