Friday 14 October 2011

செய்திகள் 13/10


அம்பலமாகும் உண்மை
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் போல் மோர்பி தெரிவித்துள்ளார்.
நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எட்ட முடியும் என மற்றுமொரு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை மூடி மறைப்பதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என செனல்4 ஆவணப்படத்தின் இயக்குனர் கெலம் மெக்யார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அனர்த்தக்குழு, சர்வதே மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் செனல்4 ஆவணப்படத்தை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தன.
செனல்4 ஆவணப்படம் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
****************

விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தும் ஸ்ரீலங்கா
ஜேவிபியில் பிளவுபட்டுள்ள பிறேம்குமார் குணரட்ணம் தலைமையிலான அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக முடிச்சுப் போடும் முயற்சிகளில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவை ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டில உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் இருந்து பிறேம்குமார் குணரட்ணம் அணியினருக்கு நிதியுதவி கிடைத்துள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுச் சேவை ஈடுபட்டுள்ளது.
இந்த அணிக்கு கனடா மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளின் தொடர்புகள் மூலம் பணம் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த அணியில் உள்ள இரண்டு முக்கிய பிரமுகர்களான திமுது ஆட்டிக்கல, வருண ராஜபக்ச ஆகியோர் ஹோமகமவில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைத்திருந்த வைப்புக் கணக்குகளை தேசிய புலனாய்வுச் சேவை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இவர்களின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற சரியான விபரத்தை அந்த அதிகாரி வெளியிடாத போதும், 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஜேவிபியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள இந்த அணியினர் இதுவரை சுமார் 6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும், தேசிய புலனாய்வுச் சேவை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இது ஜேவிபியின் வங்கிக் கணக்கில் இருந்து பெறப்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
****************

மனு நிரகாரிப்பு, அடுத்து என்ன?
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை சேர்த்துக் கொள்ளும் வகையில் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதென் அறிவிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர், தடுப்புக்காவலில் உள்ளவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கும் வகையிலும், உயர்பாதுகாப்பு வயலங்களைத் தொடர்ந்து பேணும் வகையிலும், அவசரகாலச்சட்ட விதிகள் சிலவற்றை பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் இணைக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் அது அடிப்படையற்றது என்று கூறி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்துள்ளது.
****************

தேர்தல் முறை மாற்றம் கோரும் ஐதேக
உத்தேச தேர்தல் முறைமையை அரசாங்கம் தற்போதேனும் அமுல்படுத்த வேண்டுமேன ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு அரசியல் காரணமாக குரோத அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர்.
விருப்பத் தெரிவு மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையொன்று உருவாக்குவது குறித்த உத்தேச யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது குறித்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தினால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும்.
தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
****************

சனத்தொகை அதிகரிப்பின் பாதிப்பை எதிர் கொள்ளும் ஸ்ரீலங்கா
எதிர்வரும் ஒக்ரோபர் 31ம் நாளுடன் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுவதாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்காவும் பல சவால்களை சந்திக்கும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.
சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.
வேலையின்மை அதிகரிப்பதுடன், சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் சிறிலங்கா சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருவதாகவும், ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிறிலங்காவின் சனத்தொகையில் 10 வீதமாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025இல் 20 வீதமாக உயரும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எதிர்வு கூறியுள்ளது.
****************

ஆலோசனை சொல்லும் ரணில்
எதிர்கால பொருளாதார வீழ்ச்சியை சரிபடுத்த இலங்கை அரசாங்கம், தென்கொரியா, ஜேர்மனி போன்ற நாடுகளின் முன் மாதிரியை பின்பற்ற வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க சம்மேளனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை, சர்வதேச பொருளாதார நிலையை எதிர்கொள்ள வேண்டுமாயின், சமூக சந்தை பொருளாரத்தை உள்ளீர்க்க வேண்டும்.
உலகில் இன்று, பொருளாதார வீழச்சி ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை தொடர்ந்தும் தற்போதைய பொருளாதார முறையை கடைப்பிடித்தால் அந்த வீழ்ச்சியை எதிர்கொள்ள முடியாது.
இலங்கையின் ஏற்றம் பெற்று வரும் வாழ்க்கை செலவை சமாளிப்பதற்காக மக்கள் தமது செலவுகளை குறைத்துக் கொண்டிருக்க முடியாது.
இந்தநிலையில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரிய சம்பள உயர்வுகளும் சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.
அல்லது கிரீஸ் நாட்டில் இன்று இடம்பெறுகின்ற நிலையே இலங்கையிலும் இடம்பெறும்.
கிரீஸில் தொழிலற்றோரின் வீதம் உயர்ந்தமையை அடுத்தே அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து செல்கிறது.
எனவே இலங்கை தொழிலற்றோர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
****************

வெள்ளைக் கொடி வழக்கு
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் ஊடகத்துறைக்குப் பொருத்தமான ஒருவர் அல்லவர் என்றும், அவர் 20 க்கு 20 கிரிகெட் ஆட்டத்துக்கே பொருத்தமானவர் என சிரேஷ்ட சட்டத்தரணியான நளின் லதுவஹெட்டி தெரிவித்தார்.
வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************