Sunday 9 October 2011

செய்திகள் 08/10


தேர்தல் இன்று
கொழும்பு மாநகரசபை உட்பட 17 மாநகர சபைகள், ஒரு நகரசபை, 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
23 உள்ளூராட்சி சபைகளில் 420 உறுப்பினர் பதவிகளுக்காக 6 ஆயிரத்து 488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆயிரத்து 167 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
2010 வாக்காளர் பட்டியலின் பிரகாரம் இம்முறை தேர்தலில் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
கொழும்பு, தெஹிவளை கல்கிஸை, ஸ்ரீஜயவர்தனபுரகோட்டே, மொறட்டுவ, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, குருநாகல், பதுளை, அநுராதபுரம், இரத்தினபுரி ஆகிய 17 மாநகரசபைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
அத்துடன், கொலன்னாவ நகரசபைக்கான தேர்தலும், கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேசசபை, குண்டசாலை பிரதேசசபை, கங்கவட்ட கோரளை பிரதேசசபை, ஹம்பாந்தோட்டை பிரதேசசபை மற்றும் சூரியவெள பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகின்றது.
இதில் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 163 கட்சிகளும், 132 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன.
இதில் 9 கட்சிகளதும், 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 160 கட்சிகளும் 104 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
அதற்கமைய 160 கட்சிகள் சார்பில் 3ஆயிரத்து 813 வேட்பாளர்களும், 104 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 2ஆயிரத்து 675 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இதேவேளை, முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே அறிவிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.
இத் தேர்தலில் விசேடமாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கென 6 பேர் அடங்கிய குழு ஒன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தேர்தலைக் கண்காணித்து தேர்தலின் பின்னர் அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
****************

தேர்தலுக்கு காவல்?
இன்று நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலையிட்டு பல வாக்களிப்பு நிலையங்களில் விசேட காவல்துறை அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் தொடர்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
பதற்றம் நிறைந்த பகுதிகள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களிலேயே விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
விசேடமாக, கொலன்னாவ, வெல்லம்பிட்டி,ராஜகிரிய, நுகேகொட, கல்கிஸ்ஸ தெஹிவளை, அநுராதபுரம், காலி, மாத்தறை உட்பட பல பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைங்களிலேயே விசேட காவல்துறை அதிரடிப்படையினர் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதிகளவு காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************

பதிவுக்கு இடைக்கால தடை
தற்போதுள்ள லங்கா பத்திரிகையின் உரிமத்தை வெளி நபர்கள் பதிவு செய்வதை தடுத்து நிறுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
லங்கா பத்திரிகையின் உரிமத்தை வைத்திருக்கும் வெனுர ஹேரத் என்பவர் முன்வைத்துள்ள முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பிரதீப் ஜயதிலக இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொன் தர்மசேன மற்றும் நாத் ஜயலால் எனப்படும் வெளி நபர்களால் லங்கா பத்திரிகையை மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரிசீலித்த நீதிமன்றம் பதிவுத் திணைக்களத்திற்கு இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
****************

குற்றம் சாட்டும் கூட்டமைப்பு
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு செல்லவுள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் நடத்தவுள்ள சந்திப்பின் போதே, அரசியல்தீர்வு பற்றிய தமது கவலைகளை அவரிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தம்முடன் சிறிலங்கா அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பேச்சுக்களை தொடங்கிய போதும், எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தம்முடன் பேச்சு நடத்துவதை விட உள்ளூராட்சித் தேர்தலின் மீதே சிறிலங்கா அரசாங்கத்தின் கவனம் அதிகமாக உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன், இதனால் தாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் நாள் நடைபெறவிருந்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்ட நிலையில், அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் எப்போது என்று அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பாக சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முதலில் உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன், தேவைப்பட்டால் அதனை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் இதைவிட வேறு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
****************

சந்திக்கும் தூதர்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவினரை சந்திக்கவுள்ளார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினருடனான சந்திப்பு பெரும்பாலும் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று கொழும்பை சென்றடையும் மத்தாய், நாளை காலை யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றார்.
நிருபமாராவ் அமெரிக்காவின் இந்தியத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர் ரஞ்சன் மத்தாய் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார்.
அதன்பின்னர் மத்தாய் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
****************

