Thursday 20 October 2011

செய்திகள் 18/10


வடக்கில் தீவிரமாகும் சிங்களமயம்!
வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாகங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொது நிர்வாக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட சிங்களவர்களை பணிக்கென வடக்கு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் வவுனியா அரச திணைக்களங்களுக்கு மூவர் உயர் பதவிகளுக்காக அனுப்பப்படவிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் எனத் தெரியவருகிறது.
நிர்வாக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய தமிழ் மாணவர்கள் எவரும் சித்தியடையாத நிலையில் 125 சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர்.
குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போது விரைவில் பரீட்சையினை நடத்தப் போவதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனிவிரத்தன வாக்குறுதி அளித்திருந்த நிலையிலும் குறித்த பரீட்சை நடைபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா பொது மருத்துவமனைக்கு சிங்கள இனத்தினைச் சேர்ந்த 18 சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் குருநாகல், மாத்தறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றிவருகின்ற வவுனியா மாவட்ட பெண் சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் சிங்களவர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளமையின் பின்னணியில் வடமாகாண ஆளுநர் சந்திசிறீ இருப்பதாக தெரியவருகின்றது.
******************

புதிய நிர்வாக மாற்றங்கள்
புதிய நிர்வாக மாற்றத்தின்படி வெலிஓயா என்ற மணலாறு பிரதேச செயலகப்பிரிவு, அநுரதப்புர நிர்வாகத்தில் இருந்து முல்லைத்தீவின் நிர்வாகத்துக்கு கீழ் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீளமைக்கும் திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள குடியேற்றவாசிகளை கொண்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு போர்க் காரமாண அநுராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்தது.
தற்போது போர் அற்ற நிலையில் இது முல்லைத்தீவின் நிர்வாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக வெலிஓய பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய மாவட்டங்கள் எவையும் உருவாக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வவுனியாவில் மேலும் இரண்டு புதிய பிரதேச செயலகங்களை ஏற்படுத்துமாறு தாம் கேட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பிலும் இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
******************

தப்ப வழி தேடும் மகிந்த
போர்க்குற்ற விசாரணை நெருக்கடிகளை அனைத்துலக அளவில் சந்திக்க ஆரம்பித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற, நோபல் பரிசுக் குழுவை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்துலக அளவில் சரிந்து வரும் சிறிலங்கா அதிபரின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி, போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இணையத்தளம் மூலம் முன்வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் தீவிரவாதத்தை முற்றாக அகற்றியது, அமைதியை ஏற்படுத்தி மூன்றாண்டுகளாக நிம்மதியான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்று பெரியதொரு சாதனைப் பட்டியலைப் போட்டு, மகிந்த ராஜபக்சவுக்கு 2012ம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நோபல் பரிசுக் குழுவிடம் கோரப்படவுள்ளது.
சிறிலங்கா அரசின் தூண்டுதலின் பேரில் வெளிநாடுகளில் உள்ள அதன் ஆதரவாளர்கள் சிலரே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, உலகின் பிரபலமான 100 நபர்களின் பட்டியலைத் தயாரிக்க ரைம் சஞ்சிகை நடத்திய இணைய வாக்கெடுப்பை சிறிலங்கா அரசாங்கம் முறைகேடாகப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவை முதலிடத்துக்கு கொண்டு வந்திருந்தது.
இந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்த ரைம் சஞ்சிகை நிர்வாகம், அநத வாக்கெடுப்பையே செல்லுபடியற்றதென அறிவித்திருந்தது.
இதுபோன்ற முறைகேடான வாக்கெடுப்பை நடத்தி, சிறிலங்கா அதிபருக்கு நோபல் சமாதானப் பரிசு அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதே சிறிலங்கா அரசின் திட்டமாகும்.
இதன் மூலம் அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு எதிராகத் தோன்றியுள்ள போர்க்குற்ற விசாரணை நெருக்கடிகளைக் குறைக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் தெரியவருகிறது.
******************

