Sunday 23 October 2011

செய்திகள் 23/10


ஐநா செயலரைச் சந்திக்கும் ததேகூ
எதிர்வரும் வாரம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ம் திகதி அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது
********************

காணிப்பதிவுக்கு எதிராக வழக்கு
வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
நாளைய தினம் உச்சநீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் விவாத் நடத்தப்பட்டது.
காணிப்பதிவு நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயப்படுத்தி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டதன் பின்னர் அரசாங்கம் இவ்வாறான காணிப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்
********************

மகிந்தவின் அவுஸ்திரேலிய பயணம்
கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செய்வாய்க்கிழமை அவுஸ்ரேலியா செல்லவுள்ளார
பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெலத் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்றும் அவுஸ்ரேலியா செல்லவுள்ளது.
108 பேர் கொண்ட இந்தக் குழுவில், தற்போது இராணுவத்தில் பணியாற்றும் இளநிலை அதிகாரிகளைக் கொண்ட குழுவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த இராணுவ அதிகாரிகள் எவருக்கும் இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கொழும்பு வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும்போது, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்ப கனடாவும், அவுஸ்ரேலியாவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவை கொமன்வெல்த்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த நம்பகமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவுஸ்ரேலியாவில் வலுத்து வருகின்றன.
இந்தநிலையிலேயே சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மூத்த இராணுவ அதிகாரிகள் எவரையும் சிறிலங்கா அதிபர் அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா சென்றிருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் போர்க்குற்ற வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதால், அவசரமாக நாடு திரும்பும் நிலை மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.
அத்துடன் அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவும், ஜேர்மனியில் பதில் தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசும், ஐ.நாவுக்கான பதில் தூதுவரான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால், அவுஸ்ரேலியா செல்லும் மகிந்தவின் குழுவில் மூத்த அதிகாரிகள் தவிர்க்கப்பட்டு சர்ச்சைகளில் சிக்காது இளநிலை இராணுவ அதிகாரிகளே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
********************

கையில் காசு கொடுக்க மறுப்பு
இலங்கையில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் போது நிதியுதவிகளை நேரடியாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க பிரித்தானிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட நிதிகளை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தியதாக பிரித்தானிய எதிர்க்கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொதுச்சபையால் கடந்த வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பில் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி திணைக்களம், இலங்கையுடனான இருதரப்பு திட்டங்களை 2006 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வந்தது.
எனினும் அதன் பின்னர் மனிதாபிமான பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் அவையும் சர்வதேச உதவி நிறுவனங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியா ஏற்கனவே சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.
அத்துடன் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் அந்த நாடு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
********************

அரசு மீது அதிருப்தி
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக எதேச்சாதிகார போக்கில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகளின் பலம் மக்களின் பலமாக கருதப்பட வேண்டும் எனவும், எதிர்க் கட்சிகள் பலவீனமடைவதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதனை மறுப்பதற்கில்லை.
எனினும், ஆளும் கட்சிக்குள் அதனை விட பாரிய குழப்ப நிலைமைகள் காணப்படுகின்றன, இதன் விளைவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்.
சில அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் எவ்வித மறுப்பினையும் தெரிவிக்காத போதிலும், வெளியில் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
********************

தொடரும் கொள்ளைகள்
கிளிநொச்சி - பல்லவராயன்காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிய குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இருக்கின்றனர்.
அவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி மிரட்டி விட்டு அந்த வீட்டுப் பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் சங்கிலி மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக முழங்காவில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
********************

பிரித்தானிய நடைபயணம்
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான நீதிக்கான நடைப்பயணமொன்று ஜெயசங்கர் முருகையா என்பவரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடைபயணம் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
ஈழத்தமிழர்களின் மீதான இலங்கையின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.
இலங்கை சிறைகளில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
தமிழீழத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது.
********************

கட்டணத்தில் கவலை கொள்ளும் இந்தியா
சிறிலங்காவின் புதிய நுழைவிசைவு நடைமுறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நுழைவிசைவு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 டொலர் கட்டணத்தைக் குறைக்குமாறும் சிறிலங்காவிடம் இந்தியா கோரியுள்ளது.
இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேராவை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது, இந்தியக் குடிமக்கள் சிறிலங்கா நுழைவிசைவைப் பெறுவதற்கு 50 டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிகமானது என்றும் இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய தூதுரக அதிகாரி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் பதிலை அவர் கோரியதாகவும், ஆனால் இது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விடயம் என்பதால் தமது திணைக்களம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கலாம் என்று நம்புவதாகவும் சூலானந்த பேரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குடிமக்கள் இந்திய நுழைவிசைவைப் பெறுவதற்கு 650 ரூபா கட்டணத்தை மட்டுமே செலுத்தி வரும் நிலையில், சிறிலங்கா 50 டொலர் கட்டணமாக அறவிட முடிவு செய்துள்ளது இந்தியாவைக் கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.
சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளையும் தொடர்புகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு நுழைவிசைவு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா இறுக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
********************

குடும்ப வரவு செலவுத் திட்டம் தயார்
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தநிலையில் அதற்கான முன்கூட்டிய ஒதுக்கீடு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி 2.22 ரில்லியன் ரூபாய் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.
வரவு - செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையாக 1.105 ரில்லியன்கள் ரூபாய் காட்டப்பட்டுள்ளன.
இதில் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் கீழ் உள்ள அமைச்சுகளுக்காக 20 வீதமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசுத் தலைவர் செயலகத்துக்கு 6.161 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் வரும் அமைச்சுக்காக 230 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு இந்த துறைகளுக்கு 215 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
********************