Saturday 15 October 2011

செய்திகள் 15/10


அழுத்தம் வருமா?
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் தொடர் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்.
இதனால் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பிளவுகள் ஏற்படலாம் என்று கனேடிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளார்.
சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தமக்குத் திருப்தி தராது போனால் 2013இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டில், இதுதொடர்பாகக் கலந்துரையாடப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் ஸ்ரீபன் ஹாபர் தனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்துவார் என்றும் கனேடியப் பிரதமரின் தொடர்பாடல்களுக்கான இணைப்பணிப்பாளர் அன்ரூ மக் டௌகல் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
கனேடிய ஊடகம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில், பிரதமர் ஸ்ரீபன் ஹாபர் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படுத்திய நிலைப்பாட்டில் இருந்து தடுமாறவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து கொமன்வெல்த்தில் கலந்துரையாடத் தேவையில்லை என்று தமது நாடு கருதுவதாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வரா கூறியுள்ளார்.
பேர்த்தில் பிளவுகளை உருவாக்க தாம் விரும்பவில்லை என்றும், கனடாவும் அதையே விரும்பும் என்று கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டையும் சிறிலங்கா தூதுவர் நிராகரித்துள்ளார்.
அதேவேளை கனடாவின் தேசிய ஜனநாயக் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ஹெலன் லவென்டியர், சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்றே தமது கட்சி கருதுவதாக கூறியுள்ளார்.
கனேடியப் பிரதமர் பேர்த் மாநாட்டில் இதுபற்றி கலந்துரையாடுவார் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொமன்வெல்த் தென்னாபிரிக்கா விவகாரத்தில் கையாண்டது போன்று இந்த விடயத்திலும் முக்கியமான பங்கை வகிக்க முடியும் என்றும் ஹெலன் லவென்டியர் கூறியுள்ளார்.
***********************

காரணமின்றி ரத்து
ஓக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் மிஸிஸாகா நகரில் உள்ள லிவிங் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடக்கவிருந்த சிறீலங்கா அரசின் சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி காரணங்களின் அறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை மிஸிஸாகா நகர காவல்துறையினர் கனடிய தமிழர் பேரவைக்கு தெரிவித்தனர்.
எதுவித காரணங்களின் அறிவிப்புமின்றி இக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கனடிய தமிழரின் ஒருங்கிணைந்த எதிர்ப்பும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டமுமே முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒக்டோபர் 16, 17ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மக்கள் கூடத்தேவையில்லை என கனடிய தமிழர் பேரவையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் பாரதூரமான போர்க் குற்றங்களை புரிந்திருக்கும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சிகளை மிஸிஸாகா நகரில் நடக்க அனுமதிக்க வேண்டாமென மிஸிஸாகா நகரபிதா மற்றும் அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளும் இணைத்தளம் மூலமான மனுவில் கனடிய தமிழ் மக்கள் தொடர்ந்து கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பெற்றுள்ளது.
இவ் மனுவானது எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி மிஸிஸாகா நகரபிதாவின் காரியாலத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
***********************

குழம்பிய மகிந்த
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே செயற்படுகின்றது.
எனினும், அரசு ஒருமித்த கருத்துடன் செயற்படுகிறதா என்பது சந்தேகமாகவே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு அரசே தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேசுவதற்கு முன்வரவேண்டும் என நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
இது தொடர்பாக மாவை சேனாதிராஜா தெரிவித்தபோது பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே கலந்துகொள்கிறது.
ஆனால், அரசு ஒருமித்த கருத்துடன், நோக்கத்துடன் பங்குகொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பேச்சில் தமிழ் மக்களின் ஒருமித்த யோசனைகளையே கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.
எனினும், அரசு அவ்வாறு செயற்படுவதில்லை. ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி, திகதிகளை இழுத்தடிக்கிறது எனத் தெரிவித்தார்.
***********************

