Sunday 9 October 2011

செய்திகள் 07/10


அச்சப்படும் மகிந்த!
விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை அடியோடு அழித்ததற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தண்டிக்க சில சக்திவாய்ந்த மேற்குநாடுகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த போது போரை நிறுத்துமாறு இந்த நாடுகள் கொடுத்த அழுத்தங்களை புறக்கணித்ததாலேயே சிறிலங்கா அதிபரைத் தண்டிக்க மேற்கு நாடுகள் முனைவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், அமைச்சருமான சுசில் பிறேம்ஜெயந்த தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டி சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரும் பரப்புரைகளை சிலமேற்கு நாடுகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், விடுதலைப் புலிகள் ஆதரவு தொண்டர் நிறுவனங்களும் உலகளவில் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்குள் அரசாங்கம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ள சுசில் பிறேம் ஜெயந்த வெளியுலக சவால்களையும் தாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.
*********************

சர்வதேச நிறுவன பணியாளர்களை குறிவைக்கும் ஸ்ரீலங்கா
வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பில் இலங்கையில் உளவுப் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக 300 இலங்கையர்கள் இவ்வாறு உளவுப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்புரைக்கு அமைய குறித்த நபர்கள் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கைக்கு எதிராக போலி போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு பொய்யான தகவல்களை இவர்களே வழங்கியிருந்தனர் எனத் தெரிவித்துள்ளது.
300 பேரைக் கொண்ட இந்தக் குழு செய்மதித் தொலைபேசி ஊடாக நோர்வே நாட்டில் கடமையாற்றிய வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
அமெரிக்க இரகசிய ஆவணமொன்றில் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
*********************

புதிய நாடக அரங்கேற்றம்
மனித உரிமை சார் விவகாரங்கள் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்படக் கூடாது என அமைச்சா மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை தொடர்பான விவகாரங்கள் சுயாதீன குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மனித உரிமை செயற்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் செயற் திட்டம் ஐந்து திட்டமாக அமுல்படுத்தப்படும்.
இந்த செயற்திட்டம் அமைச்சின் ஊடாக அமுல்படுத்தப்பட உள்ளதுடன், இதன் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா அரசு மீது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களை திசை திருப்ப மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் இந்த ஏமாற்று மயற்சி தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
*********************

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு கட்சிக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்த மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோருக்கு ஆதரவளிப்பது தமிழ் மக்களின் தார்மீகக் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிய தமது அறிவிப்பு தாமதமாகவே வந்தாலும் அது சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்று கூறிய செல்வம் அடைக்கலநாதன், தாம் களத்தில் இதுவரை பணியாற்றிவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
*********************

குற்றம் சாட்டும் சுமந்திரன்
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கிலும் கிழக்கிலும் காவல்துறை அராஜகம் ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது.
கிறீஸ் பூதங்கள் விவகாரத்திலே காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் ஈடுபாடு உண்டு என்று பரவலாக நம்பும் வடக்கு, கிழக்கு பொதுமக்களின் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அதிகாரிகளின் வன்முறைப் பிரயோகங்கள் சந்திக்க நேர்ந்தது.
பலர் இறந்தனர் இன்னும் பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர்.
அந்த அடியுதைகளுள் குறிப்பாக நாவாந்துறைச் சம்பவம், அராஜக வெறியாட்டம் மட்டுமல்ல பொது மக்களை சிறுமைப்படுத்தும் விதத்திலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
அண்மையிலே யாழ்ப்பாணத்தின் நீதிமன்ற வளாகத்திலும் கூட சில நபர்கள் காவல்துறை அதிகாரிகளாலே அடித்துதைக்கப்பட்டமையை கண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் அந்த அடியுதையைக் கண்டிப்பதற்கு துணிந்து செயற்பட்டனர்.
மேலும் இன்றைய இலங்கை காவல்துறை பிரிவு சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது என்பதையும் நாம் மறக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
84ஆயிரம் பேரைக் கொண்டதாக மதிப்பிட்டுள்ள அந்த பிரிவுக்குள் பணியாற்றும் தமிழ் காவல்துறையினர் ஆக ஆயிரத்து 143 மாத்திரமே.
இந்த எண்ணிக்கையானது ஐ.நா. பொது மன்றத்திலே அரசுத் தலைவர் குறிப்பிட்ட பிரகாரம் அண்மைய காலத்திலே இடம்பெற்ற பணிக்கமர்த்தலிலே பணிக்கமர்த்தப்பட்ட 669 காவல்துறையினரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும்.
இது மொத்த காவல்துறைப் படைப்பிரிவின் 2 இற்கும் குறைவான வீதமாகும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
*********************

