Monday 3 October 2011

செய்திகள் 03/10


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை!
அரசுடனான பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரையில் அரச தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் நோக்கில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது பேச்சுவார்த்தைகள் ஓரளவு ஸ்தம்பித்த நிலையில் தெரிவுக் குழு தொடர்பாக அரச தரப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் பேசசுவார்த்தைகளில் ஏற்பட்டக்கூடிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பாக யோசிப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் காரணிகளும் கோரிக்கைகைளும் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவால் உள்ளடக்கப்பட்டால் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லாமல் மீண்டும் முதலில் இருந்து பேச்சை ஆரம்பித்து இழுபறி நிலை ஏற்படுத்தி முயற்சித்தால் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவையே எடுக்கும்.
தமிழ் மக்கள் அசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியுடன் செயற்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
**********************

பிற்போடப்பட்ட சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற 11ம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தையை இன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் எதிர்வரும் 8ம் திகதி 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவிருப்பதால் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதனால் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்புக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
**********************

மகிந்தவின் நாடகத்தில் பங்கேற்றமைக்கு கண்டனம்
அலரிமாளிகையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வில் ஆயிரத்து 800 முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கூறி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்.
அதில் கலந்துகொண்ட அவுஸ்ரேலிய தூதுவர் கதி குலுக்மன் சான்றிதழ்களை வழங்கியதற்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியத் தூதுவர் கதி குலுக்மன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதை அனைத்துலக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற அவுஸ்ரேலியாவின் முன்னணி சட்டவாளரான ஜோன் டவுண் கண்டித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் தலைவரும், நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் முன்னாள் சட்டமா அதிபருமான ஜோன் டவுண், சிறிலங்காப் படையினரின் தடுப்பு முகாம்கள் மீள் கல்வி வழங்கப்படுவதே தவிர, புனர்வாழ்வு முகாம்களல்ல என்றும் கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்றது, உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்த மறுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் செயலுக்கு, அவுஸ்ரேலியா சட்டரீதியான ஆதரவைக் கொடுப்பதாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பேர்த்தில் இந்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், கொமன்வெல்த்தில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறின் கட்சி விடுத்து வரும் கோரிக்கையின் பின்னணியில் பேராசிரியர் ஜோன் டவுணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிறிலங்காவில் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்காக அவுஸ்ரேலியா எந்தவொரு நிதியையும் வழங்கவில்லை என்று அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகளை தடுத்து வைக்கும் திட்டத்தை அவுஸ்ரேலியா ஆதரிக்கவில்லை என்றும், முன்னாள் போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றே சிறிலங்கா அரசிடம் அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்ரேலியத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
அண்மையில் 44 தமிழர்களுடன் அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்ட படகு ஒன்றை இடைமறித்தற்காக சிறிலங்கா படைகளை அவுஸ்ரேலியத் தூதுவர் குலுக்மன் புகழ்ந்துரைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
**********************

மகிந்தவுக்கு ஊடகங்கள் வாயிலாக அமெரிக்க அழைப்பாணை
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த அழைப்பாணை அரசுத் தலைவரைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
செப்ரெம்பர் 30ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று கூறி அரசுத் தலைவர் மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசுத் தலைவரிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை அரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அரசுத் தலைவர் மாளிகையோ வெளிவிவகாரத்துறை அமைச்சோ நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை அரசுத் தலைவர்க்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
இந்த அழைப்பாணையை இலங்கை அரசுத் தலைவர் நீண்டகாலத்துக்குப் புறக்கணிக்க முடியாது என்றும், அரசுத் தலைவரிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கா நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.
அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச்சியடையவில்லை.
எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
**********************

வரலாற்றை மறைக்க முற்படுவது யார்?
யாழ். பொது நூலகத்தைப் பார்வையிடச் செல்லும் சிங்கள மக்களால் அவதானிக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது என்ற வாசகம் அடங்கிய பதாகை நூலக முன்றிலில் இருந்து நூலக அதிகாரிகளினால் அகற்றப்பட்டுள்ளது.
பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்திஜீவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது.
அந்த வரலாற்றுச் சம்பவத்தை சித்திரிக்கும் புகைப்படங்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான பதாகை ஒன்று நூலகத்தின் முன்றிலில் வைக்கப்பட்டிருந்தது.
அதில், சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்ட நூலகத்தின் தோற்றம் எனக் குறிப்பிட்டு எரிந்த நூலகத்தின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது அந்த வாசகத்தை மறைத்து இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த வாசகத்தை மூடி அதற்கு மேல் புனரமைப்புக்கு முன்னைய தோற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வாசகம் மாற்றி எழுதப்பட்டதன் பின்னர் அந்த பதாகை தொடர்பாக புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நூலகவாசகர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைத் தெரிவித்ததை அடுத்து தற்போது அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நூலகர் திருமதி இமெல்டா கருணாகரனிடம் கேட்டபோது, வாசகம் மாற்றப்பட்டதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அதற்கும் அரசியல் காரணம் எதுவும் இருக்கவில்லை.
தமது நூலகத்தில் நிர்வாகத்தின் முடிவின் பிரகாரமே அது மாற்றப்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலிருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் சிங்களக் காடையர்கள் என்ற வாசகத்தால் குழப்பம் அடைந்தனர்.
தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே அந்த பதாகையை வாசகர் பார்வையிலிருந்து அகற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். பொது நூலகத்தைத் தினசரி 500க்கும் அதிகமான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
அரச அதிகாரிகளின் கூட்டங்கள் பல நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்று வருகின்றன.
அதில் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் பங்குபற்றி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் வாசகம் மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**********************

ஸ்ரீலங்காவை புறக்கணிக்கின்றதா? அல்லது அப்படிக் காட்டிக் கொள்ள முற்படுகிறதா?
இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரிய அளவிலான போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.
நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, மொங்கோலியா, கசாக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், மாலைதீவு, சிசெல்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 16 நாடுகளின் இராணுவங்கள் இந்த கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அறுபதாண்டு கால போர் அனுபவத்தைக் கொண்டுள்ள தமது இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் இராணுவங்கள் ஆர்வமாக இருப்பதாகவும், குறிப்பாக கிராமப்புற, நகரப்புற, அரைநகரப் புறங்களில் கிளர்ச்சி மற்றும், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தப் போர்ப் பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்தப் போர்ப்பயிற்சிக்கு சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அயல் நாடுகளான பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு, மியான்மர் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் சிறிலங்காவுக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.
அண்மையில் திருகோணமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தது.
ஆனால் இந்திய இராணுவம், சிறிலங்கா இராணுவத்துக்கு கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்தியே போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக இந்திய இராணுவம் சிறிலங்காவைக் கழற்றி விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
**********************

ஐநாவில் இனவழிப்பு படை?
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக 4ஆயிரத்து 500 ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஸ்ரீலங்கா இராணுப் படையினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதி காக்கும் பணிகளுக்காக தெரிவு செய்யபட்ட படையினர் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சர்வதேச அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளுரில் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான ஸ்ரீலங்கா இராணுவத்தை சர்வதேச அமைதிப் படையில் இணைத்துக் கொள்வது ஐக்கிய நாடுகள் சபையின் நடுநிலைத் தன்மை குறித்த சற்தேகங்களை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.
**********************