Saturday 29 October 2011

செய்திகள் 27/10


பேச்சுக்கள் ஆரம்பம்
அமெரிக்கா சென்றடைந்துள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொஷிங்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற முதலாவது சந்திப்பு யாருடன் நடைபெற்றது என்பது குறித்து உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நேற்றுச் சந்தித்ததாக செய்திகள் தெரிவித்தன.
கூட்டமைப்பினரின் இந்த முதலாவது சந்திப்புடன் அமெரிக்கத் தரப்புக்களுடனான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
யார் யாரை எப்பொழுது எந்த நாளில் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர் என்பது குறித்து தகவல்களை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பினருடனான சந்திப்பு அட்டவணை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மிகவும் இரகசியமாகக் கையாள்வதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
எனினும் கூட்டமைப்பினர் இந்த விஜயத்தின்போது ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்டன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
****************

தொடரும் அதே பல்லவி!
சிறிலங்கா அதிபரின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது.
ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, சிறிலங்காவுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.நா அறிவித்துள்ளது.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக மேலதிக விளக்களையும் சிறிலங்கா தரப்பின் நியாயங்களையும் எடுத்துக் கூறவே, மகிந்த ராஜபக்ச, அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார்.
அவர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ள போதும், ஐ.நா பொதுச்செயலர் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போரில் இருந்து முற்றாக மீள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பொறுப்புக் கூறுவது முக்கியமானது என்று ஐ.நா பொதுச்செயலர், மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
வடக்கில் மீள்குடியமர்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுடன், கௌரவமான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய கலந்துரையாடல் நடத்தப்படுவதும் முக்கியமானது என்றும் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நேற்றுக்காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நவம்பர் 15ம் நாள் வெளியிடப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசின் சார்பில் மகிந்த சமரசிங்க காலஅவகாசம் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த சமரசிங்க, 2012 ஒக்ரோபரில் ஜெனிவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொகன்னவும், பிரதித் தூதுவர் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டனர்.
****************

காலத்தை கடத்தும் மகிந்த
நாட்டின் உண்மை நிலைமை தொடர்பாக எந்தத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் எந்தவொரு தரப்பினையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கமும், தாமும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர மற்றும் ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அரசுத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அரசுத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேசத்தை ஏமாற்ற மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வரும் பொய்பரப்புரைகள் வெற்றியளிக்காது என மனித உரிமை அமைப்புக்கய் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
****************

சிறப்பு அறிக்கை - வலியுறுத்தும் அவுஸ்திரேலியா
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக கொமன்வெல்த் மாநாட்டில் சிறப்பு அறிக்கை ஒன்றை சிறிலங்கா வெளியிட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் இது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.
ஆனால் கொமன்வெல்த் தலைவர்களின் முன்பாக பொறுப்புக் கூறுதல் குறித்து சிறப்பு அறிக்கை எதையும் வெளியிட முடியாது என சிறிலங்கா அதிபர் கூறிவிட்டதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக பேச விரும்பும் கொமன்வெல்த் நாடுகளுடன் தாராளமாக இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 19ம் நாள் தனது கையில் கிடைக்கும் என்றும் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவுஸ்ரேலியப் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் எடுத்துக் கூறியதாகவும், லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் அவுஸ்ரேலியாவில் சேகரிக்கப்படும் நிதி சிறிலங்காவுக்கு அச்சுறுதலை ஏற்படுத்துவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவுஸ்ரேலியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
****************

அடுத்த மகாநாடு - சந்தேகமே
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வில் சகல நாடுகளும் பங்கேற்பது சந்தேகமே என அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
அமர்வுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்காமல் இருக்க வாய்ப்பிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுநலவாய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வது குறித்து குறிப்பிட்ட உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களே தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையின் நட்பு நாடுகள் அமர்வுகளில் பங்கேற்கும், ஏனைய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்பது குறிப்பிட்டு கூற முடியாது.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முதன்மை குறிக்கோள் என கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமர்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************

