Tuesday 4 October 2011

செய்திகள் 04/10


நீதிபதியை மாற்றக் கோரிக்கை
நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையில் இருந்து நீதிபதிகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐந்து தமிழர்களின் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி விக்டர் கொப்பே, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டே குறித்த ஐவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஐவருக்கும் நெதர்லாந்து சட்டப்படி 10- 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாதிகள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு நியாயமற்ற வகையில் முன்னெடுத்து செல்லப்படுவதாக பிரதிவாதிகளின் சட்டவாதி கொப்பே குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே விசேட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹேக் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் அந்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அதற்காக புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கொப்பே கோரியுள்ளார்.
இதற்கமைய நீதிபதிகள் குறித்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டால் புதிய நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணை புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
****************

தமிழர்களை நாடு கடத்த முனையும் சுவீடன்
சுவீடனில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
போரைக் காரணம் காட்டி சட்டவிரோதமான முறையில் பல இலங்கையர்கள் சுவீடனில் அடைக்கலம் கோரியுள்ளனர் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அனுப்பி வைக்க சுவீடன் அரசாங்கம் நடவடிக்க எடுத்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சமாதானமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் அகதிகளை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் சுவீடன் அரசுக்கு இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்க தமிழர் அமைப்புக்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
****************

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தையும் புனர்நிர்மாணத்தையும் வலியுறுத்தும் ஜப்பான்
இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாணப்பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று ஜப்பான் கோரியுள்ளது.
ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் முரnழை வுயமயாயளாi இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கில் கண்ணிவெடி அகற்றலுக்காக 780 ஆயிரம் டொலர்களை வழங்கிய பின்னர் அவர் இந்த கோரிக்கையை நேற்று விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் கடந்த மூன்று வருடங்களில் அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இலங்கை அரசாங்கம் இந்தப் பிரதேசங்களில் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
2003 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றலுக்காக 21.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையின் மேம்படுத்தல், வவுனியா- கிளிநொச்சி மின்சார இணைப்புகள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளவர்களின் புனர்நலத்திட்டங்கள் என்பவற்றுக்கும் ஜப்பான் உதவியளித்துள்ளது.
****************

அரசியல் மயப்படுத்தப்பட்ட காவல்துறை - காலம் கடந்து கண்டுபிடித்த ஐ.தே.க
நாட்டின் காவல்துறை சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக காவல்துறைத் திணைக்களத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வலுவிழந்துள்ளது.
நாட்டின் பல அரசாங்க நிறுவனங்களை மக்கள் சந்தேகமாகவே பார்க்கின்றனர்.
மொரட்டுவையில் காவல்துறை உத்தியோகத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை, தொம்பே பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்மை போன்ற சம்பவங்கள் காவல்துறை சேவை அபாயகரமான நிலையை நோக்கி நகர்வதனை பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில செல்வாக்கானவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய நிர்பந்தம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
அடக்குமுறைச் சம்பவங்களின் போது காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றனர்.
சுயாதீனமான காவல்துறை சேவையொன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
****************

வாக்காளராக வெளிநாட்டவர்களும் பதியலாம்
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிய விரும்பினால் தமது உறவினர்கள் ஊடாக கிராம சேவையாளர்களிடமோ அல்லது தேர்தல் திணைக்களத்திடமோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி வெளிநாட்டில் உள்ளவர்களும் தம்மை வாக்காளர்களாகப் பதிய முடியும்.
குடும்பமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தமது உறவினர்கள் ஊடாக இங்கே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம்.
இதற்கான விசேட விண்ணப்பப் படிவங்கள் கிராம சேவையாளரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களது பெயர்களைப் பதிவு செய்து கொடுக்கும்போது கட்டாயமாக அவர்களது கடவுச் சீட்டு இலக்கத்தை குறிப்பிடுதல் வேண்டும்.
இதேபோன்று குடும்பத்தில் ஏதாவது ஓர் அங்கத்தவர் வெளிநாட்டில் இருப்பின் அவரையும் வாக்காளராகப் பதிய முடியும்.
குறித்த விசேட விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
****************

ஸ்ரீலங்காவுக்கு பயணமாகும் இந்திய வெளிவிவகார செயலாளர்
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 8ம் நாள் கொழும்பு செல்லும் அவர், மறுநாள் நிலைமைகளை அவதானிப்பதுடன், இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இந்திய சந்தித்துப் பேசுவதற்கு வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் திட்டமிட்டுள்ளார்.
ரஞ்சன் மத்தாய் இந்திய வெளிவிவகாரச் செயலராக அண்மையில் பொறுப்பேற்ற பின்னர் முதல்தடவையாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************

எண்ணெய் வளத்தை தடுக்க முனைந்த நோர்வே - குற்றம் சாட்டும் ஸ்ரீலங்கா
எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நோர்வே, புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த குற்றம்சாட்டியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல, மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப் படுத்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின்உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலாவது எண்ணெய் கிணறு மூலம் ஹைட்ரோ கார்பன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாயுவை கடல் மட்டத்துக்கு மேல் கொண்டு வந்தால் மின்உற்பத்திக்காக பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் மிகக்குறைந்த செலவுடன் மின்உற்பத்தி செய்ய முடியும் என்றும் சுசில் பிறேம் ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயு அல்ல என்றும், இந்த இயற்கை எரிவாயுவை திரவநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின்உற்பத்தித் தேவையில் 30 வீதத்தை பூர்த்தி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 354 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை ஓரிரண்டு நாட்களில் மேலே கொண்டு வந்துவிட முடியாது என்றும் கூறியுள்ள சுசில் பிறேம் ஜெயந்த, கடல் மட்டத்தில் தளம் அமைத்து எரிவாயுவை திரவநிலைக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
****************

படைகளின் அனுபவப் பகிர்வை தொடரும் ஸ்ரீலங்காவும் இந்தியாவும்
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் மேஜர் ஜெனரல் பி.கே.கோஸ்வாமி தலைமையில் 15 படைஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா சென்றுள்ளது.
இந்தக் குழுவுக்குத் தலைமையேற்று சென்றுள்ள மேஜர் ஜெனரல் பி.கே.கோஸ்வாமி நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியையும், கடற்படைத் தளபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இந்தக் குழுவினருக்கு சிறிலங்காப் படைகளின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கல்வி கற்கும் இந்திய, நேபாள, அமெரிக்க, வியட்னாமிய படை அதிகாரிகள் 15 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுள்ளனர்.
இந்தக் குழுவில் ஒரு மேஜர் ஜெனரல், ஏழு பிரிகேடியர் ஜெனரல்கள் ஒரு எயர் கொமடோர், ஒரு கொமடோர், ஒரு கப்டன், ஒரு கேணல், மற்றும் இரு குடியியல் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முதலாம் நாள் சிறிலங்கா சென்றுள்ள இந்தக் குழுவினர் எதிர்வரும் 6ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று பாதுகாப்புத் தொடர்பான கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் பார்வையிடவுள்ளனர்.
****************