Wednesday 12 October 2011

செய்திகள் 11/10


சர்ச்சைக்கு முடிவு வேண்டும்
மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட வேண்டும் என பொது மக்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைத் தொடர்ந்து அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்னிக் களம் சிறப்பு நிகழ்சியை நடத்தியிருந்தது.
அந்த நிகழ்ச்சியின் தொகுப்பு எமது இணையத்தளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேயர்கள் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம் நேற்றைய செய்திகளில் இடம்பிடித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக பலநூற்றுக்கணக்கான நேயர்கள் தமது அபிப்பிராயங்களை மின்னஞ்சல், தொலைநகல் மற்றும் தொலைபேசி வாயிலாக முன்வைத்துள்ளனர்.
தமிழ் மக்களின் முக்கியமானதும், அவசியமானதுமான நிகழ்வான தேசிய மாவீரர் தின நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்து முரண்பாடுகளை தீர்க்க முயற்சிகள் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றை ஒழங்குபடுத்தும் தரப்புக்கள் ஒன்றிணைந்து உருப்படியான வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களினது கருத்தாக உள்ளது.
இதுவே ஐ.பீ.சித் தமிழின் அவாவுமாகும்.
அந்த வகையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு மாவீரர்களை கௌரவப்படுத்தும் உணர்வுபூர்வமான இந்த நிகழ்வுகளை வேறுபாடு இன்றி நடத்த வேண்டும் என்பதுவே தற்போதைய ஒரே இலக்காக உள்ளது.
இந்த அப்பழுக்கற்ற மக்களின் அவாவை வெளிப்படுத்தும் கடமை தமிழ் மக்களின் விடுதலைக்கான வேணவாவை பிரதிபலிக்கும் மக்களின் தேசிய உணர்வூடகமான அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழழுக்கு உள்ளது என்பதை நாம் நன்குணர்ந்துள்ளோம்.
அந்த வகையில் மக்களின் சிபார்சுகளை தொகுத்து சம்பந்தப்படவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
மாவீரர் தின நிகழ்வுகளை பிரித்தானியாவில் கடந்த காலங்களில் நடத்தியவர்களே இந்த ஆண்டும் நடத்தவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டாலும் அந்த ஏற்பாடுகள் குறித்த குழப்பங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதனை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினரும் இணைந்த குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் சிபார்சு செய்துள்ளனர்.
அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கம், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபை, லண்டன் உயர் வாசற் குன்று முருகன் ஆலய நிர்வாக சபை, லண்டன் நாகபூசனி அம்மன் ஆலய நிர்வாக சபை, அனைத்துலக செயலகம், தலைமைச் செயலகம் என்பற்றில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு, சமூக பிரதிநிதிகளில் இருந்து மருத்துவர் சத்தியமூர்த்தி போன்றவர்களை உள்வாங்கி ஆண்டு தோறும் நிகழ்வை நடத்தும் தேசிய நினைவேந்தல் அகவத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை மக்கள் வெளியிட்டுள்ளனர்.
இது மக்களின் விருப்பத்தின் வெளிப்படுத்தலே அன்றி இது ஐ.பீ.சித் தமிழின் தனிப்பட்ட கருத்தல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இதேவேளை கடந்த ஆண்டுகளில் நடந்த மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்கள் அது தொடர்பான கணக்கறிக்கைகளை மக்கள் முன்பாக சமர்ப்பித்து மக்களை தெளிவுபடுத்தி வெளிப்படைத் தன்மையுடன் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களைம், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதுடன் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மாவீரர் தின நிகழ்வுகளை அரசியலாக்குவதையோ, வர்த்தகமாக்குவதையோ தமிழ் மக்கள் விரும்பவில்லை என அவர்கள் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணாந்து விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ், சமூக நலன் சார் தேசிய நலன் மீதான அக்கறை கொண்ட ஊடகம் என்ற அடிப்டையில் மக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்களின் தொகுப்பு என்பதை இந்த தருணத்தில் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
******************

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு
தமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரமாக வொஷிங்டனுக்கு விரையவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது.
வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போது நடத்தப்பட்டுவரும் தீர்வுப்பேச்சுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.
அதேசமயம் கட்சித் தலைவர் என்ற ரீதியில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் சந்தித்து இலங்கையில் தமிழர் அரசியல் பற்றி கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்வுப்பேச்சுக்களில் கூடுதல் அக்கறை செலுத்திவரும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த பேச்சுக்களின் முன்னேற்றம், தாற்பரியம் குறித்து அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த அமெரிக்க விஜயமும் அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக கடந்தமாதம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது தமிழர் பிரச்சினை குறித்து அவ்வப்போது அமெரிக்காவை அறிவுறுத்துமாறு வினயமாக வேண்டியிருந்ததாகவும், அதன் ஓர் அம்சமாகவே கூட்டமைப்பு அங்கு சென்று நிலைமைகளை விளக்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூடட்டமைப்பினர் அங்கிருந்து கனடா சென்று கனேடிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் சந்திப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாயை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுப் பேச்சுகள் குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் இதன்போது கவனமாகக் கேட்டு அறிந்து கொண்டதாகத் தெரிகின்றது.
******************

