Wednesday 5 October 2011

செய்திகள் 05/10


பேச்சு எப்போது?
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேசிய பின்னரே திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுள்ளன.
எதிர்வரும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ள 12 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இனப்பிரச்சினை தீர்வு மற்றும் மிக முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
********************

அழைப்பாணையை ஏற்க மறுக்கும் ஸ்ரீலங்கா அரசு
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹேக் சேர்விஸ் என்னும் பிரகடனத்தின் அடிபப்டையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் நீதி அமைச்சு, அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த பதிலை வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதனால் அமெரிக்காவில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுத் தலைவர்க்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கும் நடவடிக்கை நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
********************

சிகிச்சை பெற முடியாத மகிந்த
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அண்மையில் நியுயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹொஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்று ஆங்கில இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹொஸ்டன் மருத்துவமனையில் சிறிலங்கா அதிபர் சிகிச்சை பெறச் செல்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்ததை அடுத்து, இதுதொடர்பாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முறையிட்டுள்ளார்.
அதற்கு, நியுயோர்க்கில் மட்டுமே சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளதாகவும், அதற்கு வெளியே செல்லும் போது ஏற்படக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அமெரிக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று பிளேக் பதிலளித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து பௌத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த சிறிலங்கா அதிபரிடம் நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க சாதாரண உடையில் அமெரிக்க அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மகிந்த ராஜபக்சவினால் அங்கு செல்ல முடியவில்லை என்றும் ஆங்கில இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
********************

இலஞ்சத்தில் திளைக்கும் ஸ்ரீலங்கா
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் காவல்துறை உத்தியோகத்தர் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்ற விசாரணைப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரி அனுர டி சில்வா என்பவரே இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரணை செய்வதற்காக குறித்த அதிகாரி இவ்வாறு லஞ்சம் கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
காணி பிணக்கு ஒன்றை தீர்த்து வைப்பதற்கு லஞ்சமாக ஒரு பகுதி காணியை பெண் ஒருவரிடம் குறித்த அதிகாரி கோரியதாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை தாக்கல் செய்த பெண்ணிடம் மீண்டும் வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான், காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 13ம் திகதி இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
********************

நிவைடையும் தேர்தல் பிரச்சாரம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடைகின்றன.
அதேசமயம், வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பேரப்பேச்சு களில் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதனால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் சிலர் அரசதரப்பு உயர் மட்டத்துடன் நேற்று இரகசிய சந்திப்புப் பேச்சுகளில் ஈடுபட்டனர் எனவும் அதேபோல், அரச தரப்பு வேட்பாளர்கள் சிலர் ஐ.தே.க. உயர்மட்டத்துடன் இரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தேர்தல் நெருங்கி வரும் இறுதி நாட்களில் வேட்பாளர்களிடையே கட்சித் தாவல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
17 மாநகரசபைகள், ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகள் உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்காகப் போட்டியிடுகின்ற பிரதான ஐந்து கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி வேகத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.ஜே.எம்.முஸம்மிலும், ஜே.வி.பி. சார்பில் சுனில் வட்டகலவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சபீக் ரஜாப்தீனும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனும் போட்டியிடுகின்றனர்.
********************

