Saturday 29 October 2011

செய்திகள் 28/10


மகாநாடு ஆரம்பம்
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகின்றது.
தேசிய மற்றம் பூகோளமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
*********************

மகிந்தவை குறிவைக்கும் ஊடகங்கள்
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.
இந்த மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு பல்வேறு அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீதே ஊடகங்களின் கண் பதிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக கொமன்வெல்த் அமர்வுகளில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மீதே ஊடகங்களின் கண் இருக்கும்.
ஆனால் இம்முறை போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, பிரித்தானிய மகாராணிக்கு இணையாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதற்கு முன்னர் சிறிலங்காவுக்கு இத்தகைய ஊடக முக்கியத்துவம் கொமன்வெல்த் அமர்வுகளிலோ, பிராந்திய நாடுகளின் அமர்வுகளிலோ கிடைத்ததில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் சமிந்திர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவையும், மகிந்த ராஜபக்சவும் அனைத்துலக ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சிறிலங்கா விவகாரத்தை குறிப்பாக போர்க்குற்ற விவகாரத்தை, அவுஸ்ரேலிய ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கோணங்களில் அலசி வருகின்றன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை அவுஸ்ரேலியா அரசு தடுத்ததும் அங்கு விமர்சனங்களை தோற்றிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிராக மென்போக்குடன் நடந்து கொள்வதாக அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள், முன்னாள் இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தி வெஸ்ரேன் ஒஸ்ரேலியன் ஊடகத்தில் சிறிலங்கா மூலம் பிரிசோதிக்கப்படும் கொமன்வெல்த்தின் பெறுமானம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் செற்றி, கொமன்வெல்த்தின் ஒருபகுதி நாடுகள் சிறிலங்கா விவகாரத்தில் குருட்டுக் கண்ணுடன் செயற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

ஸ்ரீலங்காவை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை
கனடாவைப் பின்பற்றி சிறிலங்காவில் நடைபெறும் அடுத்த கொமன்வெல்த் மாநாட்டை அவுஸ்ரேலியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சியின் தலைவர் பொப் பிறவுண் அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு உரிய பதிலை சிறிலங்கா அளிக்காது போனால், அடுத்த கொமன்வெல்த் மாநாட்டை அவுஸ்ரேலியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த கொமன்வெல்த் கூட்டம் சிறிலங்காவில் நடைபெற்றால், போர்க்குற்றங்கள், குடிமக்களின் உரிமைகள் குறித்து செய்வதற்கு ஒன்றுமேயில்லாது போய்விடும்.
அத்துடன் கொமன்வெல்த்தில் அவற்றின் கதையும் முடிந்து விடும்.
சிறிலங்காவை சரியான திசைக்கு கொண்டு வரமுடியாது போனால் கொமன்வெல்த் பற்றி பெரியதொரு கேள்வியை எழுப்பும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*********************

பிளவுபட்ட பொதுநலவாயம்
உறுப்பு நாடுகள் மத்தியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பொதுலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பேர்த்தில் சந்திப்பை நடத்தினர்.
எனினும் அதில் இணக்கம் எதனையும் காண முடியவில்லை.
இந்தநிலையில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாமல் போகலாம் என்று ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.
உறுப்பு நாடுகளின் மத்தியில் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக ஒரு ஆணையாளரை நியமிப்பது தொடர்பிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த யோசனையை கனடா, அவுஸ்திரேலியா உட்பட்ட 11 நாடுகள் முன்வைத்தன.
எனினும் இலங்கை, இந்தியா உட்பட்ட சில நாடுகள் இதனை எதிர்க்கின்றன.
இலங்கையை பொறுத்தவரை தற்போது சர்வதேசத்தின் முன்னால் தாம் காட்டிக் கொண்டிருக்கும் தமது நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இந்த ஆணையாளர் நியமிப்பினால் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறது.
அதனாலேயே இத் தீர்மானத்தினை நிராகரிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை மேற்குலகை இலங்கையின் விடயத்தில் தலையிடமல் பாதுகாப்பதில் திடமாக உள்ளது.
இதன் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் யோசனையை சில நாடுகளின் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.
இதேவேளை இந்தவிடயத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீர்மானம் எடுக்காவிட்டால் அது மாநாட்டின் தோல்விக்கு சமன் என்று இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர் அஜித் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
*********************

