Thursday 20 October 2011

செய்திகள் 17/10


கொள்ளையர்களின் கூடம்!
நாடாளுமன்றில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் இருப்பதாக முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.
அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும்.
நாட்டின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் மிகவும் லாபகரமான வியாபாரமாக தற்போது அரசியல் மாற்றமடைந்துள்ளது.
தந்தை, மகள், மாமி, மாமா மற்றும் மகன் என குடும்பத்தின் அனைத்து தரப்பினரும் அரசியலில் ஈடுபடுவதற்கு போராடுவதாகக் சந்திரிக்கா பண்டாரநயாக்க குறிப்பிட்டுள்ளார்.
****************

உண்ணாவிரதம் ஆரம்பம்
காணிப்பதிவு என்னும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்புச் செயற்பாடுகள் உட்பட வடக்கு, கிழக்கில் நிலவும் பல் வேறு பிரச்சினைகளை அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றது.
வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைகளை மாற்றி வெலிஓயா என்னும் புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் அந்த மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றி இனங்களுக்கிடையில் கசப்புணர்வையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்.
போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும், சொத்துகளையும் இழந்து நிற்கும் நிலையில், காணிப்பதிவு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நில அபகரிப்புச்செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் காணி, வீடுகள் அற்று நிர்க்கதியான நிலையில் தவிக்கும் இவ்வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் ஊடாக இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள் அண்மையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவை எடுத்தன.
இன்று நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் கலந்துகொள்கின்றது.
கொழும்பில் இருந்து வவுனியா செல்லும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குருபரன் உட்படக் கட்சி முக்கிய நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வர்.
****************

குழப்பும் இராணுவம்
வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் குழப்பும் நடவடிக்கையில் வளாகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பெருமளவான இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதைகளை அடைத்து உள்ளே செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
பாதைகளை திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் தமது நடவடிக்கையினைத் தொடர்ந்தும் முன்னெடுத்திருக்கின்றனர்.
இதனால் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தரப்பிற்கும் முறுகல் நிலை ஏற்பட்ட போதிலும் பாதைகள் திறக்கப்படவில்லை.
இதனை அடுத்து உண்ணாவிரதத்தில் இருந்த கூட்டமைப்பினர் அங்கிருந்து எழுந்து பாதையைத் திறக்குமாறு கோரியதுடன் ஏ-9 நெடுஞ்சாலையின் போக்குவரத்தினைத் தடுத்து நிறுத்திப் போராடுவோம் என்று தெரிவித்தினர்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த இராணுவத்தரப்பு வளாகத்திற்கான ஒரு பாதையை மட்டும் திறந்திருக்கின்றது.
ஆனாலும் அந்தப் பகுதியிலும் ஏனைய வீதிகளிலும் இராணுவக் கெடுபிடிநிலை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூறுக்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்ததத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டமைப்பினர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே காவல்துறையினரும், இராணுவத்தினரும் அங்கு வரவளைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
****************

