Wednesday 26 October 2011

செய்திகள் 26/10


வழக்கை நிராகரித்த பின் போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்?
இலங்கையில் மோதல் நடைபெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அவுஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் அவுஸ்திரேலியாவின் ஒத்த எண்ணப்பாடுகளைக் கொண்ட உலக நாடுகள் கூறுவதைப்போல, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் முழு அளவில் நடைபெறவேண்டும் என்பதை அவுஸ்திரேலியாவும் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
தீவிரமான குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் இறுதி யுத்த கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுவது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னதாக அவுஸ்திரேலியாவைப் போன்றே கனடாவும் இவ்வாறு வலியுறுத்தலொன்றை விடுத்திருந்தது.
போர்க்குற்றங்கள் சம்பந்தமான நீதியான விசாரணை நடக்காத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டிவருமெனவும் கனடா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும், போர்க்குற்றச்சாட்டுகளை முற்றுமுழுதாக நிராகரிக்கும் இலங்கை அரசு, 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பு இந்த விவகாரத்தினால் பிளவுபட்டுவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தி தமது நாட்டில் தீவிர அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
********************

பாரபட்டமாக நடக்கும் அவுஸ்திரேலியா!
சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்தது தமக்குப் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாரபட்சமாக தாம் நடத்தப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தால் அது அனைத்துலக சட்டங்களை மீறியதாகி விடும் என்று அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் மக் கிளெல்லன்ட் கூறியிருப்பது தவறானது என்று முன்னாள் அவுஸ்ரேலிய இராஜதந்திரியான புரூஸ் ஹை ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய சட்டம் பற்றியோ அனைத்துலக சட்டம் பற்றியோ அவர் பார்க்கவில்லை.
கொமன்வெல்த் மாநாட்டின் சூழ்நிலை கருதி அவர் அரசியல் ரீதியாகவே முடிவெடுத்துள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரைக் காப்பாற்ற அவுஸ்ரேலிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அங்கு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
********************

அவுஸ்திரேலியாவில் பேச்சு நடத்தும் மகிந்த
கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க எட்டு நாள் பயணமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று அவர் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய சந்திப்பின் போது அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு விவகாரங்கள், அவுஸ்ரேலியாவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளுதல், கொமன்வெல்த் மாநாடு, 2013இல் சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள கொமன்வெல்த் மாநாடு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தங்கியுள்ள விடுதியி இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பங்கேற்றிருந்தார்.
இதனிடையே வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டை முன்னிட்டு பேர்த் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடைபெறும் போது பேர்த் நகரில் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் தமது கருத்தை அமைதியாக வெளிப்படுத்தலாம், ஆனால் கொமன்வெல்த் மாநாட்டிலோ, பொது நிகழ்வுகளிலோ தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் தற்கொலை
தீபாவளியன்று சமயச் சடங்கில் பங்கேற்க அவுஸ்ரேலிய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிட்னி குடிவரவு வதிவிட வீடுமைப்புத் தொகுதியில், நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் மரணமாகியுள்ளார்.
இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வில்லாவூட் தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில், இன்று மரணமான இளைஞரும் ஒருவராவார்.
சூட்டி என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட இவர் அனைவருடனும் நட்புடன் பழகக் கூடியவர் என்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்குடையவர் என்றும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார்.
எனினும் இவரது முழுப்பெயர் மற்றும் சொந்த இடம் பற்றிய தகவல்களை அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமய விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் இவர் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதுபற்றி நண்பர்களுடன் பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவர் இது தொடர்பாக விண்ணப்பம் செய்தது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நேற்று நிராகரித்து விட்டதாகவும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் குறிப்பிட்டுள்ளார்.
மரணமான இளைஞரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தகவல் பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருபதுகளின் நடுப்பகுதி வயதையுடைய இந்த இளைஞரின் அடைகலக் கோரிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பாதுகாப்பு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால், அவர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய இவர் முன்னதாக வில்லாவூட் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவருடைய இளைய சகோதரன் சிறிலங்காவில் வாழ்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே இவரது மரணம் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு என்று அவுஸ்ரேலியாவின் முன்னாள் குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
********************