மாணவர்களின் பகிஸ்கரிப்பு முடிவு
யாழ். சமூகப்பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமது வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆம் திகதி முதல் மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போரட்டமானது இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது.
மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை இடைநிறுத்தி விரிவுரைகளுக்கு செல்லுமாறு கோரி இருந்ததற்கு அமைவாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்கவும், தமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர் பகிஷ்கரிப்பால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு சிவில் சமூக பிரதி நிதிகள் இணக்கம் தெரிவித்ததினாலும், தமது விரிவுரை பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
*********************

இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்
புனர்வாழ்வு நிலையங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் மேலும் 700 பேர் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் தெரிவிக்கிறது.
வவுனியா, வெலிகந்த புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கான புனர்வாழ்வு நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு குறிப்பிட்டார்.
இன்னும் சில தினங்களில் அவர்களையும் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவிக்கிறார்.
புனர்வாழ்வு நிலையங்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 100 முன்னாள் பெண் உறுப்பினர்களும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
*********************

முறையான சட்டம் கோரும் துறவி?
நாட்டில் முறையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சரியான சட்டக் கட்டமைப்பு அமுல்படுத்தாத வரையில் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஏனைய அரசாங்கங்களுக்கு கிடைக்காத மாபெரும் அதிகாரம் காணப்படுவதாகவும் அதனை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரிய சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் வாக்காளர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகவும், மக்கள் சேவையாற்றுவதில் அவர்களுக்கு நாட்டமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*********************

தற்கொலை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
அவுஸ்ரேலியாவின் சிட்னி வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்ரேலியாவின் அகதிகள் பற்றிய கொள்கை குறித்த கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டிவிகடன் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட 27 வயதான ஜெயசங்கர் ஜெயரட்ணம் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அதிகாலை, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்து ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இருந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரது தஞ்சக் கோரிக்கை கடந்த ஓகஸ்ட் மாதமே ஏற்கப்பட்டு விட்டது.
ஆனால் அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கை கிடைப்பது தாமதமாகியதால் தான் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவுஸ்ரேலிய அதிகாரிகள் அகதிகள் விடயத்தில் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்வதால் தான் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவுஸ்ரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்காக இவருடன் இன்னமும் 461 பேர் வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் காத்திருந்ததாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
ஜெயசங்கரை உரிய நேரத்தில் வெளியே சென்று வாழ அனுமதித்திருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று ஜெயசங்கரின் சட்டவாளர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு மிகவும் சோகமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இது ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல என்று அகதிகள் நடவடிக்கைக் கூட்டமைப்பின் பரப்புரையாளர் ஜெமீமா மௌபிறே தெரிவித்துள்ளார்.
தடுப்பு நிலையங்களை மூடிவிட்டு அகதிகளை சமூகத்தில் இணைக்குமாறு தாம் அரசாங்கத்திடம் கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தியே ஜெயசங்கர் தற்கொலை செய்துள்ளதாக அவரது நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதுபற்றிக் கருத்து வெளியிட குடிவரவு அமைச்சர் பொவன் மறுத்து விட்டார்.
இந்தத் தற்கொலையை அடுத்து அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோரிய ஆறு பேர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் வில்லாவூட் நிலையத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட ஜெயசங்கர் பற்றிய அறிக்கை கொமன்வெல்த் ஆலாட்சி அதிகாரி பணியகத்துக்கு ஆறு நாட்கள் முன்னதாகவே கிடைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய விசாரணைகள் தொடங்கப்படாதிருந்தன.
இவரது மரணம் வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் உள்ள தமிழ் அகதிகளை மட்டுமன்றி ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயசங்கர் தடுப்பு நிலையத்தில் இருந்த போது தமிழ்ப் பெண் ஒருவரைக் காதலித்தாகவும், அவரை விரைவில் திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இவரது தாய், தந்தையர் இறந்து விட்டதாகவும், எப்போதும் சகோதரன் மற்றும் சகோதரி பற்றியே கவலைப்படுவார் என்றும் நண்பர்கள் மேலும் கூறியுள்ளனர்.
ஜெயசங்கரின் தாய் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டதாக அவரது நண்பர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இவரது மரணம் பற்றிய தகவலை சிறிலங்காவிலுள்ள சகோதரனிடம் தெரிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று கூறிவந்த அவுஸ்ரேலிய அதிகாரிகள், நேற்று அந்தத் தகவல் பரிமாறப்பட்டு விட்டதாக இன்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் வடக்கிலுள்ள டாவின் தடுப்பு நிலையத்தில் நேற்றிரவு மற்றொரு அகதி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர் ஏனையவர்களால் காப்பாற்றப்பட்டு டாவின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