கவலை கொள்ளும் ரணில்
17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டு 18வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துள்ளதுடன் அராஜகம் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே 18ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான போராட்டத்தை தமது கட்சி விரைவில் தொடங்கும் என்றும் அவர் நேற்று அறிவித்தார்.
கொழும்பு மாநகரசபை வெற்றியடைச் செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்த அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு முல்லேரியாவில் அரச தரப்பு அரசியல்வாதிகள் மோதிக்கொண்ட சம்பவமே பெரிய உதாரணம் என்று அவர் கூறினார்.
காவல்துறை ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியன சுயாதீனமாக இயங்குவதற்கு அரசமைப்பு வழங்கியிருந்த அதிகாரங்களை தற்போதைய அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த 18ஆவது திருத்தம் இல்லாமல் செய்து விட்டது.
இதனால் இந்த மூன்று துறைகளும் மேலும் மேலும் அரசியல் மயப்பட்டுப் போயுள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது.
அரசமைப்பின் இத்தகைய அரக்கத்தனமான பகுதியை நீக்குவதற்கான போராட்டத்தை நாடாளுமன்றத்தில் தாம் ஆரம்பிப்போம் எனவும் பின்னர் அதனை மக்களிடம் எடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
18ஆவது திருத்தத்தை அகற்றும்வரை அது தொடரும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் இந்த மூன்று ஆணைக்குழுக்களையும் உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்படிப் பாடுபட்டது என்பதையும் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.
சுயாதீனமான, சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு மட்டுமே தவறியிருந்தது எனவும் அவர் கூறினார்.
அப்போது அரசுத்தலைவராக இருந்த சந்திரிகா குமாரதுங்க அந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு உடன்படாததன் காரணத்ததாலேயே அந்தத் தோல்வியும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை துறை உள்ளிட்ட இலங்கை அரச நிர்வாகத் துறைகள் பலவற்றில் சுயாதீனத்தன்மை இல்லை என்று, ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயத்தைத்தான் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகம் மட்டுமன்றி இரண்டாயிரம் வருடங்களாக பேணப்பட்டு வந்த சமய, கலாச்சார விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையை மாற்றியமைக்க அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
****************

அடுத்த வழக்கும் ஆடிப்போன அரசும்
இலங்கையின் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் திசர சமரசிங்க பேர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிராந்திய காவல் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக த ஏஜ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய பிரிவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்;டுள்ளது.
இந்தக் கோரிக்கையின்படி தற்போது அவுஸ்திரேலிய கன்பராவில் வசிக்கும் அட்மிரல் திசர சமரசிங்க, போர்க்குற்றச்சாட்டுக்கு நேரடியாக உட்படுத்தக்கூடியவர் என்று கூறப்பட்டுள்ளது.
அட்மிரல் சமரசிங்க நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் இல்லை.
எனினும் இறுதிக்கட்ட சண்டையின் போது பொதுமக்கள் மீது இலங்கையின் கடற்படையினர் எறிகணை வீச்சுக்களை நடத்தினர் என்று சாட்சியங்கள் கூறுகின்றன.
எனவே குறித்த கடற்படைப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர் என்ற அடிப்டையில் திசர சமரசிங்க போர்க்குற்றவாளி என்று சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அவுஸ்திரேலிய பிராந்திய காவல்துறையினர், குறித்த முறைப்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த முறைப்பாட்டை அவுஸ்திரேலிய காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு அதன் பிரதிகளை பொதுநலவாய நாடுகளின் குற்றத்தடுப்பு பணிப்பாளர் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளது.
சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு, ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட சுயாதீனமான அமைப்பாகும்.
ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அந்த ஆணைக்குழு, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க சங்கங்களிலும் அங்கமாக உள்ளது.
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நியூசௌத் வேல்ஸின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரை தலைவராக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு முன்னதாக கிழக்கு திமோர் தொடர்பிலும் இவ்வாறான முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை குறித்த ஆணைக்குழுவினால் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹனவுக்கு எதிராகவும் அவுஸ்திரேலிய பிராந்திய காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடிகளை ஏந்த சரணடையுமாறு கோஹனவே குறுஞ்செய்திளை தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக தலைவர் புலித்தேவனுக்கு அனுப்பினார் என்ற குற்றச்சாட்டே அதுவாகும்.
புலிதேவன் உட்பட்டோர் சரணடைந்ததன் பின்னர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே கோஹன மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும் தாம் குறுஞ்செய்தி அனுப்பியதை ஏற்றுக்கொண்ட கோஹன, எனினும் அவர்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
சரணடையவது எந்தளவு நன்மையை தரும் என்பதை பரிசீலிக்குமாறே தாம் குறுஞ்செய்தியை அனுப்பியதாக கோஹன தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள கோஹன, மீதான இந்த முறைப்பாடு தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
****************