தொடரும் உரிமை மீறல் வழக்குகள்
யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் காவல்துறையினராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பழிவாங்கல் நடவடிக்கைதொடர்பாக மேலும் 30 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஏற்கெனவே 22 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி எஸ்.எம்.எம். சம்சுதீனுக்கு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர் பி.ஏ. ரட்ணாயக்க, ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முந்தைய மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையுடன் இம்மனுக்கள் தொடர்பான விசாரணையும் ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சரும் இவ்வழக்கில் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் ஏற்கெனவே 22 மனுக்கள் சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா உடாக தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
*********************

இரு சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று இரண்டு சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சடலங்களும் கொழும்புத்தறை மற்றும் யாழ் நகர் பகுதியில் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புத்துறை பற்றைக்காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பிரான்சிஸ் றேமன் வயது 35 என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை மதுவை அளவிற்கு அதிகதாக அருந்தியதால் 43 வயதுடைய நபர் ஒருவர் மதுச்சாலைக்கு முன்பாகவே வீழ்ந்து பலியாகியுள்ளார்.
இச்சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த ஆறுமுகம் காந்தமோகன் என்பவரே பலியானவராவார்.
குறித்த நபர் நேற்று மாலை கஸ்தூரியார் வீதியிலுள்ள மதுச்சாலையில் மதுவருந்திவிட்டுச் செல்லும்போதே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
*********************

பிச்சை எடுப்போர் திட்டமிட்டு கொலை
இலங்கையில் திட்டமிட்ட வகையில் பிச்சை எடுப்போர் கொலை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குரல் எழுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இறுதியாக கடந்த 4 ஆம் திகதி களனியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒரு பிச்சை எடுப்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து கடந்த 3 மாதங்களில் 8 பிச்சை எடுப்போர் கொல்லப்பட்டதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டிலும் கொழும்பு நகரில் பிச்சை எடுப்போர் கொல்லப்பட்டமையை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு கோரியுள்ளது.
*********************

ஜே.வி.பியின் தொடரும் முரண்பாடு
மக்கள் விடுதலை முன்னணியின் குமார் குணரத்னம் அணியினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான லங்கா ரூத் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் புதிய பிரசாரப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஜே.வி.பிக்குள் எழுந்த முரண்பாடுகளையடுத்து குறிப்பிட்ட இணையத்தளம் குமார் குணரத்னம் பிரிவினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு திடீரென குறிப்பிட்ட இணையத்தளம் கட்சியின் பிரசாரப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று அதிகாலை முதல் குறிப்பிட்ட இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தற்போது அந்த இணையத்தளம் முற்றாகச் செயலிழந்துள்ளது.
இதேவேளை, குமார் குணரத்னம் குழுவினரின் புதிய இணையம் ஒன்று இன்று வெளிவரவுள்ளதாகவும் தெரியவருகிறது.
*********************

கவலைப்படும் சிங்களம்!
சனல் 4 காணொளி ஐரோப்பிய நாடாளுமன்றில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி குறித்த காணொளி காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மூன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் சனல் 4 காணொளி காட்சிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணொளி காட்சிப்படுத்தப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
சனல் 4 காட்சியை ஐரோப்பிய நாடாளுமன்றில் ஒளிபரப்புச் செய்வதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மூன்று மில்லியன் யூரோக்களை, திரையிடும் தரப்பினருக்கு வழங்கியுள்ளனர் என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காணொளி காட்சிபடுத்தப்பட்டதன் பின்னர் சனல்4 ஊடகவியலாளர் கெல்லம் மெக்லர், கிறீன் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றில் விடுதலைலப் புலிகளுக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்று முதல் தடவையாக திரையிடப்படுகின்றது எனவும் திவயின பிரச்சாரம் செய்துள்ளது.
*********************