Thursday 20 October 2011

செய்திகள் 19/10



பேச்சுரிமை கூட இல்லாத நாடாளுமன்றம்
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தபோது அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருகிறது என்றும், அதற்குச் சிறந்த உதாரணமாக வவுனியாவில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் குறிப்பிடலாம் என்றும் அங்கு சுட்டிக்காட்டியுள்ள ஆளுங்கட்சி எம்.பிக்கள், அரசுக்கு சர்வதேசரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கூட்டமைப்புக்கு சர்ச்சைக்குரிய விடயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இடமளிக்க கூடாதென்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான நீண்ட வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற பின்னர் ஆளுங்கட்சிக் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் டி.எம்.ஜயரட்ண, நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை கோருவதற்கான உரிமை தமிழ்க் கூட்டமைப்புக்கு உள்ளதென்றும், அரசு இதற்கு உரிய பதிலை வழங்கத் தயாராக வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விவாதத்திற்கான நேரத்தை ஒதுக்க ஆளுங்கட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
**********************

அதிகரிக்கும் அவுஸ்திரேலிய அழுத்தம்
கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளை கோரியுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக கான்பெராவுக்கான இலங்கைத் தூதர் திசாரா சமரசிங்கவை விசாரிக்க ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை தயாராகி வரும் நிலையில் இக்கோரிக்கை எழுந்துள்ளது.
மனித உரிமைகள் விஷயத்தில் கொமன்வெல்த்துக்கு ஏதேனும் அக்கறை இருக்குமெனில், அது தன் உறுப்பு நாடுகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களுக்கான சர்வதேச ஆணையத்தின் ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் ஜோன் டவுட் கூறினார்.
இம்மாதம் 28 முதல் 30-ம் தேதிவரை பெர்த்தில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் கூட்டத்திலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
ஐ.நா.வின் நிபுணர் குழு பரிந்துரைகளின்படியோ அல்லது போர்க்குற்ற நீதிமன்றம் கூறியுள்ளதற்கு ஏற்பவோ இலங்கை தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வரை அந்நாட்டை கொமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.
இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட கோரிக்கையாகும் என்று ஜோன் டவுட் கூறினார்.
கொமன்வெல்த் அமைப்பில் இலங்கை உள்பட 54 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதனிடையே, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இரண்டாம்நிலை இலங்கைத் தூதரான ஜகத் டயஸ் மீது வந்துள்ள போர்க்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப் போவதாக சுவிட்சர்லாந்து சட்டமாஅதிபர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளவும் மருத்துவமனைகளை பீரங்கிகளால் தகர்க்கவும் உத்தரவிட்டதாக டயஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கொழும்புவுக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.
**********************

அவுஸ்திரேலிய சாட்சிய பதிவு
அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி வன்னிப் போர் குறித்த தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவருடன் டொக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர்.
இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது.
சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் விபரித்துள்ளார்.
வைத்தியசாலைகளை நோக்கி இலங்கை இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கடலில் நின்ற இலங்கைக் கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்தியது தொடக்கம் இவர் விவரித்துள்ளர்.
இலங்கையின் முன்நாள் கடற்படை தளபதி தற்போது அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருக்கிறார்.
இவருக்கு எதிராகவும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித கோகன்னவுக்கும் எதிராகவும் மற்றும் தற்சமயம் அவுஸ்திரேலியா செல்லவிருக்கும் மகிந்தருக்கு எதிராகவும் அவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவுஸ்திரேலிய சமஷ்டி காவல்துறையினர் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது இலங்கைக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
அத்துடன் அவர் கொடுத்த முறைப்பாட்டை விசாரிக்கவும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து அவுஸ்திரேலியாவின் தேசிய தொலைக்காட்சி 9 நிமிட நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளது.
அதில் போர் குற்றத்துக்காக இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்தரை விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள அவுஸ்திரேலிய செல்லும் மஹிந்த ராஐபக்ச மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் மீனா கிருஷ்னமூர்த்தி இறங்கியுள்ளார்.
**********************