தெரியுமா என்ற கேள்விக்கு பதில் தேடும் அவுஸ்திரேலியா
சிறிலங்காவின் தூதுவராக அட்மிரல் திசார சமரசிங்கவை ஏற்றுக்கொள்ள முன்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு தெரிந்திருந்ததா என்பதை வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும் என்று, அவுஸ்ரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிசப் கோரியுள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் அட்மிரல் திசார சமரசிங்க வடக்கு, கிழக்கு பகுதிகளுக்காக கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியதாக அவுஸ்ரேலியாவிலும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அவுஸ்ரேலிய காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக சட்டங்களின்படி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க அவுஸ்ரேலிய காவல்துறைக்கு பொறுப்பு உள்ளதாக அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து தி ஏஜ், ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள நிழல் வெளிவிவகார அமைச்சர் பிசப், சிறிலங்கா தூதுவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை, இவரை தூதுவராக ஏற்றுக் கொள்ள முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிந்திருந்ததா என்பதை கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் இவரது நியமனம் தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ஏதாவது விசாரணைகள் நடத்தியதா இல்லையா என்பதையும் அறியத்தர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஒரு செனெட் விவாதத்தின் போது அட்மிரல் திசார சமரசிங்கவின் நியமனம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் மற்றும் அமைச்சரவைத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே அவுஸ்ரேலிய காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக கருத்துச் சொல்வது பொருத்தமற்றது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதேவேளை அடுத்தவாரம் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த, கொமன்வெல்த் உறுப்பினர்களிடம் கெவின் ரூட் வலியுறுத்த வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி கோரியுள்ளது.
அத்துடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
******************

குற்றச்சாட்டுக்கு என்ன பதில்
சிறிலங்கா அரசுக்கு எதிராக அவுஸ்ரேலிய காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் அடங்கிய முறைப்பாட்டில், அவுஸ்ரேலியாவுக்கான தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தி அவுஸ்ரேலியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அட்மிரல் திசார சமரசிங்கவுக்கு எதிராக அவுஸ்ரேலிய காவல்துறையிடம் போர்க்குற்ற முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் முன்னணி ஊடகங்களான தி ஏஜ் மற்றும் தி மோர்னிங் ஹெரோல்ட் போன்றன தகவல் வெளியிட்டிருந்தன.
இதையடுத்து இந்த விவகாரம் அனைத்துலக அளவில் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக உலாவரத் தொடங்கிய நிலையில், இன்று தி அவுஸ்ரேலியன் ஊடகம், அட்மிரல் திசார சமரசிங்க அல்லது வேறு எந்தத் தனிநபருக்கோ எதிராக முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளது.
தாம் சமர்ப்பித்துள்ள இந்த முறைப்பாட்டில் எந்தவொரு தனிநபரினது பெயரையும் குறிப்பிடவில்லை என்று அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் டவுட் தெரிவித்துள்ளார்.
தாம் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும்படியே அவுஸ்ரேலிய காவல்துறையிடம் முறையிட்டுள்ளோம், ஆனால் எந்தவொரு தரப்பு மீதோ அல்லது தனிநபர்கள் மீதோ விசாரணை நடத்தக் கோரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த மனு தொடர்பாக தாம் அவுஸ்ரேலிய காவல்துறையுடனோ அல்லது அவுஸ்ரேலிய அரசாங்கத்தைச் சேர்ந்த எவருடனோ பேசவில்லை என்றும் அவ்வாறு பேசும் திட்டம் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் அட்மிரல் திசார சமரசிங்க கூறியுள்ளார்.
******************

தாக்கும் அரசு!
கடந்த காலங்களில் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பதன் மூலம் கல்வியில் அரசாங்கம் கைவைத்ததன் விளைவாகத்தன் அகிம்சைப் போராட்டமாக இருந்த தமிழர் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்தது.
எனவே இன்றும் இந்த கல்விச் சமூகத்தின் மீது குறிப்பாக தமிழ் கல்விச் சமுகத்தின் மீதான தாக்குதல்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதான தாக்குதல்களாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.
பட்டப்பகலிலே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்குரிய முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் தவபாலன் தாக்கப்பட்டமை தொடர்பாக அவர் இந்தக் கருத்து தெரிவித்தார்.
******************