Thursday 10 November 2011

செய்திகள் 10/11


பதில் மனு
தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டவாளர்கள் பதில் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளனர்.
அதேவேளை, பத்து அனைத்துலக மனிதஉரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் பதவிக்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சமர்ப்பித்த அறிமுக ஆவணத்தை நிராகரிக்குமாறு கோரியுள்ளன.
சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது சமஸ்டி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளி ஒருவரை ஐ.நா தனது பதவித் தரத்தில் வைத்துள்ளது.
இது ஒரு உளவியல் மற்றும் சட்ட நடவடிக்கை என்று அமெரிக்க பல்கலைக்கழக வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதஉரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய அனைத்துலக கட்டமைப்பான ஐ.நா அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை.
தனது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு அவர் இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்குரிமையை ரத்துச் செய்து அவரது அறிமுக ஆவணத்தை நிராகரித்து, அவரை விசாரணை செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பத்து மனிதஉரிமை அமைப்புகள் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களைப் புரிந்த அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தியுள்ளது.
உலகெங்கும் 22 முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன
**************

புதிய விதிகள்
இலங்கையில் விரைவில் ஊடகவியலாளர்களுக்கான மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
இதனை ஒழுங்கு விதிகளை அரசாங்கம் தனியார் ஊடகங்களுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்பின்னர் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது
இதற்காக ஊடக அமைச்சினால் விரையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கையின் ஊடக அமைச்சின் செயலாளர் கனேகல தெரிவித்துள்ளார்
குறித்த ஊடக ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்காக பொதுமக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
**************

அஞ்சும் அரசு
அரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை கண்டு பயப்படுகிறது.
தமது ஜனநாயக விரோத செயற்பாடுகள் ஊழல்கள் வெளிக்கொணரப்படும் போது ஜனநாயக ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கம் அஞ்சுவதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்;டுள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைக்காலம் வரையில் இலங்கையில் ஊடகங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்ச நிலைக்காணப்பட்டது
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர் பல ஊடகவியலாளர்கள் பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர்
இந்தநிலையில் இன்று பிரபலமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன
தனியார் ஊடகங்களில் சுயதணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஊடக ஒழுங்கு தொடர்பான நிறுவனங்கள் அரசியலாலும் தனிப்பட்டவர்களாலும் பொதியிடப்பட்டுள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்
சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர்கள் கோழைகள் அல்லர். அவர்கள் அரசியல் மாற்றங்களுக்கு அஞ்சவில்லை.
பயத்தால்; பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்;டுள்ளனர்
எனவே இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட முடக்கத்தை அரசாங்கம் தளர்த்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்
ஜனநாயக சட்டத்தரணிகள் அமைப்பில்; சார்பில் லால் விஜேநாயக்க சந்திரா குமாரகே ரட்ணவேல் சுமந்திரன் ஜோதிக்குமார் ஜே வி வெலியமுன உட்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர்
**************

தவிக்கும் ஸ்ரீலங்கா
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது.
கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எவ்விதமான அநீதியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது எனவும் அமைச்சர் கூறினார்.
கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது அரசாங்கத்துடனான பேச்சுக்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அவர்கள் எந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு வந்தாலும் இறுதியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கே வரவேண்டும்.
இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
**************

பதவி வழங்கும் ஐதேக
கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும், ஒன்பது குழுக்களில் அங்கத்தவர்களாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையில் ஐ.தே.க நிலையான நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை ஐ.தே.க நாடியிருந்தது.
அவ்வாறு ஆதரவு வழங்கும் பட்சத்தில் சபை நிர்வாகக் குழுக்களில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு தலைமைப் பதவி வழங்க ஐ.தே.க ஒப்புதல் அளித்திருந்தது.
அதன்படி இன்று ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும், ஒன்பது குழுக்களில் அங்கத்தவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகரத் தமிழ் மக்கள் தமது கட்சிக்கு வழங்கியுள்ள வாக்குகளின் மூலமாக கிடைத்துள்ள அரசியல் பலத்தின் அடிப்படையில் இந்த அந்தஸ்துகள் கிடைத்துள்ளன என ஜனநாயக மக்கள் முன்னணி இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளது.
**************

பாதுகாப்பு ஏற்பாடு
மாலைதீவில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டுக்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும், இலங்கையின் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு திட்டமொன்று அமுல்படுத்தப்படுகிறது.
மாலைதீவின் அட்டு நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களினதும் மாநாடு நடைபெறும் இடத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இரு படையமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக மாலைதீவில் பணியாற்றும் இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து தூதுக்குழுவினரும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர்.
தவறில்லாத பாதுகாப்புத் திட்டத்திற்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அச்சுறுத்தல் மதிப்பாய்வு தொடர்பான பல நடவடிக்கைகளை தாம் நடத்தியுள்ளோம் என அவர் கூறினார்.
மாநாடு இடம்பெறும் இடத்திற்கு வருபவர்களும் வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டிற்கு முன்னர், துறைமுகம், விமான நிலையம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பான பல பயிற்சித் திட்டங்களை இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டதாக ஹவீரு இணையத்தளம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
**************

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்
இலங்கையில் நாளொன்றுக்கு வீதிவிபத்துக்களின் மூலம் 6 பேர் பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வருடம் ஒன்றுக்கு 2000 முதல் 2500 பேர் வீதிவிபத்துக்களில் பலியாவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சு தெரிவி;த்துள்ளது.
இந்த விபத்துக்களின் போது குறைந்தது 2 பேராவது கடும் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.
தரவுகளின்படி நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு வீதி விபத்து இடம்பெறுகிறது.
வருடம் ஒன்றில் 80 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெறுகின்றன.
மது கவனயீனம் போன்ற காரணங்களாலேயே வீதிவிபத்துக்கள் இடம்பெறுகின்றன
**************