வக்காளத்து வாங்கும் இந்தியா
இலங்கையில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார்.
அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதையும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதையும் கனடா வலியுறுத்துகிறது என அவர் கூறினார். 
இந்திய வெளியுறவு செயலாளர், ஸ்ரீரஞ்சன் மத்தாய், 25 ஆம் திகதி நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அடுத்த வருட பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானம் 2009 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார்.
இது மீண்டும் பேசப்பட வேண்டிய வியடமல்ல என அவர் கூறினார்.
மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, என்பவற்றை கண்காணிக்கவென ஒரு ஆணையாளரை பொதுநலவாயம் நியமிப்பதற்கு இந்தியா காட்டும் எதிர்ப்பு பற்றி வினவியபோது, இந்த விடயங்களை ஏற்கெனவே செயாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கை குழு என்பன கவனித்து வருகின்றன என அவர் கூறினார்.
இரண்டாவதாக,  இந்நடவடிக்கை ஐ.நாவின் ஆணையாளர்கள் மேற்கொள்கின்றனர்.
அத்துடன் இந்த நடவடிக்கை ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொதுநலவாய அமைப்புக்கு மேலதிக செலவை ஏற்படுத்திவிடும்.
புதிய அமைப்புகளை உருவாக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள அமைப்புகளை மேலும் ஸ்திரப்படுத்துவதே சிறப்பானது என அவர் கூறினார்.
இச் செய்தியளார் மாநாட்டின் விபரங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் உள்ளூர் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன.
****************

அம்பலமாகும் பாதாள உலக அரசியல்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட முல்லேரிய சம்பவத்திற்கும், கொழும்பு பங்குச் சந்தை நிலைமைக்கும், சட்டவிரோத போதைப் பொருட்களுக்கும் தொடர்பிருப்பதாக ரி.என்.எல். தொலைக்காட்சியின் உரிமையாளரான ஷான் விக்கிரமதுங்க தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தொடர்புகள் குறித்து தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்திய பின் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் ஷான் விக்கிரமதுங்க பிபிசி சந்தேஷயவிடம் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படுபவர்களால்; கொல்லப்பட்ட பின்னர் இந்த தொடர்பு அம்பலமாகியுள்ளது என பிபிசி சந்தேஷயவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவும் தலையில் காயமடைந்த இச்சம்பவத்தையடுத்து போதைப்பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
சந்தையில் சட்டவிரோத போதைப்பொருள் இல்லாத நிலையில் பங்குச்சந்தையும் சரிந்துள்ளது என விக்கிரமசிங்க விளக்கினார்.
இதை தாம் ஆராய்ந்தபோது போதைப்பொருள் சந்தைக்கும் இப்பங்குச்சந்தைக்கும் தொடர்புள்ளதை தாம் அவதானித்தோம் என அவர் கூறினார் என்று பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
****************

தடுத்து வைப்பது பொருத்தமல்ல
அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி, விலாவூட் தடுப்பு முகாம், கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு ஓர் உகந்த இடமல்ல என்று குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவென் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது தற்கொலை தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவென் இதனைத் தெரிவித்தார்.
தற்கொலை செய்துகொண்டவர் 2010 ஆம் வருட மார்ச் பிற்பகுதியிலிருந்து இத்தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இவர் ஓர் அகதி என கணிப்பீடு செய்யப்பட்டார்.
இது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக காத்திருக்கு 462 பேரில் இவரும் ஒருவராக இருந்தார்.
தற்கொலை புரிந்து கொண்டவரின் விடயம் ஒரு சிக்கலானது.
இங்குள்ளவர்கள் பல நிலைப்பாடுகளில் உள்ளவர்கள். அவர்களில் இவரும் ஒருவர்.
இவர் தேசிய பாதுகாப்பிலிருந்து தப்புவதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டவரா என்பதையும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்றும் போவென் புதன்கிழமை சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொருத்தமான பாதுகாப்பு முகவர் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம் மற்றும் அதன் அறிவுரை இந்தத் தற்கொலை விவகாரத்தில் பொருந்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
****************