Wednesday 12 October 2011

செய்திகள் 12/10


சுதந்திரமில்லாத தேசம்
அரசுத் தலைவரின் ஆலோசகர் ஒருவருக்கே இன்று சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் ஒழுக்கமற்றவர்களைப் பக்கத்தில் வைத்திருப்பதுதான் என மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், விருப்பு வாக்குகளுக்காக கொலைகளே இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்தார்.
ஒருவர் எவ்வளவுதான் விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் அவர் ஒழுக்கமற்றவர் எனத் தெரிந்தால் அவரைப் பக்கத்தில் வைத்திருக்கக் கூடாது.
இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் ஓழுக்கக் கேடான செயல்களால் அரசுத் தலைவருக்கும் அரசாங்கத்துக்குமே இறுதியில் கெட்ட பெயர் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
********************

தெரிவுக்குழுத் திட்டம் கிடப்பில்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசு மீளப் பெறவுள்ளது.
அதற்குப் பதிலாகப் புதிய யோசனைகளை உள்ளடக்கவும் தீர்மானித்துள்ளதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன.
முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு மாற்றமானதாக புதிய ஆலோசனைகள் இதில் இடம்பெறவுள்ளன.
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் பிரதான பணியாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதிலும் கால தாமதம் ஏற்பட்டது.
இவற்றினைக் கருத்துக் கொண்டே தற்போது அரசாங்கம் முன்னர் சமர்ப்பித்த யோசனைகளை வாபஸ் பெற்று அதற்குப் பதிலாக புதிய யோசனைகளை உள்ளடக்கவுள்ளது என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
********************

அம்பலமாகும் லியம் பொக்சின் இரகசியம்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல்- 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக லியம் பொக்சும், அவரது நண்பர் அடம் வெரிற்றியும் ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்காவுக்கு வந்து போனதாகவும், ஒவ்வொரு முறையும் வரும்போதும் லியம் பொக்ஸ் வெரிற்றியை அழைத்து வந்தாகவும், லியம்பொக்சின் விடுமுறைப் பயணத்தில் கூட அவர் சிறிலங்கா வந்ததாகவும் சிறிலங்கா உயர் வட்டாரங்கள் சனல்- 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளன.
சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தவே லியம் பொக்ஸ் சிறிலங்கா சென்றதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆனால் அடெம் வெரிற்றி ஆயுத பேரம் தொடர்பாக சிறிலங்காவுக்குத் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் செலவிலேயே அங்கு தங்கியிருந்ததாகவும் சிறிலங்காவின் மூன்று உயர்மட்ட வட்டாரங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள மூத்த பிரமுகருடன் கலந்துரையாடும் ஒருவராகவே வெரிற்றி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
சிறிலங்கா அரசின் அந்த முக்கிய பிரமுகர், அடம் வெரிற்றியுடன் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகள், விமான உதிரிப்பாகங்களைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் சிறிலங்கா உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடல் எப்போது நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றும் மற்றொரு உயர்மட்ட வட்டாரம் சனல்-4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளது.
மற்றொரு உயர்மட்ட வட்டாரம், அடம் வெரிற்றி 2000ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு வந்ததாக கூறியுள்ளது.
அத்துடன் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அளவில் நற்பெயரைத் தேடிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அனைத்துலக அளவில் சிறிலங்காவின் பெயர் மோசமாக கெட்டுப் போயுள்ள நிலையில், மேற்கு நாடுகளில் உள்ள பொதுமக்கள் உறவு நிறுவனங்களுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் பெரும் தொகைப்பணத்தை வழங்கியுள்ளனர்.
இதுபற்றிய கலந்துரையாடல்களில் வெரிற்றி பங்கேற்றதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக சனல்-4 கூறியுள்ளது.
பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனல்-4 வெரிற்றியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் சனல்-4 தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிறிலங்கா அரசுடன் எத்தகைய உறவு உள்ளது என்பது குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரித்தானியா நிழல் பாதுகாப்பு அமைச்சர் எம்மா றெனோல்ட்ஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
********************

