Wednesday 12 October 2011

செய்திகள் 10/10


காணிப்பதிவை தடுத்த நிறுத்தக் கோரும் கூட்டமைப்பு
புதிய பிரதேசசெயலகங்களை நிறுவும் நோக்கில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்க மற்றும் தனியார் காணிகளை மீள்பதிவு செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயை நேற்றுமாலை சந்தித்துப் பேசிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிடுகையில், காணிகளை மீள்பதிவு செய்யும் நடவடிக்கை சந்தேகத்துக்குரியது என்றும் இனரீதியாக பாரபட்சமான ஒரு நகர்கவாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த காணி மீள்பதிவுகளின் அடிப்படையில் புதிய பிரதேச செயலகத்தை முல்லைத்தீவில் உருவாக்க சிறிலங்கா அரசு முனைவதாகவும், இந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசியல்தீர்வு தொடர்பாக சிறிலங்கா அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்கள் தொடர்பாக இந்தியா மகிழ்ச்சியடைவதாக ரஞ்சன் மத்தாய் தம்மிடம் தெரிவித்தாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாகவும் ரஞ்சன் மத்தாயிடம் தாம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
********************

இந்தியாவிடம் முறைப்படும் தமிழ் பிரதிநிதிகள்
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இந்தியாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை நேற்று கொழும்பில் வைத்து சந்தித்த போது வடக்கில் தமிழர்கள் காணிக்கள் பதிவு செய்யப்படுவது குறித்து முறையிடப்பட்டது.
அத்துடன் சிங்கள குடியேற்றங்களுக்காக எல்லை நிர்ணயம் செய்யப்படுவது குறித்தும் முறையிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையை தம்முடன் நடத்துகின்ற போதும் அது தட்டிக்கழிக்கும் போக்குடன் இடம்பெற்று வருகிறது.
வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் மீது தொடர்ந்தும் பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் ஒரு பக்கத்தில் பேச்சுவார்த்தை மறு பக்கத்தில் தமிழர் விரோத போக்கு என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரஞ்சன் மாத்தாயிடம் முறையிட்டனர்.
இந்த நிலைமைகள் தொடர்பில் இன்று அரசுத் தலைவரை சந்திக்கும் போது ரஞ்சன் மாத்தாய், கேள்வி எழுப்பவேண்டும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
********************

காலதாமதம் ஏன்?
யுத்தம் முடிவடைந்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கில் தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் இன்னமும் முழுமை பெறாதுள்ளதற்கான காரணங்கள் என்ன என்று நேற்று யாழ்ப்பாணத்தில் அரச பிரதிநிதியான ஆளுநரிடம் இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ரஞ்சன் மாத்தாய் தலைமையிலான இந்தியக் குழுவினர் நேற்றுப் பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சென்றனர்.
விமானம் மூலம் பலாலியை சென்றடைந்த அவர்கள், உடனடியாகக் காங்கேசன்துறைமுகத்துக்குச் சென்று அதன் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆராய்ந்தனர்.
துறைமுகத்தின் புனரமைப்புக்கான முன்னோடியாக, விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை அகற்றும் பணியை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளையும் மத்தாய் மேற்பார்வையிட்டார்.
அங்கிருந்து பளைக்குச் சென்ற மத்தாய் குழுவினர், அங்கு இந்திய நிதி உதவியில் கட்டப்பட்டுவரும் வீட்டுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்தியாவால் அமைத்துத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்ட 50ஆயிரம் வீடுகளின் முதல் தொகுதியான ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக பளையில் 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள அந்த வீடுகளைப் பார்வையிட்ட மத்தாய், இந்தத் திட்டத்தில் காணப்படும் தாமதங்களுக்கான காரணங்களையும் ஆராய்ந்தார்.
பிற்பகல் 1.30 மணிக்கு மத்தாய் குழுவினர் ஆளுநர் தலைமையிலான அரச அதிகாரிகள் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அப்போது கண்ணிவெடிகளை அகற்றுவதில் காணப்படும் தாமதங்களாலேயே மீள்குடியமர்வில் தாமதங்கள் ஏற்படுவதாக அரச தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது என்று அரச மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தமிழ் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் இந்தியக் குழுவினருக்கு விளக்கினார்.
இது தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் அவர் கையளித்தார்.
********************

குற்றவாளிகளின் அரங்கம்!
பாதாளக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டில் இவ்வாறான கொடூரச் சம்பவங்களே அரங்கேறும் என சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
முல்லேரியா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் அரசுத் தலைவரின் ஆலோசகரும், தொழிற் சங்கப் பணிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்தில் கொழும்பு மாவட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களுக்கும், துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் டியூ. குணசேகரவிடம் கேட்டபோது, பாதாளக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள்தான் நடைபெறும் எனக் கூறினார்.
********************

வாக்குகளை பிரிக்கும் முயற்சி
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டமையாலேயே ஏற்கனவே இருந்த இரண்டு ஆசனங்களை இழக்கவேண்டி ஏற்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையான சுயேச்சைக் குழுக்களைப் போட்டியிடச் செய்து தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு இம்முறை கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கென்றே சுயேச்சைக் குழுக்கள் பல களத்தில் இறக்கப்பட்டன.
இதனாலேயே ஏற்கனவே நம்மிடமிருந்த ஆறு ஆசனங்களில் இரண்டை இழந்து தற்பொழுது நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளோம் என்றார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவான செய்தியொன்றை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ளது.
தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டுமாயின் அரசாங்கம் மேலும் நம்பிக்கையூட்டும் செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
********************

தவறிய விருப்பு வாக்கு
கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகள் பற்றிய விபரத்தை சிறிலங்கா தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஐதேக சார்பில் மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏ.ஜே.எம். முசம்மில் 55ஆயிரத்து, 448 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரை அடுத்து கிருசன் ஜோன் ராம் 9ஆயிரத்து 966 வாக்குகள் பெற்று இரண்டாது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுக்கு 28ஆயிரத்து, 433 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.
ஆனால் இந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் கிடைத்த மொத்த வாக்குகள் 26ஆயிரத்து, 229 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மனோ கணேசனுக்கு 28ஆயிரத்து, 433 விருப்புவாக்குகள் கிடைத்ததாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், எஸ் முகவரியன், குருசாமி நளன்ராஜ் தேவன், தங்கேஸ் வர்கீசன், எஸ்.பாஸ்கரன், லோறன்ஸ் பெர்னான்டோ ஆகியோர் கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐதேக சார்பில் 2 தமிழர்கள், 9 முஸ்லிம்கள், 13 சிங்களவர்கள் என 24 உறுப்பினர்கள் கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியில் நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் 32ஆயிரத்து, 103 வாக்குகளையே பெறமுடிந்துள்ளது.
ஆளும்கட்சியின் சார்பில் கொழும்பு மாநகரசபைக்கு தமிழர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகரசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 6 முஸ்லிம்களும் 10 சிங்களவர்களும் தெரிவாகியுள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் 6 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபையில் இம்முறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் 8 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை 27 சிங்களவர்களும், 18 முஸ்லிம்களும் இம்முறை கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தெகிவளை- கல்கிசை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண 2ஆயிரத்து 171 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.
********************

ஏமாற்றும் அரசு!
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு சிறந்த பதிலளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புத்திசாதுரியமாக பதிலளித்துள்ளனர் எனவும் சமாதானத்தை நிலைநாட்டி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்தை மக்கள் வரவேற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பல உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.
அரசாங்கத்தின் வேகமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
********************