தடுமாறும் ஐதேக
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் சிரால் லக்திலக்க ஆகியோரின் உறுப்புரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நிராகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் இதற்கான யோசனையை கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்தார்.
எனினும் இக் கோரிக்கையை நிராகரித்த கட்சியின் செயற்குழு, இருவரும் முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பனவின் தலைமையிலான குழுவினால் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவித்தது.
இந்தநிலையில் குறித்த இரண்டு உறுப்பினர்களும் மன்னிப்பு கோரினால், அவர்களுக்கு எதிராக தடையை நீக்கிக்கொள்ளலாம் என்ற யோசனையை தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் இருவரினதும் கட்சி உறுப்புரிமை மீண்டும் வழங்கப்படும் என்று கட்சியின் செயற்குழு தரப்புகள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஒழுங்குகளை மீறி கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கோட்டே மற்றும் மாத்தறையில் இரண்டு சுயாதீனக்குழுக்களை தேர்தலில் போட்டியிட வைத்தமையே இரண்டு பேரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பகிரங்கமாக விமர்சித்த கட்சியின் பிக்கு முன்னணி தலைவரான மெத்தேகொட குணரட்ன தேரரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கும் கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்தது.
*********************

என்ன சொல்ல வருகிறார்?
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்கள் தாங்களேதான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு தரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் நடைபெறவுள்ள உலகளாவிய நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கையின் வடபகுதி நிலைமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே உலக நாடாளுமன்ற குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர்களில் ஐவர் நேற்று வடபகுதிக்கு சென்றிருந்தனர்.
அங்குள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்ற அவர்கள் நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.
அந்தக் குழுவில் பிரிட்டனின் லோரட்கிரோஜ், தென்னாபிரிக்காவின் பிராந்தியமான சிராலியோனின் பேனாட் டீலாகி, பங்களாதேஷின் நில்பர் சவுத்திரிமுனி, சுரினாமின் அஷிஷ், நியூஸிலாந்தின் கஷ்ரப் சவுத்திரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்தபோது இருந்த நிலைமையை விட தற்போது வித்தியாசமாக மேம்பட்டதான சூழலை உணருவதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை தான் அழைத்து வரவில்லை.
தானும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலே வந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் நாச்சியப்பன் குறிப்பிட்டார்.
இங்குள்ள நிலைமைகளை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானித்தால் அவர்களும் தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்வார்கள் என்று தான் எதிர்பார்க்கிறார் என்றும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இந்தியாவில் இலங்கைத் தமிழ்க் கட்சிகளை அழைத்து நடத்திய மாநாடு தொடர்பாக கேள்வியெழுப்பியதற்கு தன்னைப் பொறுத்தவரையில் அது வெற்றிகரமான மாநாடுதான் என்று பதிலளித்தார்.
*********************

தோல்விக்கு யார் காரணம்?
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியடையக் காரணம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவே என அதே கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மஹிந்த கந்தகம குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பின் சேரிப்புற வீடுகளை அவர் அகற்றுவதற்கு மேற்கொண்ட தீர்மானமானத்தின் மூலமே இந்தத் தோல்வி ஆரம்பித்தது.
மேலும், இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் பலம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையின் வெற்றிக்காகப் பாடுபட்டு அந்த இலக்கை அடைந்து கொண்டனர்.
அத்துடன் ஆளுந்தரப்பில் மிலிந்த மொரகொட, ஆஸாத் சாலி, முகம்மத் மஹ்ரூப் ஆகியோரை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனது கட்சி நிறுத்தியதும் படுதோல்விக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
*********************

கொலை அச்சுறுத்தல்
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மீரிஹானை காவல் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனக்கு அனுப்பிய வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றிரவு ஏழு மணியளவில் மீரிஹான காவல் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இவர் பிரதான சாட்சியாவார்.
இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் இவரது பத்திரிகையில் வெளியான விடயங்கள் குறித்து அரசின் சீற்றத்துக்கும் இவர் உட்பட்டுள்ளார்
*********************