எச்சரிக்கும் இனவாதம்
தனது நாட்டுப் பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்திய அரசு, இலங்கை உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்காவின் இனவாத அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அரசின் தலையீட்டை தாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர எச்சரித்துள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இன்று இலங்கை செல்கின்றார்.
அவரது இலங்கைப் பயணத்தில் அரசுத் தலைவர் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆராய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பினரிடமும் இந்த விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டறிவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார்.
இந்திய அரசு மட்டுமல்ல, மேற்கத்தேய நாடுகளும் இலங்கை உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றன.
இந்திய அரசின் அழுத்தங்களே நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன.
சர்வதேச சமூகத்தின் தலையீட்டை தாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இந்திய நாட்டில் தீர்க்கமுடியாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.
அவற்றைத் தீர்ப்பதற்கு முதலில் வழிதேடுங்கள். பின்னர் மற்றைய விடயங்களைப் பார்க்கலாம் என இந்திய அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அவர் இந்தியாவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஆயுதப் போராட்டம் மூலம் பெறமுடியாததை சிலர் இராஜதந்திர ரீதியில் நகர்வுகளை முன்னெடுத்துப் பெற முனைகின்றனர்.
இதற்கு இந்தியா உட்பட மேற்கத்தேய நாடுகள் துணை நிற்கின்றன.
அந்நாடுகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அதனையே நிரூபிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்பிற்கு இந்தியாவின் துணையை பெற்றபோது அமைதியாக மௌனம் காத்தவர்கள், இனப்பிரச்சனைக்கான சமாதானத் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவதானிகள் இத்தகைய நிலையில் ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
****************

நாய்களுடன் காவலுக்கு பயணம்
மாலைதீவின் அட்டு நகரில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள 17வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவினரே பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு கட்டமாக சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் கே-9 காவல்துறை மோப்ப நாய்களும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் பணிக்காக மாலைதீவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சார்க் மாநாடு நடைபெறும் இடத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றிலும், பாதுகாப்புப் பணிகளில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் அவர்களின் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சும், தேசிய பாதுகாப்பு படையும் சிறிலங்கா அதிரடிப்படை அங்கு பணியில் அமர்த்தப்படவுள்ள தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
மாலைதீவு விமான நிலையத்தில் மோப்ப நாய்களைப் பயன்படுத்த முன்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அங்கு மோப்பநாய்கள் உள்ளனவா என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ள மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பேச்சாளர் அப்துல் ரகீம், மாலைதீவில் பாதுகாப்புத் தேவைகளுக்கு நாய்களை பயன்படுத்த சட்டங்கள் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாய்களுக்கு இஸ்லாமிய மதத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மாலைதீவில் நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்கவும் பாதுகாப்பு சோதனைகளுக்கும் மாலைதீவின் அனைத்துலக விமான நிலையத்தில் மோப்பநாய்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உள்ளூர் அதிகாரிகள் மோப்பநாய்களை சரியாகப் பராமரிப்பதில்லை என்பதால் அவை விரைவில் நோயுற்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை சார்க் மாநாட்டுக்கு சிறிலங்காவில் இருந்து மோப்ப நாய்கள் கொண்டு வரப்படுவது ஒரு விவகாரம் அல்ல என்று மாலைதீவு அதிபரின் ஊடகச் செயலர் மொகமட் சுகைர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் அனைத்தும் பாதுகாப்புக்கான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவத்தினருக்கான பாரஊர்திகளை பங்களாதேஸ் வழங்குவதாகவும், காவல்துறை படையினரை இந்தியா அனுப்புவதாகவும், 4ஆயிரத்து 600 டொலர் பெறுமதியான கருவிகள் பாகிஸ்தானில் இருந்து அடுத்த சில நாட்களில் வரவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
****************

வெட்டிக் கொலை
வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச் செல்ல முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 வயதான தம்பிராசா சௌந்தர்ராஜன் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர்.
தொழில் நிமித்தம் வட்டக்கச்சியில் தங்கியிருந்தார்.
இவரது உறவினரான 39 வயதான மாயவனூர் தியாகராசா சாந்தி கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்தில் படுகாயமடைந்தார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காகப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவரும் இவரது இளவயது மகளும் அண்மையிலேயே அந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்திருந்தனர்.
****************