Thursday 6 October 2011

செய்திகள் 06/10


மகிந்தவைச் சூழும் சர்வதேச வழக்குகள்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவிலும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொள்ள செல்லவுள்ள அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்தே அவுஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது.
அதற்கிடையே அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் உலகத் தமிழர் பேரவையின் அமர்வொன்றை அந்நாட்டில் நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் போர்க்குற்றங்களை உலகத் தலைவர்களுக்கு விளக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
*****************

ஸ்ரீலங்காவின் கொலைக்களம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
இலண்டன் ஊடகமான சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் திரையிட மூன்று சர்வதேச மனித நேய அமைப்புகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக்கான குழு, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன ஒன்றிணைந்து ஐ. நாடாளுன்றில் திரையிடுவதற்கான முழுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து சர்வதேச நாடுகள் ஓரணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் நாடுகளிடையே சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிற வேளையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் திரையிடப்படுவது சிறீலங்கா அரசுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது பொதுமக்கள் இழப்பு பூச்சியம் என சிறீலங்காவினால் தெரிவிக்கப்படும் கருத்துக்கு நேர்எதிர் மறையாக இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் ஆதாரமாக உள்ளது.
பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தினால் சிறீலங்கா பிரதிநிதிகள் கடந்த மாதம் இடம்பெற்ற 66 ஆவது மனித உரிமை பேரையில் பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
*****************

எரிக் சொல்கைம் - சுமந்திரன் சந்திப்பு
அண்மையில் நோர்வேயில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏரிக் சொல்ஹெம் அவர்களை சந்தித்து இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான சந்திப்பொன்றை நடாத்தியதாக தெரியவருகிறது.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நோர்வேக்கு விஜயம் செய்த போது, ஏரிக் சொல்ஹெம் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் மோற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடியதாகவும், அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் மற்றும் அவற்றில் உள்ள தடைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்ததாகவும் தெரியவருகிறது.
இச்சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள், அரசின் அத்துமீறல்கள் தொடர்பாக சுமந்திரன் ஏரிக் சொல்ஹெமிடம் தெரிவித்ததாகவும் தெரியவருகிறது.
*****************

ஸ்ரீலங்கா இனவாத அரசு - வைகோ
தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இனவாத கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
திட்டமிட்ட வகையில் தமிழ் சமூகத்தை அரசாங்கம் ஒடுக்கி வருகிறது.
தமிழர்களின் மரபு நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த இனவாத அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மத்திய அரசாங்கங்களின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழக்குத் தொடர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கத்தின் துரோகச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
*****************

ஸ்ரீலங்கா செல்லும் ரஞ்சன் மாத்தாய்
எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், தமிழர்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றை வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என்று புதுடெல்லி அதிகார வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிருபமா ராவுக்குப் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்ற ரஞ்சன் மத்தாய் முதல்முறையாக சனிக்கிழமை கொழும்பு செல்கிறார்.
மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் இருதரப்பு, பலதரப்பு உறவுகள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவுடன் பேச்சு நடத்துவார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் வடபகுதியில் இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உதவித் திட்டங்கங்களையும் ரஞ்சன் மத்தாய் மீளாய்வு செய்யவுள்ளார்.
எனினும் ரஞ்சன் மத்தாயின் சிறிலங்கா பயண நிகழ்ச்சி நிரல் குறித்து தகவல் எதையும் வெளியிட கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் பிரேந்திர யாதவ் மறுத்து விட்டதாக சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளது
இதேவேளை, இலங்கை செல்லவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பானது எதிர்வரும் 9ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உறுதி செய்தார்.
எதிர்வரும் 7ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள மீனவர்கள் பிரச்சினை தொடர்பான இலங்கை - இந்திய கூட்டுக்குழு சந்திப்பு குறித்தும் ரஞ்சன் மாத்தாய் ஆராயாவுள்ளார்.
*****************

தமிழர் கல்வியை குழப்ப நடவடிக்கை
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு காவல்துறையினரின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய நெதர்லாந்து பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஒப்ஸ்ரெல்ரன், இந்தப் பாடசாலைகள் அரசாங்க கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்படவில்லை என்று கூறியுள்ளார்.
பாடசாலை நேரத்துக்குப் புறம்பாக அங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கல்வி புகட்டப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடசாலைகள் அம்ஸ்ரடாம், ரொட்டர்டாம், டென்ஹக், பிறெடா, என்டோவன், ஆன்ஹெம், லியூவோடென் போன்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன.
இந்தப் பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க சட்டவாளர் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
*****************

மரண தண்டனையை மீள் அறிமுகம் செய்ய விரும்பும் ஸ்ரீலங்கா
இலங்கையில் குறைந்தபட்சம் 800 குற்றவாளிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ள நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்க்க அரசாங்கம் விரும்புவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படாத நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல், கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் அலுகோசு பதவியிலிருந்த இருவரும் பதவி உயர்வுபெற்றுள்ளதால் அலுகோசு பதவி வெற்றிடமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்பதவியை வெற்றிடமாக வைத்திருக்க முடியாதென்பதால் அடுத்த வாரம் இப்பதவிக்கு விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குறைந்தபட்சம் 800 பேர் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு அரசுத் தலைவர் கையெழுத்திட வேண்டும் எனவும் திஸாநாயக்க கூறினார்.
*****************