Friday 4 November 2011

செய்திகள் 02/11


கனடா வலியுறுத்தல்
கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம் சுதந்திரம் மனித உரிமைகள் நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில் அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகிவருகின்றது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகளைக் காப்பதற்கும் முன்னெடுப்பதற்குமான மூன்றாவது குழு நிலை விவாதத்தில் பேசிய கனடாவின் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி குலர்மோ ரிச்சன்ஸ்கி சிறீலங்காவின் பிரச்சனைக்கான மூல விடயங்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது கனடாவின் கரிசனையாக உள்ளது என்றார்.
அத்துடன் சிறீலங்காவில் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்பதை தாம் வேண்டுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத் தொடரிலும் கனடா சிறீலங்காவின் மனித உரிமைகள் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா பிரதமர் பேசும் போது கனடா பிரதமர் அரங்கை விட்டு வெளியேறி, முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் அடுத்த கொமன்வெல்த் கூட்டத் தொடரை சிறீலங்காவில் புறக்கணிக்கப்போவதாக மீண்டும் அறிவித்த ஒரே தலைவர் கனடியப் பிரதமரே என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா விடயத்தை மீண்டும் முன்னிலைப்படுத்திய என கனடாக்குழு சிறீலங்காவிற்கு மாநாடு முழுமையாக சவாலாக அமைந்தாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
****************

கனேடிய உறுதிமொழி?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்போது முன்னெடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முயற்சிக்கும் இலங்கைத் தீவின் சமூகங்களிடையேயான மீள ஒன்றியணையும் முயற்சிக்கும் கனடா என்றுமே காத்திரமான பங்கை வழங்கும் என கனடாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறப்பட்டுள்ளது.
கனடாவினால் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்ட முதலாவது விஜயமாக அமைந்த இந்த விஜயத்தின் போது கனடாவின் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை கனடாத் தலைநகரில் சந்தித்துப் பேச்சுக்களை நடாத்தியதுடன், வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நிறைவேற்றுக்குழுக்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதானிகளையும் இக் குழுவினர் சந்தித்தனர்.
கனடாவில் இரண்டு நாட்களே தங்கியிருந்த இக் குழுவினர் ஒரு தினத்தை கனடியத் தலைநகர் சந்திப்புக்களில் செலவளித்தனர்.
இக் குழுவினர் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் முடிந்த பிற்பாடு ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழர்களிற்கான குரலாகச் செயற்பட்டு வரும் கன்சவெட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் மற்றும் ஈழத்தமிழர்களிற்கு பரிச்சயமான பாராளுமன்ற உறுப்பினரான பார்ம் கில் ஆகியோருடன் கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சிறீலங்காவின் மனிதவுரிமைக்கு எதிரான செயலுக்குத் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தமிழர்களிற்கு சமாதான முறையிலான தீர்வொன்றிற்கான அழுத்தத்தைக் கொடுப்போம் என்றும் தெளிவுபடக்கூறினர்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் இப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தோடு லிபரல் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்லவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான நேரப்பற்றாக்குறை காரணமாக அச்சந்திப்புக்கள் இடம்பெறவில்லை.
****************

லண்டனுக்கு த.தே.கூ
அமெரிக்கா மற்றும் கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், சுரேஸ் பிரமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் நவம்பர் 5ம்திகதி இலண்டன் வரவுள்ளனர்.
இலண்டனில் மூன்று தினங்கள்; தங்கியிருக்கும் இவர்கள் பல பொது நிகழ்வகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நவம்பர் 5ம் திகதி காலை இலண்டன் வருகைதரும் தலைவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சென்று வரவேற்பர்.
அன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும்.
தொடர்ந்து நவம்பர் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30-பி.ப.4.00 மணிவரை மதிய விருந்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் இன்றைய இலங்கை அரசியல் நிலையும் கூட்டமைப்பின் செயற்பாடும் பற்றி தலைவர்கள் விளக்கிக் கூறுவர்.
தொடர்ந்து நவம்பர் 7ம் திகதி காலை 10.00மணியிலிருந்து பிரித்தானிய அரச அதிகாரிகளையும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சந்தித்து உரையாடவுள்ளனர்.
அன்று மாலை 5.00 மணிக்கு ஊடகவியலாளருடனான சந்திப்பு இடம்பெறும். அன்று இரவு மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************

