Thursday 20 October 2011

செய்திகள் 16/10


பதிலில்லாத மகிந்தா!
மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளூர் ஊடகங்கள் மூலம் அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டாலும், கூட அதற்குப் பதில் அளிக்கப்படாது என்று சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ள
சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று தமிழர்கள் சிறிலங்கா அதிபருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நட்டஈடு கோரும் வழக்கு ஒன்றை சட்டவாளர் புரூஸ் பெய்ன் ஊடாக தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் சிறிலங்கா அதிபரைப் பதிலளிக்கக் கோரும் அழைப்பாணை அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்ட போதும் அதனை ஏற்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமெரிக்கச் சட்டத்தின்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை குறித்து அறிந்திருக்க வேண்டும்.
இதனால், சிறிலங்காவில் உள்ள இரண்டு ஊடகங்கள் மற்றும் தமிழ்நெற் இணையத்தளம் ஆகியவற்றின் மூலம் அழைப்பாணையை வெளியிட அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்தநிலையிலேயே, அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும் கூட, அதற்குப் பதில் அளிக்கப்படாது என்று பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
வலுவான காரணமின்றி அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கும் போது அதற்கு சிறிலங்கா அதிபர் பதிலளிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, முன்னாள் சட்டமா அதிபரும் சிறிலங்கா அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகருமான மொகான் பீரிஸ், சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர விதிவிவலக்கு இருப்பதால், அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும் கூட அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
*********************

குடும்பத்திடம் குவிக்கப்படும் நிதி?
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களின் கையில் உள்ள அமைச்சுக்களுக்கே பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் செவ்வாயன்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச ஆகியோரின் நேரடிப் பொறுப்பில் உள்ள அமைச்சுக்களுக்கு மட்டுமே, 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அமைச்சு, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கே அடுத்த ஆண்டில் ஆகக் கூடிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளன.
சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு சுமார் 230 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
2011ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 215 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த அமைச்சு சிறிலங்கா அதிபர் மற்றும், அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அடுத்த ஆண்டு 104 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சுக்கு 2011இல் 75 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் உள்ள மற்றொரு அமைச்சான நிதி திட்டமிடல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடும் 72.5 பல்லியன் ரூபாவில் இருந்து 124 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் 2011இல் 130.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இம்முறை 144 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இதுவும் சிறிலங்கா அதிபரின் கையிலேயே உள்ளது.
இதேவேளை, 2011இல் 2.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட மீள்குடியேற்ற அமைச்சுக்கு 481 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்படவுள்ளது.
*********************

அதிகரிக்கும் பாலியல் வன்முறை
பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களை முறையிடும் வகையில் யாழ். மாவட்ட செயலகத்தில் தனியான பிரிவொன்று இருவாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
யாழ். குடாநாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இற்றைவரை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களாக 114 முறைப்பாடுகளும் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களாக 175 முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஏதும் இடம்பெறின் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகத் தண்டித்தனர்.
இதனால் முன்னர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
எவராவது பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களில் ஈடுபடின் அது குறித்து வெளிக்கொண்டு வரப்படும்.
இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
*********************

ஜே.வி.பியின் தொடரும் குழப்பம்
ஜே.வி.பிக்கு துரோகம் செய்வது, மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்று கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச புரட்சித் தலைவர் ஏனஸ்ரோ சே குவேராவின் நினைவு தினம் நேற்று கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், சங்கத்தின் தலைவரும், ஜே.வி.பி. இன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமால் ரத்நாயக்க உட்பட பலர் உரையாற்றினர்.
இதேவேளை, ஜே.வி.பி. இன் புரட்சிகர பிரிவினர் சே குவேராவை நினைவு கூரும் வகையிலான நிகழ்வொன்று கடந்த 8 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ஜன கலா மத்திய நிலையத்தில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*********************

புலம்பெயர் தமிழரின் உதவி கோரும் தாயக மக்கள்
தாயகத்தில் அவலங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் புலம்பெயர் அமைப்புக்கள் தான் உடனடியாக முன்வந்து உதவுகின்றவர்கள் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான புலம்பெயர் உறவுகள் பிரதேச வேறுபாடுகளை மறந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பண்டாரியாவெளி, படையாண்டவெளி அ.த.க பாடசாலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய சிட்னி தமிழர் அமைப்பு வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கிவைத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். சிறப்புரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தாயகத்தில் அவலங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் உடனடியாக முன்வந்து உதவுகின்றவர்கள் புலம்பெயர் அமைப்புக்கள் தான் என தெரிவித்த அவர், அவ்வாறான புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்தில் வாழுகின்ற தமிழர்களாகிய தாங்கள் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தாயகத் தமிழர்களுக்கு உதவுகின்ற அமைப்புகள் பிரதேச வேறுபாடுகளை மறந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கையாகும் எனவும் தெரிவித்தார்.
இப்போது இந்த பாடசாலை மாணவர்களுக்கான உதவிகளை வழங்கியுள்ள அவுஸ்திரேலிய சிட்னி தமிழர் அமைப்பானது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை பிரதிநிதிகளாக கொண்டிருந்தாலும் அவர்கள் எந்தவித பிரதேச வேறுபாடுகளும் இன்றி தாயக தமிழர்களுக்கு உதவி செய்கின்றமையை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்த அவர், இவ்வாறு ஏனைய புலம் பெயர் அமைப்புக்களும் பிரதேச வேறுபாடுகளை மறந்து செயற்பட முன்வரவேண்டும் என்பதை தாங்கள் மீண்டும் வேண்டுகோளாக முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
இதை விட அண்மையில் முல்லேரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மூலம், பாதாள உலகக் குழுவாக இருந்தாலும் சரி அல்லது வேறு குழுக்களாக இருந்தாலும்; சரி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சட்டவிரோத ஆயுததாரிகளையும் ஆயுதங்களையும் தங்கள் வசம் வைத்துள்ளார்கள் என்பது தற்போது நிருபனமாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த ஆயுதங்களையும் ஆயுததாரிகளையும் வைத்துக்கொண்டுதான் தேர்தல் காலங்களில் மக்களையும், வேட்பாளர்களையும் அச்சுறுத்தி வாக்குகளை பெற்றுள்ளார்கள்.
இது இப்போது நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி கடந்த காலங்களில் வடகிழக்கில் நடைபெற்ற தேர்தல்களாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் அரசாங்கத்தின் சட்டவிரோத ஆயுததாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையே முல்லேரியச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
*********************

தீருவிலில் பூங்கா
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை சிங்கள இனவாத அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முற்றுமுழுதாக இடித்தழித்திருந்தனர்.
இந்த நிலையில் அதே குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் கட்டப்பட்டிருந்த தூபி பகுதியை பொது பூங்காவாக கட்டியமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான செய்தி இன்னும் சில நாட்களில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பூங்கா அமைப்பதன் மூலம் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தீருவில் சதுக்கம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*********************

சந்தேகநபர் கொலையா?
படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபர் மரணமடைந்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் அத்திடிய பிரதேசத்தில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பீ. ஜேசுதாசன் எனும் சந்தேக நபர் இருதய நோய் காரணமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் இன்று அறிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் இடம்பெற்றுள்ள அவரது மரணம் தொடர்பில் மருத்துவ அறிக்கைகள் எதனையும் காவல்துறை திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*********************