Friday 4 November 2011

செய்திகள் 01/11


சிலை தகர்ப்பு
தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவரும், என்றும் தனது உடல், உயிர் யாவற்றையும் தமிழுக்காக அர்ப்பணித்து இறைபதம் அடைந்த ஈழத் தமிழ் மக்களின் ஆரம்ப தலைவரான தந்தை செல்வாவின் நினைவாக திருமலை மாவட்டத்தில் தாபிக்கப்பட்டிருந்த அவரின் உருவச் சிலையை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் உடைத்துள்ள கயவர்களை தான் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்திலும் உடைக்கப்படாத இச்சிலை தற்போது தமிழ் மக்களின் பிரச்சனைகள், சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்லப்படும் செயற்பாட்டை விரும்பாத விஷமிகளால் உடைக்கப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட சதியாகும் என்றும், இச்சிலை மக்கள் எவ்வேளையிலும் நடமாடும் பகுதியில் அமைந்துள்ளதால் இது திட்டமிட்டே உடைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் உருவச் சிலையை உடைப்பதன் மூலம் தமிழ் மக்களின் தமிழ் உணர்வை அழித்து விடலாம் என எண்ண வேண்டாம் எனவும் இச்செயற்பாடுகள் மேலும் எங்கள் மக்களின் தமிழ் தேசிய உணர்வையும், விடுதலை நோக்கையும் தூண்டிவிடுமே அன்றி அடக்கி விடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
வேண்டுமானால் அவர்கள் தந்தை செல்வாவின் சிலையை உடைக்கலாம், ஆனால் எமது மக்களின் மனங்களில் விதைத்துள்ள தமிழ் மக்களின் விடுதலை நோக்கை உடைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இச்சிலையை உடைத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பினரையே சாரும்.
ஏனெனில் இது ஒரு முக்கிய பிரதான வீதியில் அமைந்துள்ளது.
இந்தச் சிலை தற்போது உடைக்கப்பட்டாலும் இந்த இடத்தில் மிகவும் பிரம்மாண்டாக ஒரு உருவச் சிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் நிர்மாணிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
*******************

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை இலக்கு வைக்கும் ஸ்ரீலங்கா
பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படுமோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைத்தியசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.
மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சித்த பருதியுடன் கூடச் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பொல்லுகள், இரும்புக் கம்பி, வாள் ஆகியவற்றால் பருதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது இவர்கள் அதனைத் தடுத்து அவரைக் காப்பாற்றியுள்ளார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவிய சிங்களப் புலனாய்வாளர்கள், தமிழ்த் தேசிய சிதைவுக்கான உச்ச இலக்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்துள்ளனர்.
அந்த சிங்களச் சதியினை களத்தில் நின்று எதிர்த்துப் போராடும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி, அதிலிருந்து அகற்றும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் முயற்சி நோக்கப்படுகின்றது.
ஏற்கனவே, பிரித்தானிய தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் தனம் மீது இதே பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இதைவிட, ஜெர்மனியிலும், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள இருவர் தாக்கப்பட்டுள்ளார்கள்.
பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல் முயற்சியிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் எவையும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, உள் முரண்பாடுகளாலோ இடம்பெற்றவை அல்ல.
மாறாக, திட்டமிட்ட வகையில், தகவல்கள் திரட்டப்பட்டு, தாக்குதலுக்குரிய நபரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, வெகு நேர்த்தியாக நடாத்தப்பட்டுள்ளன.
புலம்பெயர் தேசங்களிலும், சிங்களப் புலனாய்வாளர்கள் தமிழ்க் கூலிக் குழுக்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்றே நம்பப்படுகின்றது.
*******************

சிக்கலுக்குள் ஸ்ரீலங்கா
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனடாவில் தெரிவித்தார்.
கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகின்ற போது, அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றியும் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு நிகரான உரிமை பெற்றவர்களாக முஸ்லிம் மக்களும் வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம்.
எம்மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு.
ஆனால், அந்த உரிமையை வழங்காது அழித்தொழிக்க இலங்கை அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
எமது உரிமைகளைப் பெறுவதற்குச் சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். அதனால், நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது எனவும் தெரிவித்துள்ளார்.
கட்டாயத் தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நாம் நிதானமாகச் செயற்பட வேண்டும். அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அனைவரினதும் ஆதரவு வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் அங்கு வரவேண்டும். சந்தர்ப்பம் ஏற்படும்போது அங்கு முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.
மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினார்கள்.
*******************