அறிக்கை வெளியாகுமாம்!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே இறுதியறிக்கையின் பரிந்துரைகள் இருக்கும் என அவர் கூறினார்.
இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இறுதி அறிக்கைக்கான முதற்கட்ட திட்டவரைபுகளை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
2 ஆம், 3 ஆம் கட்டத் திட்டவரைபுகள் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தினமும் 10 முதல் 12 மணித்தியாலங்களை இறுதியறிக்கை தயாரிக்கும் பணிக்காக ஆணைக்குழு உறுப்பினர்கள் செலவிட்டு வருகின்றனர்.
தயாரித்த திட்டவரைபுகளை மீள வாசித்தல், செம்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறிருந்தாலும் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் தமது பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார
மக்களிடமிருந்து கிடைத்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் அமைந்திருக்கும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ளனர்.
5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் எழுத்து மூலம் தமது சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
இவற்றில் அதிகமானது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களுடையது.
இவை தொடர்பில் நிபுணர்களுடன் ஆராய்ந்து இறுதியறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
**********************

சுற்றிந்திரிந்த கணக்கு சொல்லும் பீரிஸ்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த பத்து மாதங்களில் 17 நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதம் வரையான காலப் பகுதியிலேயே 17 நாடுகளுக்கு இவர் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
ஜி.எல்.பீரிசின் இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதேவேளை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இந்தக் காலப்பகுதியில் 7 நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெற்றி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவை சுற்றுலாப் பயணங்கள் அல்ல. சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு பரப்புரைகளையும் முறியடிப்பதற்காகவே இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாரிஸ் சென்றிருந்த போது 40 மணித்தியாலங்களையும், குவைத்தில் 24 மணித்தியாலங்களையும், ஐக்கிய அரபு எமிரேட்சில் 36 மணித்தியாலங்களையும் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விமானம் ஏறுவதற்கு முன்னர் அரைமணி நேரம் கூட ஓய்வெடுக்காமல், சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை முறியடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
**********************

கொலைக்கு காரணம் யார்?
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கின் குற்றவாளியை பாதுகாக்கும் அரசியல்வாதியே வெள்ளைக் கொடி வழக்கின் பின்னணியில் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி வழக்கின் சாட்சியங்கள் முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் இதனை குறிப்பிட்;டுள்ளார்.
வெள்ளைக் கொடி வழக்கு ஒன்றரை வருடங்கள் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இதற்காக அரசாங்கத்தின் பணத்தை விரயமாக்கினர்.
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க சட்ட வல்லுநர்கள் தேவையில்லை.
உண்மை, நீதி என்பவற்றை அறிந்த எவருக்கும், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க முடியும்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பாதுகாக்கும், அரசியல்வாதியே, வெள்ளைக் கொடி வழக்கின் பின்னணியில் உள்ளார்.
இதனை அச்சமின்றி தாம் எதிர்கொள்வோம் எனவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார்.
**********************

வடக்கில் உரிமை இல்லை
சுப்ரமணியம் தவபாலன் மீதான தாக்குதல் உட்பட வடக்கில், தொடர்ந்தும் நடைபெற்று வரும் மக்கள் விரோத செயற்பாடுகள், வடக்கில் உள்ள மக்களுக்கு சிவில் உரிமைகள் கிடைக்காது போயுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் அரசாங்கத்தின் துஷ்ட அரசியலை தோற்கடிக்க அணி திரண்டு வருமாறு சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தவபாலன் கடந்த 16 ஆம் திகதி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்ரமணியம் தவபாலன் கடந்த 16 ஆம் திகதி யாழ் நகரில் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை சோசலிச இளைஞர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் பிமல் ரத்நாயக்க தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அண்மைகாலமாக யாழ்ப்பாணத்தில் சிவில், ஜனநாயக செயற்பட்டாளர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம், தொடர்ந்தும் கூறி வரும் நிலைமையிலேயே இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இது வடக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமை அல்ல.
அரசாங்கம், தெற்கிலும் பாதாள உலகத்தினருக்கும், வன்முறை அரசியலுக்கும் இடமளில்லை எனக் கூறி வரும் சூழலில், துப்பாக்கிகள் வெடிப்பதாகவும் கொலைகள் நடந்து வருவதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
**********************