பதிவை எதிர்த்து வழக்கு
வடக்கில் உள்ள அனைத்துக் காணிகளையும் அரசு பதிவு செய்வதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் கூட்டமைப்பின் சார்பில் அடுத்த வாரம் இந்த மனுவைத் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வடக்கில் காணிகளைப் பதியும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து பொதுமக்களிடம் சந்தேகங்களும் குழப்பங்களும் நிலவுகின்றன.
வடக்கில் உள்ள சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர்.
எனினும் அரச அதிகாரிகள் பதிவுகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் அவசர அவசரமாகக் காணிகளை அரசு பதிவு செய்ய வேண்டியதன் நோக்கம் என்ன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கேள்வி எழுப்பி வந்ததுடன் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கான பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சபையில் கொண்டு வந்தார்.
அதனை வழிமொழிய எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அப்போது சபையில் இல்லாத காரணத்தால் விவாதத்தை நடத்த முடியாமல் போனது.
இந்த வாரத்தில் காணிப் பதிவு குறித்து மீண்டும் விவாதம் நடத்துவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு எடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட மறுநாள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைக் கூட்டமைப்பு தாக்கல் செய்யும்.
நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்த பின்னர் நாடாளுமன்றில் விவாதத்தைக் கோரினால், நீதிமன்றில் உள்ள விவகாரம் குறித்துப் பேச முடியாது என்று தட்டிக் கழித்துவிடுவார்கள்.
அதனால் நாடாளுமன்ற விவாதம் முடியும் வரைக்கும் காத்திருக்க வேண்டி இருக்கிறது என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
***********************

நிதி நிறுத்தம் - மக்கள் அவலம்
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறீலங்கா அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் இடம்பெறாமையால் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிப்பு, பொக்கனவட்டுவாள், புதுமாத்தளன், போன்ற 16 கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவதனால் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியல் மீள்குடியேற்றம் எனத் தெரிவித்து கோம்பாவிலிருந்து வெகுதூரத்தில் உள்ள திம்பிலி எனும் காட்டுப்பகுதிக்குள் குடிநீர், மருத்துவம், மலசல கூடவசதிகள் இன்றி கால்நடைகளைப் போன்று எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மரநிழலின் கீழ் சிறீலங்கா அரசினால் விடப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிறுத்திவிட்ட நிலையில் பெருமளவில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மக்கள் காணப்படுகின்றார்கள்.
இங்கு இடம்பெறும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் படையினரின் பிரசன்னமே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எந்த ஒரு பொது அமைப்புக்களும் உள் நுழைய படையினர் அனுமதியளிக்கவில்லை.
காடுகளை அகற்றுவதிலிருந்து மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் அனைத்தும் படையினரால் மேற்கொள்ளப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்இ
***********************

பாரபட்டசம் காட்டும் அமைச்சர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்திக்கென நிதி எதுவும் வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுவிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.
இதன் போது பிரதேச அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாருக், உங்கள் சபைகளின் அபிவிருத்திக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படமாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக கூறியிருக்கின்றார்.
இதனை அடுத்து கூட்டத்தில் இருந்த மக்கள், இது எந்த வகையில் நியாயம்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் ஆட்சேபம் வெளியிட்டிருக்கின்றனர்.
நிலைமை கட்டுக்கடங்காது சென்றதை அடுத்து, நிதிக்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் பின்னர் கூடி ஆராய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாருக் மக்களைச் சமாளித்துச் சென்றதாக நெடுங்கேணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.             
***********************

ஏமாற்ற வழிதேடும் ஆட்சியாளர்
உள்ளூராட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை துரிதமாக நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு முன்னர் அதனை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்; முல்லேரியா சம்பவத்தின் மூலம் தேர்தல் முறையிலும் மாற்றம் வேண்டும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் முறையை மாற்றுவதற்கான காலம் எழுந்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது வாசிப்பு முடிவடைந்துள்ளது. சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளதால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சகல கட்சிகளினதும் இணக்கத்துடன் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அல்லது வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் துரிதமாக அதனை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
***********************