Tuesday 15 November 2011

செய்திகள் 15/11


அமெரிக்காவின் கவலை
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரை மேற்குலக நாடுகள் ஒதுக்கி தனிமைப்படுத்தியுள்ளதனைப் போன்று இலங்கை தனிமைப்படுத்தப்படுவதனை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றதாகவும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தொலைநோக்குத் திட்டம் இலங்கை அரசிடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.          
******************

பிரதமரின் கண்டனம்
சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.
நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.
பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.
போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.
போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட, மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன், புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.
சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.
சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.
எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
******************

அரசு அதிருப்தி
விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது.
இந்நிலையில், இந்த விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இந்த விமர்சனங்கள் குறித்து நோர்வே அரசுக்கும் இந்த ஆய்வை நடத்திய நோறாட் அமைப்புக்கும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோர்வே வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சியில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானதால், பெரும் சங்டமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************

பல்கலைக்கழக மாணவர்களின் துணிவு
யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும் என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக பெருமளவு இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே இதில் பங்குபற்றியிருந்தனர்.
இதனால் பெரும்பகுதி ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன.
******************

எதேச்சதிகார அரசு
பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் நாட்டின் அனைத்து விடயங்களையும் மாற்றி அமைக்கக்கூடிய நிலை இன்று தோன்றியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பது கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
106 அரச நிறுவனங்களுக்கு 6ஆயிரத்து, 300 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்களை யாரிடம் பொறுப்புக் கொடுக்கப் போகிறார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இமாலய நட்டத்தில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகலில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்
******************

இராணுவ மயமாகும் கல்விக் கூடங்கள்
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண்களை அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் என்ற உயர் கல்வி அமைச்சரின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஜ்சீவ பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தில் உள் மோதல்களை தவிர்க்கும் பொருட்டு பல்கலைக்கழக பகுதியில் காவல்துறை காவலரண்களை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் காவல்துறை என்ற பெயரில் குறித்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளளார்.
இதற்கு முன்னர் 1984ம் ஆண்டு பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் ஏற்படுத்தப்பட்டு அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் குற்றச் செயல்களை அரங்கேற்ற ஐதேக அரசு அப்போது செயற்பட்டது.
அதன்போது மாணவர்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இரண்டு மாணவர்களுக்கு மேல் ஒன்றுகூட முடியாது, போஸ்ட்ர் கட்அவுட் காட்சிப்படுத்த முடியாது, அறிவுறுத்தல் மற்றும் கவிதைகூட எழுதி ஒட்ட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக விடயங்களில் அரசாங்கத்தின் தலையீட்டை உற்றுநோக்கும் போது 1984ம் ஆண்டு போன்ற திட்டத்தை செயற்படுத்த முனைவதாக தெரிகிறது.
மாணவர் செயற்பாடுகளை அழிக்கும் திட்டம் இதுவென்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வாறான கஸ்ட நிலை வந்தாலும் பல்கலைக்கழகத்திற்குள் அரசாங்கத்தின் காவல்துறை காவலரண்களை அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************

சர்வதேச மயப்படும் போராட்டம்
கடந்த காலங்களில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் வெறும் இந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையிலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது புலம்பெயர்ந்து வாழும் இளையோர் அமைப்பினர் ஊடாகவும் மாணவர்கள் ஊடாகவும் போராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கனடாவில் வாழுகின்ற தமிழ் மாணவர் ஒருவர் 17 வயதிலே வைத்தியர் பட்டம் பெற்றுள்ளதோடு தானாக புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.
இதைப்பார்த்த கனடா நாட்டின் புற்றுநோய் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியடைந்ததுடன் தான் கூட இந்த வயதுக்கு இவ்வாறான சாதனையை புரியவில்லை என்று கூறியதுடன் இந்த கருவியை வைத்து எதிர்காலத்தில் புற்றுநோயை குணப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சாதனைகள் தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர் நடாத்திவரும் இரவு நேரவகுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 105வது நாள், பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
******************