Tuesday 1 November 2011

செய்திகள் 30/10


கனடா மீண்டும் எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கனடிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த மாநாட்டிற்கு முன்னதாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக செயல் ரீதியான பங்களிப்பினை கனடா வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பிலான கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளில் பங்கேற்பது குறித்து மீள சந்திக்க நேரிடும் எனவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் கனடா வெறும் வார்த்தைகளினால் மட்டும் எதிர்ப்பை வெளியிடுவதில் அர்த்தமில்லை என கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே இலங்கையில் ஆளும் தரப்பினருக்கு கனடாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.
உலக மனித உரிமைகளுக்காக கனடா உரக்கக் குரல் கொடுக்கும் எனவும், குறிப்பாக இலங்கை விவகாரத்தில் கனடா தனியான கரிசனை காட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
******************

சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், மனித உரிமைகள் பாதுகாப்பு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான அடிப்படை மூலதர்மங்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கமரோன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தப் பின்னணியில், இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சேர் மல்கொம் ரிஃப்கின் உட்பட பொதுநலவாய நாடுகளின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்று, கொமன்வெல்த் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி ஆராய்ந்து 100க்கும் அதிகமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு 21ம் நூற்றாண்டு உலகுக்கு பொருத்தமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை இந்த முயற்சியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான புதிய சமவாயம் ஒன்றை உருவாக்குவது பற்றியும் டேவிட் கமரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுதவிர இன்னும் சர்ச்சைக்குரிய விவகாரமாக, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய சுயாதீனமான ஆணையர் ஒருவரை நியமிப்பது பற்றியும், ஒருபால் உறவு திருமணங்களை தடைசெய்யும் சட்டங்களை நாடுகள் நீக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி பேர்த் நகரில் தமிழர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் காட்டும் படங்களையும் பதாகைகளையும் தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், தன்மீதான போர்க்குற்றங்களை மறுத்துவரும் இலங்கை அரசு, சர்வதேச ரீதியான, சுதந்திரமான விசாரணைகள் தேவையில்லையென்றும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
******************

ஸ்ரீலங்காத் தூதரகத்தின் ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்குச் சார்பாக செய்திகளை வெளியிடுவதாக கூறி கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் பேர்த் நகரில், ஏபிசி தொலைச்சாட்சி நிலையத்துக்கு முன்பாக சிங்களவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் செய்திகளை வெளியிடுவதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏபிசி அலைவரிசை மீது குற்றம்சாட்டியதுடன், கண்டனம் தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.
அத்துடன் இதுதொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான கடிதம் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் ஏபிசி தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியிருந்தது.
அத்துடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்காவின் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகளையும் ஏபிசி முக்கியத்துவப்படுத்தி வந்தது.
அவுஸ்ரேலியாவின் பிரதான செய்தி ஊடகமாக ஏபிசியில் வெளியாகின்ற போர்க்குற்றம் தொடர்பான செய்திகள் சிறிலங்கா அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தின் ஏற்பாட்டில் சிங்களவர்களைக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள சிறிலங்கா அதிபரை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் பேர்த் நகரில் தமிழர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு சிங்களவர்களை இறக்கிவிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது.
******************

கிலாரி சந்திப்பாரா?
சிறிலங்கா அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், இதுவரை சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல் இல்லை.
இந்தநிலையில் சிறிலங்கா அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதைக் கைவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் வெட்டி சேர்மன் ஆகியோரை கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 பக்க ஆவணம் ஒன்றை கையளித்துள்ளது.
மனிதஉரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய இந்த ஆவணத்தை கருத்தில் கொண்டு சிறிலங்கா அரசின் மீது அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************

தெரியாது திணறும் ஸ்ரீலங்கா!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது உணர்ச்சி பூர்வமான விடயம் என்று இலங்கை பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த விஜயம் பற்றி உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாத நிலையில் அது குறித்து கருத்து வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த விஜயத்திற்கும் அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லையென்றும் கூறினார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்க் கூட்டமைப்பினர் சந்திப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே அரசாங்கத்தினர் முதற்கொண்டு இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சியினர் சிலர் அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இவ்வாறான நிலைமையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயம் பற்றி அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் தெரியாது என்று தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுகளில் ஈடுபடும் அரச குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்விஜயம் பற்றி தாம் பல்வேறு ஊடகச் செய்திகள் மூலம்தான் தகவல்களை அறிந்துள்ளோமே தவிர, உத்தியோகபூர்வமாக எதுவும் தெரியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
******************

முயற்சி பலிக்கவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திப்பை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி பலளிக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளத
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது.
ஆனால் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்து கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பை ஐ.நா பொதுச்செயலர் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இந்தக்கட்டத்தில் சந்திப்பை இடைநிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் கோரிக்கையை பான் கீ மூன் நிராகரித்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை கடந்தவாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இதுதொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்ல என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீ மூனுக்கு எடுத்துக் கூறியுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
******************

கண்டறிந்த உண்மை இரகசியமானது!
இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் ஊடக தொடர்பாளரான லக்ஸ்மன் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தமது இறுதி அறிக்கையின் நகல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இறுதி அறிக்கை மகிந்த ராஜபக்ஷவிடம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் அரசுத் தலைவரே தீர்மானிக்க வேண்டும் எனவும் லக்ஸ்மன் விக்கிரமசிங்க கூறியுள்ளார
******************

மோசமான பரீட்சை முறைமை
உலகின் மிகவும் இழிவான பரீட்சை முறைமை இலங்கையில் காணப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி உயர் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில பரீட்சை வினாத் தாள்களுக்கு மாணவர்களுக்கு மட்டுமன்றி அதனைத் தயாரிக்கும் பேராசிரியர்களினாலும் விடை எழுத முடியாது.
தன்னைப் பற்றி நினைக்கும் போது தான் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றேனா எனத் தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க கோத்திர சமூகங்களைத் தவிர இவ்வாறு கடுமையான பரீட்சை முறைமைகள் உலகில் வேறு எங்கும் கிடையாது.
மாணவர்களின் ஆற்றலை மதிப்பீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒர் பொறிமுறையாக பரீட்சை அமைந்துள்ள போதிலும் நாட்டில் அமுலில் உள்ள பரீட்சை முறைமையினால் எவருக்கும் நன்மையில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த பரீட்சை முறைமையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
******************