இந்தியாவின் வற்புறுத்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலமும், பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவும், இனப்பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று விரைவாக எட்டப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் சிறிலங்கா அரசிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் இருப்பதாகவும், ரஞ்சன் மத்தாய் சிறிலங்கா அரசிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புப் பணிகள் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து ரஞ்சன் மத்தாய் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை 52 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோடியாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 600 வீடுகள் இன்னமும் கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 200 வீடுகளை அமைப்பதற்கான காணிகள் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பளைப் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளைச் சென்று பார்வையிட்டுள்ள ரஞ்சன் மத்தாய், அந்த வீடுகளை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, கட்டப்பட்ட வீடுகளில் சமையலறைப் புகைபோக்கிகள் அமைக்கப்படாத குறைபாட்டை பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் காங்கேசன்துறைத் துறைமுக புனரமைப்பு மற்றும் தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ள ரஞ்சன் மத்தாய் அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மூழ்கியுள்ள கப்பல்களின் சிதைவுகளை அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதாகவும் கூறியுள்ள ரஞ்சன் மத்தாய், அங்கு ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றுவதற்கே இந்தியா 19 மில்லியன் டொலரை ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது மேலதிகமாகவுள்ள நான்கு கப்பல்களின் சிதைவுகளையும் அகற்ற வேண்டியுள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு மேலிட அனுமதி விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் மத்தாய், இது இரு நாடுகளின் மீனவர்களினதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்றும், இருநாடுகளின் மீனவர் அமைப்புகள் இணைந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை தமது கடற்படை தாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்ததாகவும் ரஞ்சன் மத்தாய் மேலும் கூறியுள்ளார்.
******************

குடும்ப அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், அரச அதிகாரத்தில் உள்ள அவரது இரு சகோதரர்களுடனும் நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா சென்றிருந்த ரஞ்சன் மத்தாய் நேற்றுக்காலை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவுகள் குறித்து, குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து கோத்தாபய ராஜபக்சவிடம், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபடுவதான குற்றச்சாட்டை கோத்தாபய ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ரஞ்சன் மத்தாய் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளும் தொடர்புபட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் ஹர்ஸ்வர்த்தன் சிரிங்லா, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, டக்ளஸ் தேவானந்தா, லலித் வீரதுங்க, வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குவைத் சென்றிருப்பதால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
இதனிடையே, சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று மாலை புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
******************

கொழும்பின் நிலை என்ன?
கொழும்பு மாநகர சபையை ஓர் அதிகார சபையாக மாற்றும் திட்டத்தை ஐ.தே.க. வெற்றிகரமாக தடுத்து நிறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்காக அதை கொழும்பு மாநகர அதிகார சசபையாக மாற்றும் தனது திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மேலும் கூறுகையில், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகளை இடிப்பதை தாம் தடுத்து நிறுத்தியதைப் போன்று கொழும்பு மாநகர அதிகார சபைத் திட்டத்தையும் தாம் தடுத்து நிறுத்துவோம் என்றார்.
அவர்கள் கொழும்பில் தோல்வியைத் தழுவிய பின்னரும் அவர்கள் எப்படி இவ்வாறு பேசலாம் என ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதேவேளை கொழும்பு மாநகர சபை பிரதி மேயராக, டைட்டஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் ரணில் கூறினார்.
கொழும்பு நகரவாசிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐ.தே.க. செயற்படும் என அவர் தெரிவித்தார்.
கொழும்பின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், தான் அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து சமூகங்களுக்காகவும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
தன் மீது நம்பிக்கை வைத்த அனைத்து சமூகத்தினருக்கும் தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
தன்னை எப்போதும் மக்கள் அலுவலகத்திலோ வாசஸ்தலத்திலோ சந்திக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
******************

குண்டர்களுக்கு எதிராக குண்டனின் நடவடிக்கை
முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து செயற்படும் குண்டர் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
முக்கிய பிரபுக்களின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் இராணுவத்தினர் கண்காணிப்பு செயற்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட குரோதம் நாட்டின் சட்ட ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
முல்லேரியாவில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்கள் சில முக்கிய பிரபுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறிச் செயற்படும் முக்கிய பிரபுக்கள் குறித்து இராணுவத்தினர் கண்காணிப்பு செய்யவார்கள் எனவும் மீறிச் செயற்படுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் குண்டர் குழுக்கள் அரசியல்வாதிகளைப் பயன்படுத்திக் கொள்வதனை வழமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த காலத்திலும் இவ்வாறு பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்பு பேணப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகாவத்தை பாதாள உலகக் கோஷ்டி பிரச்சினையை இல்லாதொழித்துள்ளதாகவும் இதேபோன்று கொலன்னாவையிலும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
******************

இந்திய நிதியுதவி
வட மாகாணத்தில் 79 பாடசாலைகளை புனரமைக்கவென இந்திய அரசாங்கம் நிதியுதவி அளித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த 79 பாடசாலைகளை புனரமைக்கவே இந்நிதியுதவி வழங்கப்படுவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வும் இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக் கே காந்தாவும் நேற்று கைச்சாத்திட்டனர்.
இத்திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு 187 மில்லியன் ரூபா நிதியுதவி அளித்துள்ளது.
9 மாதங்களுக்குள் குறித்த 79 பாடசாலைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
******************

தப்ப முனையும் மகிந்த
வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் அரசுத் தலைவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வியன்ன பிரகடனத்தின் அடிப்படையில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கோ அல்லது மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வாவிற்கோ எதிராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புபை இன்று, அந்நாட்டு நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பானது விடுதலைப் புலி ஆதரவாளர் உருத்ரகுமாரனுக்கு பாரிய தோல்வியாக அமைந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷின் மனைவியினால் அரசுத் தலைவர் மற்றும் சாவேந்திரா சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நியூயோர்க் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதுர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணைகளுக்காக தூதுவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
******************