Wednesday 26 October 2011

செய்திகள் 25/10


அவுஸ்திரேலிய வழக்கு
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் குண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் இறப்புக்கு அரசுத் தலைவர் மஹிந்த காரணமாக இருந்தமை மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமூக நல நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகள் இலங்கை அரசுத் தலைவர் மீது சுமத்தப்பட்டே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி மெல்போர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பான சட்டத்தரணி ரொப் ஸ்டெரி தெரிவித்துள்ளார்.
*****************

வழக்கின் குழப்பம்
மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை அரசுத் தலைவருக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியின்றி அவ்வாறு வழக்குத் தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதுகுறித்து சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும் இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிராந்திய காவல்துறையினர் இது தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலையடைவதாகக் கூறிய அவுஸ்திரேலிய பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*****************

சனல் 4 காணொளிக்கு அங்கீகாரம்
இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல்4 ஊடகத்தில் வெளியாகிய பெரும் நெருக்கடிகளை சிறிலங்கா அரசிற்கு உண்டுபண்ணியிருந்தது.
இந்தக் காணொளியானது பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணாகவோ தயாரிக்கப்படவில்லை என பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காவின் கொலைக்களம் என்னும் காணொளியை வெளியிட்டிருந்த சனல் 4 ஊடகத்திற்கு எதிராக 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறதது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தொடர்பாடல் கைத்தொழில் சுதந்திரம் மற்றும் போட்டி தொடர்பான அதிகாரசபையினால் செனல்4 ஊடகத்தின் காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது ஊடக விதிகளை மீறி வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சீ21 என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
*****************

அமெரிக்கப் பயணம்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கிச் சென்றுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் எதிர்வரும் 26, 27, 28 ஆகிய நாட்களில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பின்னர் நியூயோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்குபற்றவுள்ளனர்.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமசந்திரன் தவிர ஏனையவர்கள் எதிர்வரும் 29ம் திகதி கனடாவுக்கு செல்கின்றனர்.
ஒக்டோபர் 30ம் திகதி காலை இவர்கள் கடனாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அன்று மாலை 6.30 மணிக்கு இரவு விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
31ம் திகதி திங்கட்கிழமை கனேடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கக் கனேடிய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
நவம்பர் 01ஆம் திகதி இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் ஒரு முக்கிய சந்திப்புக்காக அமெரிக்கா செல்கிறார்கள்.
மாவை சேனாதிராசா நவம்பர் 03ஆம் திகதிவரை கனடாவில் தங்கி இருப்பார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் கனடா நிகழ்ச்சி ஒழுங்குகளை கனடாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்கிறது.
அந்த ஒழுங்குகளுக்கு அப்பால் வேறு எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*****************

சர்வாதிகாரிகளின் நிலை
லிபியாவின் சர்வாதிகாரியான முகம்மர் கடாபி நாயைப் போன்று பதுங்குகுழி ஒன்றில் வைத்துச் சுடப்பட்டார்.
இதுதான் சர்வாதிகாரிகளின் இறுதி முடிவு என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை நேசித்து மக்களுக்கான ஆட்சி இலங்கையில் நிலவ வேண்டுமானால் 18 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிகளை நீக்குமாறு முதலாவது நீதிமன்றம் முன்வைத்த சிபார்சுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் அன்றைய தினமே இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஷினி மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இருதரப்பு சட்டத்தரணிகளும் குறிப்பிட்டனர்.
அதற்கு அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
*****************

வழக்கு தாக்கல்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட உள்ள காணிப் பதிவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
காணிப் பதிவைமேற்கொள்ள இடைக்கால தடை உத்தரவு மேற்கொள்ளுமாறும் இது தொடர்பான காணி சுற்றுநிருபத்தை ரத்துச் செய்யுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் காணி ஆணையாளர் நாயகம், காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள், சட்ட மாஅதிபர் அடங்கலாக 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிம் சவிய திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் இவ்வாறு பதியப்பட உள்ளதோடு இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.
காணிப்பதிவு தொடர்பான சுற்றுநிருபம் சட்டத்துக்கு முரணானது எனவும் இதனை செயற்படுத்த தடைவிதிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபத்தின்படி புதிய காணிகளை விநியோகிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு இடம் பெயர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதும் தடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
*****************

அறிக்கை கோரும் ஐதேக
பாரதலஷ்மனின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையொன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தபடாது காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவது மிகவும் அபாயகரமான நிலைமை எனவும் தற்போது நடைபெறும் நிலைமைகளை ஆராயும் போது அந்த நிலைமை தெளிவாக புலப்படுவதாதகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னேற்றம் கண்டுள்ள ஒருவிடயமாக அதனைக் காண்பதாகவும் அந்த அபிவிருத்தியே ஏற்பட்டுள்ளதாகவும் கருணாதிலக்க கூறினார்.
பாதாள உலகம் தொடர்பிலும் குடு வியாபாரம் தொடர்பிலும் நாட்டு மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லிபிய தலைவர் கடாபியின் கொலை தொடர்பிலான விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிடவேண்டும் என இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கேட்டுள்ளமை சிறந்த விடயமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார
*****************

சூடுபிடிக்கும் ஐதேக
எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சூடுபிடிக்குமென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்க ஆகியோரது கட்சி அங்கத்துவம் இடை நிறுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது செயற்குழு கூட்டமாக இது அமைவதனால் இது முக்கியத்துவம் பெறுவதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவரினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த முன்மொழிவை வாபஸ் பெறும் வரையில் தொடர்ந்தும் இதற்கான எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
*****************