மாணவ சமூகத்தை இலக்கு வைக்கும் அடக்குமுறையாளர்கள்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் நேற்று மதியம் 2.30மணியவில் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் முகத்தை மறைத்து தலைக்கவசம் அணிந்த மோட்டார் சைக்கிளில் வரும் ஆயுத தாரிகள் தொடர்ச்சியாக ஜனநாயக சக்திகள்மீது தாக்குதல் புரிவது அதிகரித்துச் செல்கின்றது.
சில மாதங்களுக்கு முன்பாக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தனிச் செயலாளர் இதே போன்று தலைக்கவசம் அணிந்தவர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீது இதே பாணியில் அவரது அலுவலகத்திற்கு அண்மையில் வைத்துத் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று இதே பாணியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல்களின்போது மோட்டார் சைக்கிளில் வந்த இத்தாக்குதல்தாரிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளில் மறைத்து வைத்த கூரிய ஆயுதங்களுடனும் சிறிய துப்பாக்கிகளுடனுமே இத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
இவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உனக்கு தமிழீழம் வேண்டுமா என்று கேட்டுகேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல்பாணி தாக்குதல்தாரிகள் பேசிய முறை, பட்டப்பகலில் நடக்கின்ற சம்பவங்கள் இவற்றைப் பார்க்கின்றபொழுதே இவை யாரால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஜனநாயக செயற்பாடுகளும் நடக்கக்கூடாது என்பதையே இத்தாக்குதல் சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
****************

இணையவழி முறைப்பாடு
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார்.
வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும்.
சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவளிக்கக் கோரும் மனுவில் 5000 பேர் கையொப்பமிட்டால், அதுபற்றி பரிசீலிக்கத் தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
5000 பேரின் கையொப்பங்களை இலக்கு வைத்து இதுதொடர்பான மனுவை, ஜிம் மக் டொனால்ட் வெள்ளைமாளிகை இணையத்தளத்தில் கடந்த மாத இறுதியில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தமனுவில் இன்று காலை வரை 4ஆயிரத்து 877 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்தமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இன்னமும் 123 பேரின் கையொப்பங்களே தேவைப்படுகின்றன.
கையொப்பமிடுவதற்கு ஒக்ரோபர் 29ம் நாள் வரை காலஅவகாசம் உள்ள போதும், இரண்டொரு நாட்களில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.
இதனால் அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் வெள்ளை மாளிகையினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.
இதனால் சிறிலங்கா அரசு கவலையடைந்துள்ளது.
அத்துடன் இது தமக்குப் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று கொழும்பு கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைகளுக்குப் பின்னால், போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றி, தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள மருத்துவர் ஒருவரும் இருப்பதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக் கோரும் வெள்ளைமாளிகைக்கான இணையதள மனுவில் உடனடியாக ஒப்பமிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
****************

இந்தியாவின் சிறப்பு பிரிவு எதற்கு?
சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்து ஒருங்கிணைப்பதற்காக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு பிரிவு என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய அலகுக்குப் பொறுப்பாகவும் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்து ஒருங்கிணைப்பதற்குமாக சிறப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா 5000 மில்லியின் ரூபா பெறுமதியான உதவிகளை அறிவித்திருந்தது.
அத்துடன் வடக்கு,தெற்கு பகுதிகளில் தொடருந்துப் பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் இந்தியா 800 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளது.
இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை இந்தியா மேற்கொள்ளும், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தமது பணிகளை ஒருக்கிணைப்பதற்கு இந்தியா இதுபோன்றதொரு சிறப்பு அலகை கடந்த ஆண்டில் உருவாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார செயலர் ரஞ்சன் மத்தாய் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்டிருந்த பயணத்தை அடுத்தே சிறிலங்காவிலும் இந்தப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்கள் மிக மெதுவாகவே முன்னெடுக்கப்படுவது குறித்த ரஞ்சன் மத்தாய் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************