என்ன நடக்கும்?
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் நேரில் பேசுவார் என்று நம்பப்படுகிறது.
பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள கனேடியப் பிரதமர் இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் நேரில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாக சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் கூறப்படுவது போல, 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை கனேடியப் பிரதமர் புறக்கணிக்கமாட்டார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கனேடியப் பிரதமர் சிறிலங்காவில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறவில்லை என்றும், போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் எட்டப்படாதவிடத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நெருக்கடியானது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் புரூஸ் லெவி மேலும் விளக்களித்துள்ளார்.
சிறிலங்காவில் இந்த மாநாடு நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் பயன்மிக்கதாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அதனை சிறிலங்காவே முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் எதிர்காலத்துக்கு இந்த விசாரணைகள் மிகவும் அவசியம் என்று தாம் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவின் உறவுகள் நெருக்கமடைந்து வரும் நிலையில் பழைய நண்பர்களிடம் இருந்து அது விலகிச் செல்வதை சுட்டிக்காட்டத் தேவையில்லை என்றும் கனேடியத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாரை நண்பராக வைத்திருக்க வேண்டும் என்று முடிவுகளை எடுக்கின்ற எல்லா உரிமைளையும் முதிர்ச்சி பெற்ற நாடான சிறிலங்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள கனேடியத் தூதுவர், ஆனால் ஏதாவது ஒன்றுதான் என்ற விளையாட்டு இங்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
********************

புலம்பும் பான் கீ மூன்?
தமிழ்மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி, அதனைப் பாதுகாக்க ஊக்குவிப்பதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
நோர்வேஜிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கும், மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்புவதற்கு தான் முடிவு செய்ததாகவும், அவர்கள் அதனை மீளாய்வு செய்து வருவதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வந்த சிறிலங்கா அதிபருடன் இந்த விவகாரம் குறித்து தாம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது அவர், தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாக்கவும், நீதியை நிலை நாட்டவும் உள்ளக ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
********************

யாருக்கு யார் ஒத்துழைப்பு
நாட்டில் போதைப் பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பு அவசியம் என அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையின் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு ஒதுக்கம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் பாரியளவிலான சேவையை வழங்கினர்.
அதேபோன்று தற்போது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பைச் சேர்ந்த மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியதாகவும் அதன் போது நாட்டில் நிலவும் போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பலர் கோரியதாகவும் அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
********************

மீள் வரையறுக்கும் முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகளை மீள் வரையறை செய்யும் நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு இது தொடர்பாக முல்லைத்தீவு செயலகத்தில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையைக் கைவிடுமாறும், இதுபற்றி ஆராய்வதற்காகக் கூட்டப்படுகின்ற கூட்டத்தை நிறுத்துமாறும் கோரி அரசாங்கத்திடம், அரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இத்தகைய கோரிக்கைக்குப் பின்பும், திங்களன்று திட்டமிட்டபடி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் எல்லைகளை மீள் வரையறை செய்வது பற்றி ஆராய்வதற்கான கூட்டம் திங்களன்று நடைபெற்றது.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்தக்கூட்டம் நடை பெற்றது.
மீள் எல்லை வரையறை செய்யும் குழுவின் உறுப்பினர்களான யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் கே.கணேஷ் உள்ளிட்டவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
********************

நடமாடும் சேவை
அகதிகளாக இந்தியா சென்றவர்களுக்கு இந்தியாவில் குழந்தை பிறந்த நிலையில் மீள இலங்கை திரும்பி தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் இலங்கை பிரஜாவுரிமையினை பெறுவதற்கான நடமாடும் சேவையினை இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் செயற்படுத்தவுள்ளது.
எனவே பிரஜாவுரிமையினை பெறாதவர்கள் தமது ஆவணங்களை வவுனியா நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட உதவி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடமாடும் சேவை இடம்பெறும் தினத்திற்கு முன்னராக ஒப்படைத்து தமது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதுடன் தமது தேவைகளை நடமாடும் சேவையின்போது நிறைவு செய்து கொள்வதனை இலகுபடுத்திக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
********************