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட அழைப்பு விடுக்கும் ரணில்
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளது, இவற்றை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பதவிகளை வழங்கும் நிகழ்வு ஒன்று சிரிகொத்தவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது அரசாங்கம் பல்வேறு வழிகளில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டது.
அரசுத் தலைவர்த் தேர்தலுக்கு நிகரான முக்கியத்துவத்துடன் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் கட்சியை வீழ்ச்சியடைச் செய்தது.
காவல்துறை சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
17ம் திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்ததன் மூலம் அரசாங்கம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கையகப்படுத்திக் கொண்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
********************

அச்சம் வேண்டாம் என அழைக்கும் சரத் பொன்சேகா
லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார
ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
********************

சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பு கோரும் பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ்பல்கலைக்கழக மாணவர் மீது நடாத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியாக மற்றுமொரு மாணவனும் இனந்தெரியாத நபர்களின் மிலேச்சதனமான தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளவர் கலைப்பீட நான்காம் வருடத்தைச்சேர்ந்த செல்வன் இராஜவரோதயம் கவிராஜன் எனும் மாணவனாவார்.
கடந்த 22ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பரந்தன் பூநகரி வீதியால் தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 8.45மணியளவில் ஆட்டோவில் வந்த தாக்குதலாளிகள் சரமாரியாக கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தலைவர் தாக்கப்பட்டு பல்கலைக்கழக வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ள அதே காலப்பகுதியில் இம்மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
மாணவர் தாக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வடபகுதி இராணுவத்தளபதி மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தமது கல்விச் செயற்பாட்டைத் தொடரலாம் என்று வடபகுதி இராணுவத்தளபதி உறுதி மொழி வழங்கி சுமார் 48 மணித்தியாலத்திற்குள் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளது பலத்தசந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
மேலும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பகிஸ்கரிப்பை இடைநிறுத்துவது தொடர்பாக மாணவர் ஒன்றியம் சாதகமாக பரிசீலித்து வரும் இச்சூழ்நிலையில் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளமையால் இது தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டி உள்ளது.
எனவே இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு பாதுகாப்புத்தரப்பினர் உறுதி மொழி வழங்கிய பின்னரும் இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கின்ற நிலையில் எவ்வாறு மாணவர்கள் தமது கல்வியை சுமூகமாகத்தொடர முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
எனவே தமிழ் பேசுகின்ற மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிக்கொள்வதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்ஒன்றியம், விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.
********************

ஆட்சியாளர்களின் கொலை கலாச்சாரத்தை கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள்?
நாடு முழுவதும் கொலை கலாசாரம் உருவாகி உள்ளதாகவும் கடந்த 8 ஆம் திகதி கொட்டிகாவத்தை- முல்லேரிய பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை ஏற்படாத வகையில் கூட்டாகவோ, கட்சி என்ற முறையிலோ தனித்தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொட்டிக்காவத்தை- முல்லேரிய பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை 23 உள்ளுராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் தினம் கொலன்னாவ அரசியல் வரலாற்றிலும், நாட்டில் அரசியல் வரலாற்றிலும் அழியாத தினமாக மாறியது.
இந்த தினத்தில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மற்றும் கவலைகுரிய சம்பவத்தின் பிரதிபலன்கள் எவ்வித பேதமும் இன்றி சகலரும் உணரும் வகையில் இருந்தது.
பல காலமாக தம்முடன் அரசியலில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மரணமும், பிரதேசத்திற்கு பொறுப்பான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்களும், தமக்கு மிகவும் கவலையளிக்கும் சம்பவங்களாகும் என குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னர் இருந்த விருப்பு வாக்கு தொடர்பான குரோதங்கள் இத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
********************

ஸ்ரீலங்காவில் கால் பதிக்கும் பாகிஸ்த்தான் இராணுவம்?
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுரகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் பத்துப் பேரும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்கள் பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது.
இரு நட்புநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேணல் சபீர் நிசார் தலைமையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பத்துப் பேரும் கடந்த 13ம் திகதி சிறிலங்கா சென்றிருந்தனர்.
எதிர்வரும் 28ம் திகதி வரை இவர்கள் அங்கு தங்கியிருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சூடான் மற்றும் கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான பணியில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா சென்று இரண்டு வாரங்களாகியுள்ளன.
ஆனாலும் இவர்கள் நாடு திரும்புவதற்கு மூன்று நாட்கள் இருக்கின்ற நிலைலேயே இதுபற்றிய செய்திகள் வெளியே கசிய விடப்பட்டுள்ளன.
அத்துடன் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களான பாகிஸ்தான் படை அதிகாரிகள் இன்னமும், வன்னியில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளை சென்று பார்வையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
********************