Monday 7 November 2011

செய்திகள் 05/11


கெஞ்சும் ஸ்ரீலங்கா
போர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுகள் வந்த பின்னர் 35 மில்லியன் டொலரை கனடா உதவியாக வழங்கியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கனேடியப் பிரதமர், அடுத்த கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றால் அதைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டாவா தூதரகத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த நேரத்தில் கனடா தம்மைக் கைவிட்டு விடக் கூடாது எனத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடுமானால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான கதவுகளைத் திறந்து விடத் தயாராகவே உள்ளது.
ஆனால் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவது சிறிலங்காவின் இறைமையை மீறுகின்ற செயலாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும், கனடாவில் வாழும் சுமார் 3லட்சம் பேரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே கனேடிய அரசாங்கமும், கனேடியப் பிரதமர் ஹார்பரும் அடிபணிந்து விட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் குற்றச்சாட்டை கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிராகரித்துள்ளார்.
மனிதஉரிமைகளின் சார்பிலேயே கனடா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கனேடியப் பிரதமரின் உறுதியான நிலைப்பாடு குறித்து கனடாவிலுள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*****************

அமெரிக்காவில் விளக்கி கூறிய கூட்டமைப்பு
போருக்குப் பின்னரான இலங்கையின் நிலவரம், தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள், மனித உரிமைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் விரிவான விளக்கமொன்றை அளித்துள்ளனர்.
கடந்த இரண்டாம் திகதி கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனித உரிமை கற்றலுக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் டேவிட் எல்.பிலிப்ஸ், கொலம்பிய பல்கலைக்கழக தொல்பியல் பீட பேராசிரியர் ஈ.வொலன்ரைன் டானியல் ஆகியோரும் கலந்துகொண்ட இந்த உரையாடலை கொலம்பிய பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையமும், தெற்காசிய கற்கை நிலையமும் ஏற்பாடு செய்திருந்தன.
மாலை 5 மணி முதல் சுமார் ஒன்றரை மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் நீடித்தது.
போருக்குப் பின்னர் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகள், சிறுபான்மை மக்களுக்கு மொழி மற்றும் இதர அடிப்படை உரிமைகள் குறித்தான இலங்கை அரசின் கவனம் என்பன குறித்து இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக அது குறித்தான பேச்சுகளுக்கு இலங்கை அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்றும், முடிவுகளை எடுக்கவேண்டியது அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் குறித்தும் கேள்விகளாகக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.             
*****************

பேச்சின் நிலை என்ன?
அதிகாரப்பகிர்வு பற்றியோ, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த விவகாரத்தையோ சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் இருந்து அசோசியேட்டட் பிறஸ் செய்தியாளர் மத்யூ பென்னிங்ரனுக்கு தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஏபி தகவல் வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் மரணங்களுக்கு இந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாது போனால், ஐ.நாவின் பின்புலத்துடனான விசாரணைகளுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என்றும் ஏபி கூறியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க, கனேடிய, ஐ.நா அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஏபி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய அரசியல்தீர்வு, புனர்வாழ்வு ஆகிய விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் அரசியல் ரீதியான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளதானது தமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்துக்குப் பின்னர் நடத்தப்பட்ட அதிகாரப்பகிர்வு குறித்த 12 சுற்றுப் பேச்சுக்களிலும், தம்மால் முன்வைக்கப்பட்ட தமிழர்களின் பாதுகாப்பு, நிலம், கல்வி கலாசாரம் தொடர்பான அதிகாரங்கள் தொடர்பான திட்டத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காது போனால்- பேச்சுக்களில பங்கேற்பது குறித்த மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
*****************

தீர்வு இல்லை!
போர் ஏற்படுவதற்கான காரணங்களுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியர் கே.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது.
எனினும், போருக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
போர் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை.
கிரமமான பிரச்சினையிலிருந்து விடுபட்டு வேறு திசையில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமை மற்றுமொரு போரைத் தூண்ட வழிகோலும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
சமூகத்தின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரியான சமூகப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி நாட்டை நல்வழிப்படுத்தும் பாரிய பொறுப்பு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மக்களைச் சாரும் என அவர் தெரிவித்துள்ளார்.
*****************

அமெரிக்க கட்டளைத் தளபதியின் பயணம்
அமெரிக்கப் படைகளின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் அடுத்த பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கொனன்ற் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கோண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவத் திட்டங்கள் குறித்தும் அதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் எவ்வாறு உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் பசுபிக் கட்டளைப் பீடத்தில் சிறிலங்கா விவகாரங்களை கையாளும் அதிகாரி லெப்.கேணல் ஜெர்னிகன், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் சூலர், பாதுகாப்புக்கான பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கேர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவினர் நேற்றுமாலை சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கும் சென்றிருந்தனர்.
அங்கு அவர்கள் சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பெரேராவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
எனினும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் கொனன்ற் சிறிலங்காவுக்கு எதற்காக பயணம் மேற்கொண்டார் என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
சீனாவுடன் இணைந்து கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அண்மையில் சிறிலங்கா இணங்கியிருந்த நிலையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் உசாரடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது
*****************

மீள குடியமர முடியாத மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பத்தில் தொடரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சுமார் ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியை அண்டியுள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இராணுவ படைமுகாமினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
இதேபோல இரணைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமினால் இந்தக் கிராமத்தில் மக்களே கிடையாது.
கரும்புத் தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 30 வரையான விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இவை எதுவும் நடைபெறாததுபோல் மாவட்டச் செயலகம் நடந்து கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பரவிப்பாஞ்சானில் 100 குடும்பங்களின் பதிவுகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ள மாவட்டச் செயலகம் இராணுவத்தினர் விரைவில் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.
இதேபோல் இரணைதீவில் மக்கள் எவரும் சென்று வாழ விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றது.
ஆனால் அங்குள்ள கடற்படை முகாமினால் மக்கள் எவரும் குடியேற்றப்படவில்லை என்பதே உண்மையென மக்கள் கூறுகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*****************

தொடரும் காணி அபகரிப்பு
வடமாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புகள் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆரம்ப நடவடிக்கையாக கிளிநொச்சி மாவட்டத்தில் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொண்டு விவரங்களைத் திரட்டி வருகின்றனர் என்று மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தியாகிகள் அறக்கொடை நிலையத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வின் போது விசேட உரையாற்றிய போதே சரவணமுத்து இவ்வாறு குறிப்பிட்டார்.
வடபகுதி மக்கள் பல் வேறு கஷ்ரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள்.
நாட்டின் எந்த ஒரு மூலையில் அடிப்படை உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் அதனைக் கண்டிக்கவும், பாதிக்கப் படவர்களுக்காக குரல் கொடுக்கவும் தாம் பின்நிற்பதில்லை எனத் தெரிவித்தார்.
நாவாந்துறையில் இடம்பெற்ற அடாவடித் தனங்களால் பாதிக்கப்பட்டவர்களுள் 20 பேரின் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஜனநாயகமும் சமாதானமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
நாட்டில் நல்லாட்சியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமானால் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சட்ட ரீதியாக அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், சுதந்திரமும் எவராலும் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
வெளிப்படைத் தன்மையும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பாக்கிசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
*****************