கனடாவின் அழுத்தம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைப்பதற்கு கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரை வரவேற்றுப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு இன மக்களும் சேர்ந்து தன்னை தமது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்த தொகுதிக்கு வந்துள்ள தமிழ்க் கூட்டமைப்பினரை வரவேற்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தான் எதிர்க்கட்சியில் இருந்து கனடா அரசுக்கு வலியுறுத்தி வருவதாகவும் தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து கனேடியப் பிரதமரும், வெளிநாட்டு அமைச்சரும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் ராதிகா குறிப்பிட்டார்.
*******************

கலங்கும் ஐ.தே.க
இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க விடாமல் இலங்கை அரசை இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பாக வெளிநாடுகளுடன் பேச்சு நடத்தாமல், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட உள்நாட்டு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுநடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிகாரிகள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கனடாவுக்குச் சென்றுள்ள நிலையில், கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம், இலங்கை இந்திய உறவு மற்றும் அரசு கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் கூறினார்.
போரின் பின்னரான இலங்கைத் தமிழர்களின் விடயங்களில் இந்தியா தலையிடவே இல்லை.
விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு பேச்சுகளில் இந்தியா எவ்வகையிலான அழுத்தத்தையும் இதுவரை பிரயோகிக்கவேயில்லை.
அத்துடன், இலங்கை மீதான சர்வதேச குற்றச்சாட்டுகள் விடயத்திலும் இந்தியா மௌனியானது.
அப்படியிருக்க, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனக்கு பற்று இருப்பதாக இந்தியா பொய்வேடம் தரிக்கிறது.
இந்த நிலையில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வழங்கவிடாது இலங்கை அரசை இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள இந்த இரகசிய ஒப்பந்தத்தால் இறுதியில் இலங்கைத் தமிழர்களே பாதிக்கப்படுவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் இனப்பிரச்சினைப் பேச்சு ஆரம்பமாகி இன்றுடன் 10 மாதங்களாகின்றன.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் கடப்பாடு அரசுக்கு உள்ளபோதிலும், அதனை வழங்கவிடாமல் இந்தியா முட்டுக்கட்டை போடுவதனால் அதிருப்தியும், நம்பிக்கையின்மையும் அடைந்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு இந்தியா தவிர்ந்த வெளிநாடுகளது உதவியைக் கேட்டுச் சென்றுள்ளது.
வெளிநாடுகளினால் இதற்கு அர்த்தம் வழங்க முடியாது.
தமிழ்க் கூட்டமைப்புக்கும் வேறு வழியில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவும் கையை விரித்துவிட்டது.
எனவே, தீர்வைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசு உட்பட உள்நாட்டு அரசியல் கட்சிகளுடன் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து பேச்சு நடத்த முன்வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தங்கள் உரிமைகளையே பாதுகாத்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது பற்றி பேசுவது வேடிக்கையானதாக உள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
*******************

விசுவாசிகளை தேடும் மகிந்த
தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்புக்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு சரியான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தற்போதைய பிரதம நீதியரசர் பக்கச்சார்பற்ற நிலையிலும், சுயாதீனமாகவும் செயற்படுவாரா என்பது சந்தேகமே என கொழும்பைச் சேர்ந்த மனித உரிமைச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் என்னும் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அரசுத் தலைவரின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட வழக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் அரசியல் நியமனத்தின் மூலமே ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
*******************

பதவிக்கு அஞ்சும் ஸ்ரீலங்கா
பதவி பறிபோகும் என்ற அச்சம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்து வருவதாக தினமின பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் பதவியை வழங்கி விட்டு செல்வதற்கு விசுவாசமானவர்கள் எவரும் இல்லாத காரணத்தினால் வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக பல முக்கிய வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமைப் பதவியை பறிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரணில் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் போது சதித் திட்டத்தின் மூலம் கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு கிளர்ச்சிக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
*******************