தேர்தல் கண்காணிப்பு
எதிர்வரும் 08ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தேர்தல்கள் செயலகமும் பப்ரல் அமைப்பும் இணைந்து முனனெடுத்து வருகின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் பணிப்புரைக்கமைய தேர்தர்கள் செயலகத்தின் உயரதிகாரிகள் தேர்தல் நடபெறும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென விஜயம் மேற்கொண்டிருப்பதாக தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம். எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரதி ஆணையாளர் கல்முனைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
அவர் அங்கிருந்து பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்களின் தேர்தல் நடைnறும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணித்து அங்கு நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளார்.
பப்ரல் அமைப்பு வேட்பு மனு தாக்தகல் செய்யப்பட்ட தினம் தொடக்கம் கண்காணிப்பின் ஈடுபட்டு வருகிறது.
900 கண்காணிப்பாளர்களையும் 30 இற்கு மேற்பட்ட வாகனங்களை தேர்தல் தினத்தன்று ரோந்தில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை இந்திய தேர்தல் ஆணையகத்திலிருந்து ஆறு உயரதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று இலங்கை சென்றுள்ளது.
இக்குழு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காகவே இலங்கை வந்திருப்பதாக நேற்று பிரதி ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார்.
இவர்களில் மூவர் அடங்கிய குழு கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் ஏனைய மூவரைக் கொண்ட குழு மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்கும் சென்று தமது ஆராய்வினை மேற்கொள்ளவுள்ளது.
********************

புதிய கட்சி
ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெய்யான இடதுசாரி கொள்கைகளை உடைய ஓர் கட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி கிளர்ச்சி குழுவின் உறுப்பினர் சேனாதீர குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜே.வி.பி இடதுசாரி கோட்பாடுகளை விட்டு விலகிச் செயற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இடதுசாரி கட்சியொன்றின் தேவை விரவி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான கிளர்ச்சியாளர்களை தேடி தமது கட்சியுடன் ஒன்றிணைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி.யில் அங்கம் வகித்த பல்வேறு தரப்பினர் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் தமது தரப்பினருக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முஸ்லிம் சிரேஸ்ட தலைவர்கள் ஜே.வி.பி.யில் அங்கம் வகித்தனர், ரஞ்சிதம், நிஷ்மி போன்றவர்களை குறிப்பிட்டுக் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சி ஓர் இனவாத கட்சியாக செயற்படவில்லை, சிலர் தற்போது இனவாதம் பேசி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
********************

புதிய புலனாய்வு பணியாளர்கள்
அரச புலனாய்வு தகவல் பிரிவிற்கு புதிதாக 15 பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெற்றிடங்களுக்காக சுமார் 25ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியமனம் வழங்கப்பட்டுள்ள 15 பட்டதாரிகளுக்கும் களுத்துறை காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் ஓராண்டு காலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
உச்ச அளவிலான தகுதியுடைய பெரும் எண்ணிக்கையிலானோர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், அவர்களில் மிகவும் தகுதியானவாகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
********************

இந்திய வெளிவிவகார செயலரின் விஜயம்
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்ன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை செல்கின்றார்.
அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார் என்று தெரிகிறது.
இந்தப் பயணத்தின் போது, அரசுத் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர் சந்தித்து அரசியல் பேச்சு மற்றும் தீர்வு குறித்துப்பேச உள்ளார்.
வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வது இதுவே முதற்தடவையாகும்.
மாத்தாயின் பயணம் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது என்று புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தும் மாத்தாய் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
********************

விதிகளை மீறும் அரசு
அலரி மாளிகையும், கண்டி, நுவரெலியா போன்ற இடங்களிலுள்ள அரசுத் தலைவர் மாளிகைகளும் இன்று கட்சி தேர்தல் பிரசார நிலையங்களாக மாறியுள்ளதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர், காவல்துறை தரப்பினரிடம் முறையிடப்பட்ட போதிலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறி வருவதாகவும் ஐ.தே.க.சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் இருந்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.
தாபனக்கோவை சட்டத்தின் பிரகாரம் அமைச்சுச் செயலாளர்கள், அமைச்சு ஊழியர்கள், உள்ளூராட்சிச் சபை ஊழியர்கள், கல்விசார் ஊழியர்கள் எவரும் அரசியலில் ஈடுபடமுடியாது.
எனினும் கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களின் போதும், இம்முறை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலிலும் ஆளும்தரப்பின் தேர்தல் பிரசாரங்களில் இவர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்புச் செயலாளர் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளரின் தேர்தல் சந்திப்புக்களில் நேரடியாக பங்கேற்று உரையாற்றி வருகின்றனர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
********************