Monday 24 October 2011

செய்திகள் 24/10


அமெரிக்க பயணம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றனர்.
நாளை அதிகாலை இலங்கையிலிருந்து அமெரிக்கா நோக்கி இவர்கள் புறப்படவுள்ளனர்.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோரே அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பினையேற்றே இவர்கள் அங்கு செல்கின்றனர்.
அமெரிக்காவில் இவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவவாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளனர்.
இவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்திக்கலாமென எதிர்வு கூறப்படுகின்றது.
அமெரிக்க விஜயம் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்ந்திரனிடம் கேட்டபோது, அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் தாம் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டே இந்த நாடுகளுக்கு தாம் செல்வதாக குறிப்பிட்டார்.
இந்தநாடுகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் விஜயம் மேற்கொள்கின்ற மூன்று நாடுகளிலும் தாம் சந்திக்கவிருக்கின்ற பிரமுகர்கள் குறித்த நிகழ்ச்சிநிரல் அந்தந்த நாடுகளுக்கு சென்ற பின்னரே தயாரிக்கப்படும்.
எனவே இதுகுறித்து தற்போது உறுதிப்படுத்துவது கடினமானதாகும் என்று தெரிவித்தார்.
நாளை அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் மூன்று நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னரே நாடு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
******************

அவுஸ்திரேலிய பயணம்
கொமன்வெல்த் அமைப்பில் 11 நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பான யோசனையை பேர்த் மாநாட்டில் சிறிலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அவுஸ்ரேலியா புறப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில் அடுத்த கூட்டத்தை நடத்தவுள்ள சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டிடம் இருந்து கொமன்வெல்த் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.
அத்துடன் 2009இல் போர்ட ஒவ் ஸ்பெயினில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் முன்னாள் மலேசிய பிரதமர் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்ரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய 11 நாடுகளின் வல்லுனர்கள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவியை உருவாக்கும் யோசனை குறித்து இந்த மாநட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
சுதந்திரமான இந்தப் பதவியை கொமன்வெல்த் அமைப்பில் உருவாக்குவதற்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பதவியை உருவாக்கும் முடிவை உடனடியாக எடுப்பதற்கு பிரித்தானியா, கனடா, நியுசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த ஆணையாளர் பதவி தமக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தை விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை ஊக்குவிக்கவே பயன்படுவதாகவும், இதுவே இந்தப் பொறிமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு சான்றாக இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற கொமன்வெல்த் நாடுகளின் முக்கிய அரசியல்கட்சிகளின் ஆதரவை விடுதலைப் புலிகள் பெற்றிருப்பதாகவும், இதனால் இந்த ஆணையாளர் பதவியை உருவாக்குவது ஆபத்தானது என்று கருதுவதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
******************

சர்வாதிகாரிகளுக்கு எச்சரிக்கை
லிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முகம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், லிபிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அம்மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியவர் கடாபி.
ஆனால் காலப் போக்கில் மக்களை அடக்கி ஒடுக்கி குடும்ப ஆட்சியை, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார்.
இதனால் நசுக்கப்பட்ட மக்கள் நாட்டு தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியும் ஆத்திரம் வெறுப்பும் அடைந்தனர்.
மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் கிளர்ச்சி வெடித்தது.
இறுதியில் உயிழந்தார். இது சண்டையின் போது நடந்ததா அல்லது கைது செய்யப்பட்டதன் பின்னர் நடந்ததா என்பது பற்றி தெரியாது.
ஆனால், இது தொடர்பில் கண்ணீர் விட முடியாது.
அதேவேளை, கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறலாகும்.
அத்துடன் கடாபியின் இந்த முடிவானது சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்குச் சிறந்த பாடமாகும் என்றும் தெரிவித்தார்.
******************

குற்றஞ்சாட்டப்பட்டவர் கடத்தல்
முல்லேரியச் சம்பவத்தின் போது உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவரின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பான சந்தேக நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாதாள உலகத்தவரான கராட்டே தம்மிக ரம்புக்கன, வல்பொல் பிரதேசத்தில் வைத்து நேற்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
கராட்டே தம்மிக்க என பாதாள உலகத்தினரால் அழைக்கப்படும் இவர், கூலிக்குக் கொலைகளைச் செய்தல், கப்பம் பெறல், பாரியளவில் போதைப் பொருள் விற்பனை செய்தல் போன்றவற்றில் கைதேர்ந்தவராவார்.
இவர் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
******************

