Friday 21 October 2011

செய்திகள் 21/10


யாருக்கு எதில் என்ன தொடர்பு?
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஓர் அரசியல்வாதியல்ல, நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் பற்றி அரசுத் தலைவருக்கே கூடுதலான அறிமுகம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாரேனும் விழாக்களுக்கு அழைத்தால் பாதுகாப்புச் செயலாளர் விழாக்களில் கலந்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
துமிந்தவிற்கு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் என்ற மாத்திரத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பாதாள உலகக் கோஷ்டிகள் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அறிந்து கொள்வதும் சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பாதாள உலகக் கோஷ்டியினரை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அவற்றை மீட்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
துமிந்த மிகவும் இனிமையான நபர் எனவும், மிகவும் கருணையானவர் எனவும் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார்.
துமிந்தவை சந்திக்கும் எவரும் இதனை ஒப்புக் கொள்வார்கள் எனவும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்தே துமிந்தவின் பாதாள உலகத் தொடர்புகள் குறித்து குற்றம் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரத படுகொலைச் சம்பவத்தை யார் மேற்கொண்டார் என்பதனை நீதவானே தீர்மானிக்க வேண்டும் எனவும், அந்த துரதிஸ்டவசமான சம்பவத்திற்கு அனைவரும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
******************

பறந்து திரிந்து பரப்புரை செய்யும் அமைச்சர்
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் மூன்றாம் நிலைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவென இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மனித உரிமை பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியூயோர்க் செல்லவுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் மனித உரிமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது மஹிந்த சமரசிங்க இலங்கை மனித உரிமை குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை, இம்மாதம் 26ம் திகதி ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்கவுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை மனித உரிமை மற்றும் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து மஹிந்த சமரசிங்க பான் கீ மூனிடம் இதன்போது விளக்கமளிக்கவுள்ளார்.
******************

நிபுணர் குழு அறிக்கை செல்லுபடியானதே
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தருஸ்மன் அறிக்கை என்றே கூறி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த மர்சுகி தருஸ்மன், இது ஐ.நாவின் அறிக்கையே, அதற்குக் குறைவானது அல்ல.
நிபுணர் குழு ஐ.நா பொதுச்செயலராலேயே நியமிக்கப்பட்டது. எனவே இதனை சிறிலங்கா தொடர்பான ஐ.நா அறிக்கை என்று மட்டுமே கூற முடியும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, நிபுணர் குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பும் தகவலை, சிறிலங்கா அரசுக்குள் முன்கூட்டியே தெரியப்படுத்தாதது குறித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் விஜய் நம்பியார் உள்ளிட்ட தனது அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா அதிபர் பான் கீ மூனை சந்தித்த போது, அவரது முன்னிலையிலேயே சக அதிகாரிகளை ஐ.நா பொதுச்செயலர் கடிந்து கொண்டதாக பல தரப்புகள் தமக்குத் தகவல் தந்ததாகவும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
******************

நோர்வே உதவியை நாடும் ஸ்ரீலங்கா
சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.
சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்பு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஒஸ்லோ சென்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மையும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜெனாஸ் கார்ஸ்ரோரையும் தனித்தனியாகச் சந்தித்து, இதுதொடர்பாகப் பேசியுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜெனிவாவில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய இரண்டு சுற்றுப் பேச்சுக்களிலும் அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவையே, நோர்வேயிடம் உதவி கோருவதற்கு சிறிலங்கா அதிபர் அனுப்பி வைத்துள்ளார்.
இவருடன் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஒஸ்லோ சென்றுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை முறியடிப்பதற்கு சிறிலங்கா அதிபர் இவர்களுக்கு முழுமையான அதிகாரங்களையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜுலை மாதம் ஒஸ்லோவில் தனிநபர் ஒருவர் நடத்திய தாக்குதல் ஒன்றில் சுமார் 80 பேர்வரை கொல்லப்பட்டதை அடுத்து- தீவிரவாதத்துக்கு எதிராக நோர்வே எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க நோர்வேயைப் பயன்படுத்த முனைவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************

சீன ஆக்கிரமிப்பு
சீனமொழி மற்றும் பண்பாட்டை சிறிலங்காவில் பரப்பும் நடவடிக்கையாக கொன்பூசியஸ் நிலையங்களையும், தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் சீனா ஆரம்பிக்கவுள்ளது.
அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் சீனாவின் கல்வி அமைச்சர் யுவான் குயிரென் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களின் போது, கொன்பூசியஸ் நிலையங்களை அமைத்தும், தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை உருவாக்கியும் சீன மொழியையும் பண்பாட்டையும் சிறிலங்காவில் பரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதென இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் சீனத் தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சிகளுக்கும், குறிப்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
******************

உயர்பாதுகாப்பு வலயம் உள்ளதா?
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் 134 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டதாக தெல்லிப்பளை காவல் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 14 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ளவர்கள் தவிர்ந்த ஏனையோர்களின் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள வீடுகளில் அத்துமீறிச் செல்லுதல், பொருட்களை திருடிச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் காவல்துறையினர் கூறினர்.
கிராம அலுவலர்களும் பொதுமக்களும் வழங்கிய தகவல்களையடுத்து, காவல்துறையினர் வலிகாமம் வடக்குப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெல்லிப்பளை காவல் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
******************

மக்களின் ஆணை என்ன?
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியை கொழும்பு மாநகர மக்கள் வழங்கியுள்ளதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட செயற்பாட்டாளர்களின் சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சியில் உள்ள சகலரும் அனைத்து பகுதிகளிலும் தமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும் எனவும் கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒழுக்கம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் அனைவரையும் இணைத்துக் கொண்டு தற்போதைய மஹிந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே கொழும்பு மக்கள் தேர்தல் வெற்றியின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாக ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
******************