Monday 7 November 2011

செய்திகள் 06/11


பிரித்தானியா கோரிக்கை
மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் கோரியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில், உறுப்பினர் ஒருவர் கடந்தவாரம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவ, பாதுகாப்பு, காவல்துறைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான எந்த விடயங்கள் குறித்தும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடனேயே தாம் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் வெளியிட்டுள்ள மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகம்-2010 என்ற அறிக்கையில் விபரமாக கூறப்பட்டுள்ளது.
அதில் சிறிலங்கா கவலைக்குரிய நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தொடர்ந்து நிலைமைகளை கண்காணித்து வருகிறது.
தமது கரிசனைகளை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசுக்கு எழுப்பி வருவதாகவும், மிகஅண்மையில் கூட, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக் கூடிய குழுக்களின் மனிதஉரிமை நிலைமைகள் முன்னேற்றப்பட வேண்டும் என்று தாம் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி வருவதாகவும் அலிஸ்ரெயர் பேர்ட் மேலும் கூறியுள்ளார்
*******************

ஏமாற்றும் அறிக்கை தயார்
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரத்தில் அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தமது அறிக்கை நாளை 7 ஆம் திகதி தயாராகிவிடும் என்று குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த அறிக்கை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படும் என்று காலவரையறை குறிக்கப்பட்டிருந்தது.
சர்வதேசத்தினால் இலங்கையின் போர்க்குற்ற பொறுப்புக்கூறல் அறிக்கையாக நோக்கப்படும் இந்த அறிக்கையில் சுமார் 5 ஆயிரம் எழுத்து மூல முறைப்பாடுகள் மற்றும் சுமார் 1000 நேரடி சாட்சியங்கள் அடக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அறிக்கையின் உள்ளடக்கத்தை வெளியிடும் உரிமை அரசுத் தலைவருக்கே உண்டு என்று விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
*******************

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடல்
இலங்கையில் சுமார் 600 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இதுவரையில் நாட்டில் இயங்கி வந்த 600 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதியளவு நிதியில்லாத காரணத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாது மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நன்கொடையாளர்கள் திட்டங்களை நிராகரித்தமை, அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணிகளினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இலங்கையில் மொத்தமாக 1300 உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்கி வந்தன.
தற்போது இதில் 600 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்ட சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சு தடை செய்துள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் சகல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பதிவுக்கு உட்படுத்தப்பட்டு பட்டியல்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
*******************

ஆலோசனைக்கு இடமில்லை
போருக்குப் பிந்திய இராணுவ மூலோபாயம் குறித்து ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை என்றும், அவரது ஆலாசனை தனக்குத் தேவையில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
நோர்வேயின் நடுநிலையுடனான போர்நிறுத்த உடன்பாட்டையும், போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐதேக தலைவர், இராணுவ மற்றும், வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுமக்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த கருத்து தொடர்பாக பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போருக்குப் பிந்திய அபிவிருத்தித் திட்டங்கள், விருத்தியடைந்துள்ள சுற்றுலாத்துறை, மற்றும் முதலீடுகள், தீவிரவாத தாக்குதல் அச்சமின்றி வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் - இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் கண்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியாக ஐதேக இருந்தாலும், போருக்கு ஆதரவு வழங்கவில்லை.
இராணுவ வழிமுறையின் மூலம் விடுதலைப் புலிகளை மண்டியிடச் செய்ய முடியும் என்று ஐதேக நம்பவில்லை என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
நான்காவது கட்ட ஈழப்போர் நடந்த காலத்திலோ அல்லது போருக்குப் பின்னரோ, இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐதேகவினாலோ அல்லது தன்னாலோ வெளியிடப்பட்ட எந்தவொரு அறிக்கையாவது ரணில் விக்கிரமசிங்கவினால் காட்ட முடியுமா? என்றும் கோத்தாபய ராஜபக்ச சலால் விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பாக ஐதேகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியுமா? என்றும் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சவால் விடுத்துள்ளார்.
ஐதேகவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் தமது மரபுவழி போர்ப்பலத்தை அதிகரித்துக் கொண்ட விபரங்கள் வெளியாகி விடும் என்று ரணில் விக்கிரமசிங்க அச்சம் கொண்டுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
*******************

அமைச்சர்களுக்கு எச்சரிக்கை
அரசாங்கத்திற்காக குரல் கொடுக்காத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத, அமைச்சுக்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யாத, நாடாளுமன்றில் அரசாங்கத்திற்காக குரல் கொடுக்காத அமைச்சர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுத் தலைவர் செயலகத்திற்கு அரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சில அமைச்ர்கள் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அமைச்சர்கள் பற்றி தகவல்களை திரட்டி அவர்களுக்கு எதிராக கடும் நடவடடிக்கை எடுக்க அரசுத் தலைவர் தீர்மானித்துள்ளார்.
அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
*******************

சலுகைக்காக சந்தித்த ரணில்
இலங்கையில் நட்டமடையும் 36 தனியார் நிறுவனங்களை பொறுப்பேற்கும் தமது திட்டத்தில் மாற்றம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகிறது.
தம்மை நேற்று சந்தித்த தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ள தனியார் நிறுவனங்களில் 12 ஆடை ஏற்றுமதி நிறுவனங்களும் 17 உற்பத்தி நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு நிறுவனங்களான தயா கமகேயின் செவனகல சீனித்தொழிற்சாலை, ஹரி ஜெயவர்த்தனவின் பெலவத்த சீனி ஆலை, மற்றும் தயா வெத்தசிங்கவின் லங்கா ட்ரக்டர்ஸ் நிறுவனம் என்பனவற்றுக்கு விலக்களிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் குறித்த நிறுவனங்களை தவிர அரசாங்கம் கையேற்க உத்தேசித்துள்ள தனியார் நிறுவனங்களின் முகாமைகள் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
*******************

போதைப் பொருள் தேடும் சிறைச்சாலை
சிறைச்சாலைகளிலும் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலுமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் போதைப் பொருள் தட்டுப்பாடு சிறைக் கைதிகளையும் வெகுவாக பாதித்துள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையான சில கைதிகள் 200 ரூபா முதல் 3000 ரூபா வரையில் செலுத்தி சிறியளவு போதைப்பொருளைப் பெற்றுக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும் நகர புறங்களில் போதைப் பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு சிறைச்சாலைகளுக்கான போதைப் பொருள் விநியோகத்தை பாதித்துள்ளது.
இதனால் போதைப் பொருளுக்கு அடிமையான சிறைக் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
*******************