Saturday 29 October 2011

செய்திகள் 29/10


தொடரும் பேச்சுக்கள்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அங்கு தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 26ம் நாள் தொடக்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் 4ம் நாள் வரை பேச்சுக்கள் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளதாக பிபிசி கூறியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரையும் இதுவரை சந்தித்திருப்பதாகவும், மேலும் சில முக்கிய செனெட் உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குக் கூறினாலும், உண்மையான நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பது குறித்து சந்திப்புகளின் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல்தீர்வு தொடர்பாக சிறிலங்கா அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு மீது அரசியல்தீர்வு குறித்து ஏற்கனவே அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதை சிறிலங்கா அரசு சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற, ஏனைய அனைத்துலக சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் சந்திப்புகளின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றுடன் அமெரிக்கச் சந்திப்புகளை முடித்துக் கொண்டு கனடா செல்லவுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன் தவிர்ந்த ஏனைய மூவரும், மீண்டும் அமெரிக்கா திரும்பி வந்து பேச்சுக்களைத் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புலம்பெயர் சமூகத்துடனான சந்திப்புக்குச் கனடா செல்வதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

தீர்வின் அவசியம்
இலங்கை அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க, கொழும்புடன் பேசித் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக வொஷிங்ரனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்பதே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர்.
இந்தச் சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கத் தமிழ்த் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வழக்கத்துக்கு மாறாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் சந்திப்புக்களை நடத்தியிருப்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
அதற்காக அவை ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன்தான் நடக்கின்றன என்று கருதிக் கொள்ளத் தேவையில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் கூறின.
ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, இலங்கை அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப் பிடியாக இல்லாமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்க முடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*********************

அலறும் அரசாங்கம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களை ஐ.நா சபையின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதென்பது யதார்த்தமற்ற செயற்பாடாகும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா.சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த புதன்கிழமை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பான் கீ மூனுடனான சந்திப்பில் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் லின் பஸ்கோ மற்றும் விஜய் நம்பியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண பங்குபற்றியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மஹிந்த சமரசிங்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை பான் கீ மூன் சந்திக்க மாட்டார் என்றே தாங்கள் நம்புவதாகவும் இதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே உள்ளதெனத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்.
இன்னும் பல தமிழக் கட்சிகள் நாட்டில் உள்ளன என்பதை தாம் ஐ.நா.வின் பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளதாகவும் கூட்டமைப்பினரைச் சந்திப்பது யதார்த்தமற்ற விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்டவர்களிடம் இருந்து தமிழர்கள் நியாயமான தீர்வை எதிர்பார்ப்பது காலத்தை வீணடிக்கும் செயலென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
*********************

இன்று கனாடவில் பொங்கு தமிழ்
கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன.
காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது.
வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆர்வமுள்ள பல தொழிலதிபர்கள் தாமே முன்வந்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்கள்.
2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், கனடாவின் முதலாவது பொங்கு தமிழ் எந்த இடத்தில் நடைபெற்றதோ, அதே குயின்ஸ் பார்க் திடலில் இன்று சனிக்கிழமை பகல் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கு தமிழ் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்குக் கட்டியம் கூறுவதுபோல இங்குள்ள சமூக வர்த்தகர்கள் பொங்கு தமிழ் பொறிக்கப்பட்ட மஞ்சள்-சிவப்பு வர்ணத்தினாலான பிளாஸ்டிக் பைகளில் தமது விற்பனைப் பொருட்களை வழங்கி தங்களுடைய தார்மீக ஆதரவைக் காட்டினர்.
இதனை ஏற்பாடு செய்துள்ள கனடியத் தமிழர் சமூகத்துக்கும் தமிழ் இளையோர் சமூகத்துக்கும் அங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள் என்பன ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
*********************

எதிர்க்கும் ஸ்ரீலங்கா
பொதுநலவாய நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க சில நாடுகள் எடுத்துள்ள முயற்சியை இலங்கை எதிர்க்குமென்று அந்நாட்டு அரச பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆலோசனைக் குழுவொன்று தாயாரித்துள்ள அறிக்கையொன்று, பொதுநலவாய நாடுகளில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எப்படியான அணுகுமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று 100க்கும் அதிகமான ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படியான, மனித உரிமைகள் பற்றிய சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் யோசனைக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் தமது எதிர்பபைத் தெரிவிக்கும் என்று மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான பந்துல ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய வேண்டும், குறிப்பாக இலங்கையில் நடைபெற்றதாக்க கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன.
*********************

உதவும் ஜப்பான்
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது.
டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
அதேநேரம், வடபகுதியில் முன்னெடுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.
குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
*********************

வலியுறுத்தும் ரணில்
அவைரும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்ட எந்தவொரு திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய தேசிய கட்சி வழங்குமென அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 33 அமர்வில் பங்கேற்கும் முகமாக கொழும்பிற்கு சென்றுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து பாராளுமன்றங்களுக்கும் இதனை விட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனதும் தமது கட்சியினதும் எண்ணமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வினைப் பெறவேண்டிய அவசியம் தமக்குள்ளதாகவும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அரசாங்கமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், இந்த வருட இறுதிக்குள்ளாவது அதற்கான உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் தமது வார்த்தை அளவில் இதனை வரையறுக்காமல் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் விகரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
*********************