Saturday 12 November 2011

செய்திகள் 12/11


வன்மையான கண்டனம்
தமிழர் பிரதேசமான மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபரை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நியமனத்தை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நூறு வீதம் தமிழ் மக்களை கொண்ட மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிங்களவரை நியமித்திருப்பதால் சாதாரண மக்களின் குறைபாடுகள் எவ்வாறு அரசாங்கத்தை சென்றடையும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் நடைறைப்படுத்தியிருக்கின்றது.
இதன் பிரகாரம் மன்னார் மாவட்ட அரச அதிபராக சரத் ரவீந்திர என்ற பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் அரச அதிபர்களாக சிங்களவர்களை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தது.
தமது எதிர்ப்பினை தாம் பாராளுமன்றத்திலும் வெளிப்படுத்தியிருந்ததையடுத்து இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் தற்போது அரசாங்கம் தனது திட்டத்தை அமுல்படுத்தி மன்னார் மாவட்டத்துக்கு சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்துள்ளது.
மன்னார் மாவட்டம் நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் அங்கு சிங்களவரை நியமித்திருப்பதன் மூலம் அந்த மக்களின் குறைபாடுகள் வெளிக்கொணரப்பட முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
தற்போது நியமனம் பெற்றுள்ள அரச அதிபரின் தமிழ் மொழிப் புலமை எவ்வாறு உள்ளது என்பது தெரியாது. இதனால் சாதாரண மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாம் மிக வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது தமிழர் பிரதேசங்களில் சிங்கள அதிபர்களை உள்வாங்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன் தற்போது மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நியமனத்தை உடனடியாக ரத்து செய்து அங்கு தமிழ் மொழி மூல அரச அதிபர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவிததார்.
எமது மக்களின் குறைநிறைகளைக் கண்டறிய தமிழ் மொழி மூல அரச அதிபரே அவசியம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
****************

தள்ளிப் போகும் அறிக்கை
விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி உத்தியோகபூர்வதாக அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15ம் திகதி முழுமையாக நிறைவுக்கு வரும் நிலையில் 20ம் திகதி அது அரசுத் தலைவரிடம் கையளிக்கப்பட வேண்டும் என அரசுத் தலைவரின் செயலாளர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழு 2010 மே மாதம் 15ம் திகதி நியமிக்கப்பட்டது.
இவ்வாணைக்குழு 27 பொது சந்திப்புக்களையும் சுமார் 40 இடங்களில் 12 வெளிக்கள விஜயத்திலும் ஈடுபட்டதோடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மக்களிடமும் சாட்சியங்களைப் பெற்றிருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நேரடி சாட்சியம் அளித்ததோடு 5100 கடிதம் மூலமான சாட்சியங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றது.
சுமார் 11 மாதங்களாகச் செயற்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை தயாரித்து எதிர்வரும் 20ம் திகதி அரசுத் தலைவரிடம் கையளிக்கவுள்ளது.
****************

நிராகரிப்பு நாடகம் அரங்கேறியது
இலங்கை வருமாறு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது என்று அரசுத் தலைவர் மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
****************

கடல்சார் பாதுகாப்பு
காலி நகரில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க, அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர் சிறிலங்கா செல்லவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த இரண்டு நாள் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விடுதியில் ஆரம்பமாகவுள்ளது.
முதல்நாள் கருத்தரங்கில் அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கெர், பூகோள மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் பொதுவான மூலோபாயத்தின் முக்கியத்துவம் என்ற பொருளில் ஆய்வு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஆசிய விவகாரங்களில் நிபுணரான இவர் முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றியிருந்தார்.
இந்தநிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் உரையாற்றவுள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா, அமெரிக்கா, மாலைதீவு, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பங்களாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த சவால்கள் குறித்த ஆய்வுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இரண்டாவது நாள் அமர்விலும், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் கிலென் கொம்ரன் ஆய்வு ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************

தோற்றது ஸ்ரீலங்கா
2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றெடுத்துள்ளது.
இதனால் ஹம்பாந்தோட்டையில் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலங்கையின் கனவு வீணாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை பெறுவதற்குப் போட்டியிட்டன.
இது தொடர்பான பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு 43 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
இலங்கையில் குறித்த போட்டியினை நடத்துவதற்கு 27 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் உரிமையினை ஐந்தாவது தடவையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
****************

18வது மகாநாடு எங்கு நடந்தென்ன?
18வது சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தின் கத்மன்டு நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலைத்தீவில் நிறைவுற்ற 17வது சார்க் உச்சி மாநாட்டின் இறுதியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சார்க் மாநாட்டில் வலய ஒத்துழைப்புக்கள் குறித்து நான்கு பொது உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
****************

தொடரும் கடத்தல்கள்
மிறிஹாண ஜுபிலி கணுவ பிரதேசத்தில் உள்ள புத்தக கடை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஜுபிலி கணுவ சந்தியில் நேற்று இரவு 8.35 அளவில் கோட்டே வீதியில் உள்ள புத்தக கடையை மூடிவிட்டு வெளியில் வந்தபோது தனது கணவரை வெள்ளை வானில் வந்தவர்கள் பலவந்தமாக இழுத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியான யு.கே.ராஜிகா சுரங்கனி தெரிவித்துள்ளார்.
ஈ.எம்.துஸார சமிந்த பண்டார என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
****************