Saturday 22 October 2011

செய்திகள் 22/10


பொறுக்க முடியாத அரசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பது தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இலங்கை அரசு ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அதிருப்தியை அமெரிக்காவிலுள்ள இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளுக்கு கோடிகாட்டியிருக்கின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிங்ரன் பதவியேற்ற பின் இலங்கை அரச தலைவரைக்கூடச் சந்திக்காத ஒரு சூழ்நிலையில் அரசியற்கட்சியொன்றை சந்திப்பது இராஜதந்திர நடைமுறைகளை மீறும் செயல் என்று இலங்கை ராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்பிற்கும், அமெரிக்க வெளியுறவுச் செயலருக்குமிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறுமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
********************

உருவாக்கியது யார்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் தமிழ் மக்களால் உருவாகப்பட்டதல்ல எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
வடக்கு கிழக்குவிவகாரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் ஐ.தே.க. முன்னாள் தலைவர் டல்லி சேனநாயக்கவும் மாபெரும் சிங்கள தலைவர்கள் எனவும் அவர்கள் தமிழர் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அமுல்படுத்தியிருந்தால் இந்நாடு ஒருபோதும் வன்முறை நிலைக்கு சென்றிருக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கூறினார்.
தற்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகளானவை அவ்விரு மாகாணங்களிலும் இன விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சி என தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
இந்நடவடிக்கையை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைப்பதற்கான முயற்சியென தமது கட்சி சந்தேகிப்பதாகவும் சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் தமிழ்மக்களின் கலாசார மொழி அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
********************

வலுவடையும் கிளர்ச்சி
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் மக்கள் எழுச்சிகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
சட்ட ஒழுங்குகள் அதிகார வர்க்கத்தினரால் மிகவும் மோசமான முறையில் உதாசீனம் செய்யப்படுகின்றன.
இதுவே மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல நாட்டின் அனைத்து பகுதிகளிலுமே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் விஸ்தரித்துள்ளது.
எனவே அரசின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தலைவர்களே இலங்கைக்கு தேவையென்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சீனோர் விருந்தகத்தில் வைத்து, வைபவரீதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரான விக்கிரமபாகு கருணாரட்ன சத்தியப்பிரமாணம் மேற் கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலே இதனைக் கூறினார்.
********************

தமிழரை அகற்றும் இலட்சியம்
1926 இல் உருவான தமிழருக்கு எதிரான பிரச்சினை தேசிய இனப்பிரச்சினையாக உருவெடுத்துள்ள இன்றைய நிலையில் தமிழ் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றிவிடும் இலட்சியத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம். சுவாமிநாதன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கில் காணிப்பதிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாவதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.
பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் இது அறியப்படாத விடயம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழருக்கு எதிரான பிரச்சினை 1926 களிலேயே தோற்றம் பெற்று விட்டது. அந்தப் பிரச்சினை இன்று 2011 வரை நீடித்துக் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
தற்போது வடக்கு கிழக்கில் காணிப்பதிவினை மேற்கொள்வதாக சுற்று நிருபம் வெளியிட்டிருக்கின்றது.
இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அத்துடன், இது அடிப்படையற்றதுமாகவே இருக்கின்றது.
வடக்கு கிழக்குக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள இந்த காணிப்பதிவு சுற்று நிருபம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் அங்கீகரித்ததன் பின்னரே இது நடைறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனாலும், அது நடைபெறவில்லை. தமிழ் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றுவதையே அரசாங்கம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
********************

காணிகள் மீளகையளிக்கப்படுமா?
1983 காலப்பகுதியில் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
தற்போது பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட உறுதி மொழியின் பிரகாரம் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏன் திருப்பி ஒப்படைக்க முடியாதிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் காணிப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அங்குள்ள எம்.பி.க்களினதும் பங்களிப்புக்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட வடக்கில் காணிப் பதிவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
காணிப் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் எழுந்துள்ள இந்த காணிப் பிரச்சினை கொழும்பு காலிமுகத்திடலிலும் ஏற்பட்டுள்ளது.
காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
காணி உரிமை எனப்படும் போது அது எல்லா வகையிலும் சட்ட ரீதியானதாக அமைய வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த நிலைமை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
********************

பாதுகாப்பே இல்லாத இடத்தில் சிறுவர் பாதுகாப்பு கிடைக்குமா?
சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான செயற்றிட்டமொன்று யாழ்.மாவட்டத்தில் அமுல் படுத்தப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகமும் யுனிசெவ் நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளன.
நாட்டின் ஏனைய பாகங்களில் இவ்வாறான செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக யாழ்.மாவட்டத்தில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சிறுவர் உரிமைகளுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட்டவரும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிளுடனான கலந்துரையாடல் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது பின்னர் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
********************

தனியார் பல்கலைக்கழகத்திற்கு புலம் பெயர் சமூகம்?
உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இவ்வாறு சிதறிப்போயுள்ள தமிழ்க் கல்வியலாளர்களது சக்தியை ஒரு புள்ளியில் குவித்து அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு கல்வியூட்டுவதற்கு உறுதியான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், விஞ்ஞானபீடத்தின் பௌதீகத்துறை விரிவுரை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களில் பொதுவாக 5 சதவீதமானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.
90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி இருந்தும் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்க அரச பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதி இல்லை.
இதனால், தனியார் பல்கலைக்கழங்கள் இங்கே அவசியமாகத் தேவைப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், கல்விச்சேவையின் செலவுகளை விலை நிர்ணயம் செய்து வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
********************