Thursday 20 October 2011

செய்திகள் 20/10


விசாரணை கோரும் அமைப்புக்கள்!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கந்தர்மடம் பகுதியில் வைத்து கடந்த 16ம் நாள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் படுகாயமடைந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதூரை வதிவிடமாகக் கொண்ட இவரை தனிநாடு தேவையா என்று கேட்டுக் கேட்டு அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர்.
சிறிலங்கா அரச புலனாய்வுப்பிரவினரே இதற்குப் பொறுப்பு என்று மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மனிதஉரிமையாளரும் மாணவர் ஒன்றிய தலைவருமான சு.தவபாலசிங்கத்தை சட்டத்துக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகவே தாம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னமும் சிறிலங்கா அரசின் சட்டத்தை நடைமுறைபடுத்தும் எந்தவொரு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் இதுதொடர்பாக ஐ.நாவின் சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருக்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஆசிய மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
*********************

மதம் பரப்பும் மதவாதிகள்
பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டமையால், வடக்கு விஹாரைகளை வலுப்படுத்த முடிந்துள்ளது என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
தெற்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கில் காணப்படும் பௌத்த விஹாரைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குகளே பௌத்த மதத்தை பாதுகாத்து வந்தனர், நெருக்கடியான நிலைமைகளிலும் பிக்குகள் விஹாரைகளை விட்டு வெளியேறவில்லை.
அண்மையில் கெபதிகொல்லாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
*********************

தமிழருக்கானவை சிங்களத்துக்கே
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் பத்து உழவு இயந்திரங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இதற்கான உத்தரவை முல்லை மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாகவும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இந்த உழவு இயந்திரங்கள் வெலிஓயா பிரதேச செயலக பிரிவிலுள்ள சம்பத்த நுவரவுக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலியோவில் உள்ள சிங்கள பிரதேச சபையில் அடங்கும் விவசாய திணைக்களங்களின் வாயிலாக அங்குள்ள மக்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான அரசாங்க அனுமதிக் கடிதம் ஒரு சில நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைப் போலவே வவுனியாவில் ஒரு சம்பவம் நடந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட உழவு இயந்திரங்களை நாமல் ராஜபக்ஷ தலைமையில் சிங்களவர்களுக்கு வழங்கியதைப் பார்த்து வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் கண்கலங்கி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*********************

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் ஸ்ரீலங்கா
சிறிலங்கா அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை, சிறிலங்காவுக்குள் பார்வையிட முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலை மற்றும் சிறிலங்கா அதிபருக்கும், பாதுகாப்புச் செயலருக்கும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தொடர்புகள் குறித்து லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்தியை அடுத்தே அந்த இணையத்தளம் சிறிலங்காவில் பார்வையிட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ரெலிக்கொம் மற்றும் ஏனைய இணைய வழங்கிகள் மூலம் இதனைப் பார்வையிட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் கூறியுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக வன்முறைகளை பிரயோகித்து வருகிறது.
இந்த இணையத்தின் ஆசிரியராக இருந்த சந்துருவன் சேனாதீரவுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த ஆண்டில் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளார். அவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அத்துடன் இந்த ஆண்டுத் தொடங்கத்தில் இந்த இணைத்தளத்தின் பணியகம், தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்க அடங்குமுறைகளை சந்தித்து வந்த லங்கா ஈ நியூஸ் இணையத்தை சிறிலங்கா அரசு தற்போது முடக்கியுள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிரான இணைத்தளங்களை சிறிலங்காவில் பார்வையிட முடியாத வகையில் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தை சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெற்றுள்ளது.
*********************

திட்டமிட்ட கொலை
சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரும் கொலை நடப்பதற்கு பல வாரங்கள் முன்னதாகவே இந்திய நுழைவிசைவு பெற்று தயார் நிலையில் வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்களில் ஒருவர் செப்ரெம்பர் 21ம் நாள் இந்திய தூதரகத்தில் நுழைவிசைவு பெற்றுள்ளார்.
இன்னொருவர் ஓகஸ்ட் 23ம் நாள் இந்திய நுழைவிசைவு பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியான இந்திய நுழைவிசைவு பெற்றுத் தயார்நிலையில் வைத்திருந்துள்ளனர்.
படுகொலை நடந்தவுடன் இவர்கள் மும்பைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
துமிந்த சில்வாவில் உதவியாளர்களான இவர்கள் இருவரும் சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில் மும்பையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
*********************

ஏமாற்றும் அரசும் ஏமாறும் சிங்கள மக்களும்
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தை விட 20 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் போலி உறுதி மொழிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
*********************

தமிழீழத்தை நினைவூட்டும் அரசு
நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.
அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று ஆரம்பம் முதல் கோரிக்கை விடுத்தே வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழீழத்தை அரசும் படையினரும் இன்னும் மறந்துவிடவில்லை.
கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர் தலைவன் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் சட்டவிரோதக் கும்பலினால் தாக்கப்பட்டுள்ளார்.
அந்த மாணவரைத் தாக்கியவர்கள் தமிழீழம் வேண்டுமா? என்று கேட்டே தாக்கி உள்ளனர். அப்படியானால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எனவும் கேள்வி எழுப்பினாhர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.
*********************