Friday 4 November 2011

செய்திகள் 03/11


ஒளிந்து கொண்ட பான் கீ மூன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் அந்தஸ்திலுள்ள உயரதிகாரியான லிங்க் பொஸ்கோவைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுகளை நடத்திய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய மீள்குடியமர்வு, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்துப் பேசுவதற்குப் பூர்வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கனடாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அவசரமாக மீண்டும் அமெரிக்கா திரும்பியிருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் சென்றனர்.
ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தச் சந்திப்பு நடைபெறமாட்டாதென கூட்டமைப்பினருக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்தே ஐ.நா. சபையில் அரசியல்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் லிங்க் பொஸ்கோவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்திக்கும் விடயத்தில் இலங்கை அரசு வழங்கிய கடும் அழுத்தமே இதற்கான காரணமென்று நம்பப்படுகிறது.
முன்னதாக இது விடயம் குறித்து கொஹன்ன, பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் ஐ.நா. செயலாளர் நாயகம், தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களை சந்திக்கமாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.
அரச அழுத்தத்திற்கு அடிபணிந்து ஐ.நா. செயலாளர் நாயகம் மேற்கொண்ட இந்தத் தீர்மானம் தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
****************

எக்காளமிடும் போர்க் குற்றவாளி!
ஐ.நா. செயலர் பான் கீ மூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் ஏற்பட்ட படுதோல்வியாகும் என ஸ்ரீலங்காவின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா நியூயோர்க்கில் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியான சவேந்திர சில்வா இதுபற்றி கருத்து வெளியிட்ட போது ஐகக்pய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் ஸ்ரீலங்காவின் கைப்பொம்மை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவில் வைத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பு முதலாம் திகதி நிச்சயம் நடைபெறும் என்றும் உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பான் கீ முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.
ஐ.நா. செயலர் பான் கீ முனை சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.
இனியும் பெருமைக் கூறித் திரியாது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேண்டும் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
****************

ஸ்ரீலங்காவில் ரஷ்ய குழு
மன்னார் கடல் பரப்பில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவென ரஷ்யாவிலிருந்து விசேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.
ரஷ்யாவின் சர்வதேச காஸ்போர்ம் நிறுவனத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இன்னும் மூன்று வாரங்களில் குறித்த நிறுவனத்தின் விசேட தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை செல்லவுள்ளனர்.
ரஷ்யாவின் காஸ்போர்ம் நிறுவனத்தின் பிரதி தலைவர் வெலேரி குலேயெவ் தலைமையிலான நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பேச்சு நடத்தினார்.
அமைச்சருடன் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆலோசகர் சாலிய விக்கிரமசூரிய, இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் ரூமி பவுஸர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
****************

தமிழர்களுக்கு பிரஜாவுரிமை
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் பிறந்த 100 பிள்ளைகளுக்கு நேற்று இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா கச்சேரியின் மாநாட்டு மண்டபத்தில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு யு.என்.டீ.பி. அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது.
ஐந்து வயது முதல் 25 வயது வரையான 100 பிள்ளைகள் நேற்று தாம் இலங்கையர் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான பிரஜாவுரிமை சான்றிதழைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அரச அதிபர் கூறினார்.
மோதல் காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்று அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த தமிழ் குடும்பங்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளன.
அவர்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கைப் பிரஜாவுரிமை நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
****************

வன்னியில் இந்திய ராணுவ குழு
சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை கற்கைநெறியைப் பயிலும் அதிகாரிகள் குழுவே வன்னிக்குச் சென்றுள்ளது.
இந்திய விமானப்படையின் அதிகாரியான எயர் கொமடோர் பி.ஆர்.நவல்கர் தலைமையிலான இந்தக் குழுவில் 16 இந்திய இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆறுநாள் பயணத்தின் ஒரு கட்டமாக இந்தக் குழுவினர் வன்னிப் படைகளின் தலைமையகம், ஆட்டிலறிப் பாடசாலை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், மற்றும் பல தொல்பொருள் ஆய்வு, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றுள்ளனர்.
நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு நேற்று சந்திக்கவுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இந்தியப்படை அதிகாரிகள் குழு சென்றபோது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க இவர்களைச் சந்திக்கவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.
சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பேரேராவே இவர்களை வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை சிறிலங்கா கடற்படை எவ்வாறு தோற்கடித்தது என்பது பற்றி, றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா விளக்கமளித்துள்ளார்.
****************

நோர்வேயின் நிதி?
முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளுக்கு நோர்வே 60 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளது.
இதன்படி முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் மீள இணைக்கும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி பயன்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச இடம்பெயர்ந்தோர் அமைப்பின் ஊடாக இலங்கைக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கான நோர்வே தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
****************