Sunday 9 October 2011

செய்திகள் 09/10


தப்ப முனையும் போர்க் குற்றவாளி
நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவேந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க் மாவட்ட மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சவேந்திர சில்வாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை கடந்த செப்ரெம்பர் 23ம் நாள் கையளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒக்ரோபர் 14ம் நாளுக்குள் தனது பதிலை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.
முன்னதாக இராஜதந்திர விதிவிலக்கை புறக்கணித்து தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் போவதாக சவேந்திர சில்வா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அவரது சட்டவாளர்கள் இராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டும்படி ஆலோசனை கூறியுள்ளனர் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை வழங்கும் எனவும் கொழும்பு வார இதழ் ஒன்று தனது பதிப்பில் கூறியுள்ளது.
******************

இந்தியாவுக்கு தெளிவுபடுத்த விரும்பும் கூட்டமைப்பு
கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைச் செயலர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றது என்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்த விடயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை விடவும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாடுகள், உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையில் உள்ளடக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முதலில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும், பின்னர் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய தரப்பினர் இதனை எதிர்த்தால் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கம் நினைத்தால் எதிர்ப்பை முறியடிக்க முடியும் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.               
******************

தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு
தேர்தல் முடிவுகளையடுத்து கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் கூடுதலான காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்ற நிலைமை ஏற்படக் கூடிய சில பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு கடமைகளுக்காக 84 காவல்துறை ரோந்துப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவ போன்ற பிரதேசங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
******************

வன்முறை நிறைந்த தேர்தல்
வன்முறைகள் அரங்கேறியநிலையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21 சபைகளைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபையிலும் வெற்றிபெற்றுள்ளன.
மூன்றாவது கட்டமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்
******************

கொழும்பை தக்க வைக்க முடியாத அரசு
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறியுள்ளது.
இந்தக் கட்சி 1 லட்சத்து ஆயிரத்து,920 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக ஏ. ஜே.எம் முஸ்ஸமில் களமிறங்கியிருந்தார்.
ஆளுந்தரப்பில் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சரான மிலிந்த போட்டியிட்டார்.
இந்தக் கட்சி 77ஆயிரத்து, 89 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதேவேளை, மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26ஆயிரத்து, 229 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9ஆயிரத்து, 979 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சுமார் அறுபது வருடங்களாகத் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் வசமே இருந்து வரும் கொழும்பு மாநகர சபையைத் தம்வசமாக்கிக் கொள்ளும் பொருட்டு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மட்டுமின்றி அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் களம் இறங்கி பிரசார நடவடிக்கைகளையும் மக்கள் சந்திப்புகளையும் செய்திருந்தனர்.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் களமிறங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான கொழும்பு மத்திய தொகுதியில் அளுந்தரப்பு படுதோல்வியடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்புக்குத் தாவிய முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான மஹ்ரூபின் கோட்டையாக கொழும்பு மத்திய தொகுதி திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
******************

கூட்டு யாருடன்?
53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.
இறுதி முடிவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபையில் ஐதேகவுக்கு 24 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 16 ஆசனங்களும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 6 ஆசனங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும், சுயேட்சைக்குழு-1, சுயேட்சைக்குழு- 2 மற்றும் ஜேவிபிக்கு தலா 1 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
அறுதிப் பெரும்பான்மைக்கு 27 ஆசனங்களைப் பெறவேண்டியுள்ள நிலையில், ஐதேக 24 ஆசனங்களையே பெற்றுள்ளது.
இந்தநிலையில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இல்லையேல், இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவை ஐதேக பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
******************

கல்முனையில் எதிர்கட்சியான ததேகூ
கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன் வசமாக்கிக் கொண்டது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22ஆயிரத்து, 356 வாக்குகள் 11 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9ஆயிரத்து, 911 வாக்குகள் பெற்று 4 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8ஆயிரத்து, 524 வாக்குகள் 3 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2ஆயிரத்து, 805 வாக்குகள் 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது.
******************

பதறியடித்த கோத்தாபாய?
முல்லேரியா சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளார்.
துமிந்தவின் நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்ட கோத்தபாய, ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைக் காப்பாற்றித் தருமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, குறித்த மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவரின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டதை அறிந்து வைத்தியசாலைக்கு விரைந்து வந்த சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் இந்தக் கொலைக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அவருக்குச் சார்பாக அப்போதைய அரசுத் தலைவரான சந்திரிகா குமாரதுங்கவுடன் பகிரங்கமாக கருத்து வெளியிட்டு மோதிக் கொண்டவர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர என்பது குறிப்பிடத்தக்கது.
******************