பிதற்றும் பீரிஸ்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் தான் இறுதித் தீர்வொன்றைக் காண முடியுமே தவிர வெளிநாடுகளுக்குச் சென்று கூறி அழுத்தம் கொடுப்பதனால் எந்தப் பலனும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போதே இந்தக் கருத்தை வெளியிட்ட பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்றும் குறிப்பட்டார்.
தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியப்படுத்தப்பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; இதில் அரசாங்கத்துக்குத் தெளிவுபடுத்த அவசியமில்லை.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசி வருகிறது.
இலங்கை அரசாங்கத்துடன் பேசியே இறுதித் தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து வெளிநாடுகளுடன் பேசிப் பயனில்லை எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேசி பாராளுமன்றத்தில் பேசி அரசியலமைப்புத் திருத்தம் ஏதும் தேவைப்பட்டால் அதை மேற்கொண்டு இந்த நாட்டில் செய்ய முடிந்ததைத் தான் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் சென்று கூறி அழுத்தம் கொடுப்பதில் எந்தப் பலனும் கிடையாது என்று தெரிவித்தார்.
இதேநேரம் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்புக் குறித்த கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கையில்; ஐ.நா.செயன்முறை குறித்து தாம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
அவர்கள் யாரைச் சந்திப்பது, யாரைச் சந்திக்கக்கூடாது என்று தாம் தீர்மானிக்க முடியாது.
எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்.
அவர்கள் அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். அதுதவறு. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேறு பல கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன என்று கூறினார்.
தமிழர் பிரச்சனை தொடர்பாக சர்வதேசம் கொண்டுள்ள அக்கறை மீதான ஸ்ரீலங்கா அரசின் காழ்புணர்வே அமைச்சரின் கருத்து என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
****************

அறிவற்ற அமைச்சர்!
தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? தனக்கு அவரைத் தெரியாது! யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? என்று இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க கேட்டுள்ளார்.
திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலைவரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத சிங்கள காடையர்களால் சேதமாக்கப்பட்டது.
இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து என்னவென்று அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
உடைத்த உண்மையை ஒப்பக் கொள்ள முடியாத அமைச்சர் வரலாற்றைத் தெரியாது என கருத்து வெளியிட்டமை கேலிக்குரியது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
****************

ஏமாற்றும் ஸ்ரீலங்கா!
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பதில் தெடாரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு, நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் சுமார் ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியை அண்டியுள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இராணுவ படைமுகாமினால் அங்கிருந்து துரத்தப்பட்ட சுமார் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள், வெளியே வாழ்ந்து வருகின்றனர்,
இதேபோல், இரணைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமினால் இந்தக் கிராமத்தில் மக்களே கிடையாது.
இதேபோல் கரும்புத் தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 30வரையான விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இவை எதுவும் நடைபெறாததுபோல் மாவட்டச் செயலகம் நடந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக பரவிப்பாஞ்சானில் 100குடும்பங்களின் பதிவுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ள மாவட்டச் செயலகம் இராணுவத்தினர் விரைவில் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என வக்காளத்து வாங்கும் நிலையில் உள்ளது.
இதேபோல் இரணைத்தீவில் மக்கள் எவரும் சென்று வாழ விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றது.
****************

கூலிப்படைகளால் இயக்கப்படும் அரசு - சரத்
காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதாள உலகக் குழுக்களின் கூலிப்படையாக மாறியுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் இருந்த காலத்தில் சீரிய ஒழுக்கத்துடன் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கடமையாற்றினர்.
தற்போது பாதாள உலகக் குழுக்களின் ஒப்பந்தங்களை காவல்துறையினரும், படையினரும் நிறைவேற்றுகின்றனர்.
இராணுவத் தளபதி போர் புரியவில்லை, போரை தாமே திட்டமிட்டு நடத்தியதாக மார்தட்டிக் கொண்டவர்களினால் பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் விநியோகத்தைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
படுகொலைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
பெட்டிகளை கடைகளை உடைக்கவும், வடிகால்களை சுத்தப்படுத்தவுமே இவர்களினால் முடிகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
****************