13வது திருத்தத்தை நிராகரிக்க கோரிக்கை
13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே மாகாண சபையாகும்.
அந்த மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுமாயின் அது இனத்தை விற்பதற்குச் சமனானதாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
முன்னணியின் உபதலைவர் தலைமையில் கொழும்பு -07 இலுள்ள அவரது வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்.
அது ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்கப்பட்டதொன்றாகும் அங்கு ஆளுநருக்கு புத்திமதி கூறுவதற்கே முதலமைச்ருக்கு அதிகாரம் இருக்கின்றது.
தேவையில்லாத தேர்தல் என்பதனை நிரூபிக்கவேண்டும் என்பதுடன் தேவையில்லாத சலுகைகளுக்காகப் பின்னால் ஓடாத புத்திஜீவிகளை மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக களமிறக்கி எமது பலத்தை வேறுவழியில் நிரூபிக்கலாம் எனத் தெரிவித்தார்.
மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டால் அது ஒற்றையாட்சியை அங்கீகரிப்பதற்கான செயற்பாடாகும் என்பதுடன் தமிழ் இனத்தை விற்பதற்கு சமமானதாகும்.
மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்பதுடன் இடைக்கால தீர்வு என்பது அப்பட்டமான பேய்க்காட்டலாகும் என்றும் குறிப்பிட்டார்.
******************

கிளர்ச்சிக்குழுவின் கருத்தரங்கு
ஜேவிபியின் கிளர்ச்சி குழு நாடு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.
ரோஹன விஜேவீரவின் உரிமைகளை நாம் பாதுகாப்போம் என்ற தொணிபொருளில் சுமார் 50 கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் முதலாவது கருத்தரங்கு நாளை மாலை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற உள்ளது.
நாடு முழுவதும் இடம்பெறும் இந்த கருத்தரங்கில், ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் குமார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கே சுபசிங்ஹ, அரசியல் துறை பொறுப்பாளர் புபுது ஜயகொட, மேல்மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ஸ, மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட பிரமுகர்களும் தமது கருத்துரைகளை நிகழ்த்த உள்ளனர்.
******************

நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டங்கள்
எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி இன்று தொடக்கம் ஆர்பாட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
கடன் சுமைகளை தாங்கிய வரவு - செலவுத் திட்டம் ஒன்றை கொண்டுவர அரசாங்கம் முனைப்புக்காட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு - செலவு திட்டம் சமர்பித்தபோது வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இம்முறைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் முதலாவது ஆர்பாட்டம் இன்று காலை புறக்கோட்டையில் நடைபெறவுள்ளதோடு சமூகவாத தொழிலாளர் சங்கத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பிக்கப்படும் ஆர்பாட்டத்தை எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
******************

மக்களாட்சி வேண்டுமாம்
அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கினையும் பேணியிருந்தால் நாட்டில் மக்கள் நல்லாட்சியை அனுபவித்திருப்பர் என வடமாகாண எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதாள உலகினரையும் போதைப் பொருள் வியாபாரிகளையும் பாதுகாக்கும் ஆட்சியே இடம்பெற்று வருகின்றது.
இதனால் சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்றும் மக்கள் கேள்வியெழுப்பும் நிலைமை உருவாகிவிட்டதாக வட மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன ஷாமல் செனரத் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தியும் மக்களின் பாதுகாப்பும் நல்லாட்சியும் என்பது அரசியல் தீர்க்கதரிசனம் மிக்க ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே சாத்தியமாகும் எனவும் தெரிவித்தார்.
எனவே அவரது ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட்டு அவரது கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முழு நாட்டையும் வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே வட மத்திய மாகாண எதிர்க் கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைத் தெரிவித்தார்.
******************

தொடர்பை மறுக்கும் கோத்தா
கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுடன் உத்தியோகபூர்வமான தொடர்புகளை மட்டுமே தாம் பேணி வந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக பலர் பல குற்றச்சாட்டுக்களை சுமத்திகின்ற போதிலும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
துமிந்த தனது வயதுப் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல எனவே அவரை நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதியுடன் ஏன் கடமையாற்றமுடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் எவரையும் பாதுகாக்கவோ முயற்சிக்கவும் எவருக்கும் பயந்துசெயற்படவுமில்லை.
துமிந்த சில்வாவை விடவும் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திரவை நீண்ட காலமாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் எனவும் இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
******************

சிறைக்கைதி மரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த தமிழ்க் கைது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கைதியின் உடல்நிலை குறித்துச் சிறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டும் அது கருத்தில் கொள்ளப்படாமை காரணமாகவே அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த 35 வயதான இந்தக் கைதியின் உடல்நிலை குறித்து முன்னரே சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட கைதி உணவை உட்கொள்ள முடியாத நிலையில் அவதியுறுவதாகவும் தொடர்ச்சியாக அவர் வாந்தி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆரம்பத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத சிறை நிர்வாகம் அவரைக் காலதாமதாக நேற்றே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது.
இந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி நேற்றே உயிரிழந்தார்.
இதேவேளை, மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளின் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்து மட்டு. சிறைச்சாலை கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
******************