Thursday 17 November 2011

செய்திகள் 16/11


மீண்டும் பேச்சு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்ததால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கான அரசின் பதில் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அரச தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜேசிங்க, சசின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது
************

தமிழருக்கு எதிரான அரசு
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பாக ஒருபோதும் செயற்படுவதில்லை.
எப்போதுமே தமிழர்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தோடு நோக்குகிறது.
நாடாளுமன்றத்தில் கூட தமிழ் உறுப்பினர்கள் வேண்டப்படாத பிரஜைகள் போலவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட தேருநர் இடாப்பு திருத்தம் தொடர்பாக கிறீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தால் தேர்தல் என்பதே மக்கள் மனதில் இருந்து மறைந்து போயிருந்தது.
யுத்த காலத்தில் தமிழர் பிரதேசங்களில் தேர்தல் நடத்தப்பட்ட போது அவை புறக்கணிக்கப்பட்டன அல்லது குண்டுத் தாக்குதல்கள் மூலம் குழப்பப்பட்டன.
இதனால் இன்னமும் மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர்.
அத்துடன் இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல், தம் சொந்த இடங்களுக்கு போக முடியாமல் அடிப்படை வசதிகள் அற்று வாழ்கின்ற மக்கள் வாக்களிப்பது பற்றிச் சிந்திப்பது என்பது இயலாத விடயம்தான்.
இவ்வாறு நீண்டகாலமாக வாக்களிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்ட மக்கள் இனிவரும் காலங்களில் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவேனும் வாக்களிக்கும் பண்பினை வளர்க்க வேண்டும்.
வாக்குரிமையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பிரஜையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தவறான செயலாகும்.
அவர்கள் இலங்கை பிரஜைகள்தான் என்றும் தெரிவித்தார்.
************

அச்சுறுத்தும் அடியாட்களும் அஞ்சும் நீதியும்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் கூறி அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது நடவடிக்கை தொடர்பாக ஆராய விசேட தெரிவுக்குழு அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளமையானது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தெரிவுக்குழு அமைப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இல்லை எனக் கூறுவது நாடாளுமன்றை அவமதிக்கும் செயல் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாடாளுமன்றிலுள்ள அரச தரப்பு உறுப்பினர்கள் 75 பேர் சரத் என். சில்வாவுக்கு எதிராக விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.           
************

பிளவுபட்ட இலங்கை ஒத்துக் கொண்ட சிங்களம்
இலங்கை தொடர்ந்தும் இன மற்றும் மத ரீதியில் பிளவுபட்டே கிடக்கிறது.
போருக்குப் பின்னரான இந்தக் காலம் மிக முக்கியமானது.
இந்தக் காலத்தில், போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற உதவுவதற்கான வாய்ப்புகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கி நோர்வே வெளியிட்ட, அமைதிக்கான அடமானங்கள் என்ற அறிக்கை வெளியீட்டுக்காக ஒஸ்லோ மிலிந்த சென்றிருந்தார்.
அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், முக்கியமான புள்ளி ஒன்றில் தாம் நின்றுகொண்டிருப்பதாகவும், தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இன்னும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான தமது அரசியல் நடவடிக்கைகள் இனங்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்தி விட்டது.
ஒரு குழு அல்லது மற்றொன்று மேலாதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்தின.
குறுகிய வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது தூர நோக்குள்ளவர்களாக இருக்கவேண்டும்.
சாதாரண சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்றே வெளியே இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள்.
தமிழர்களோ சிங்களவர்களோ தேசியம் பற்றிப் பேசுவதில் தவறில்லை.
ஆனால் அதனால் அவர்கள் அழிவுக்கு உள்ளாகக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
************

அரசின் தொடரும் அடாவடி?
பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஆய்வுகளுக்கு ஏற்ப நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இத் தெரிவுக் குழுவினால் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்ட 115 அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே உத்தேச அமைச்சரவை மாற்றங்களை செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிவருவதற்கு மேலாக சிலவற்றில் ஊழல்கள், அரசின் நிதிக் கொள்கைகளை உதாசீனம் செய்தல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்று வருவது தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் கால்வாய் அமைப்பு சபை, இலங்கை போக்கு வரத்துச் சபை என்பன கூட இலாபத்தில் இயங்கவில்லை.
ஆனால் இவை பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன என்று அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.               
************

பதவியேற்க பதவி விலகும் மனோ?
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி அலுவல்களை மேற்கொள்வதன் பொருட்டு மனோ கணேசன் இராஜினாமா செய்வதாக தெரியவந்துள்ளது.
தனது இராஜினாமா குறித்து மனோ கணேசன் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அறியக்கிடைக்கிறது.
இதன்படி மனோ கணேசனின் வெற்றிடத்திற்கு கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகுமாயின் அதற்கு மனோ கணேசன் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஐனநாயக மக்கள் முன்னணியின் கோரிக்கையாகும்.
இக்கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி லண்டன் வந்துள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது
************

புலத்தின் பலத்தை தெரிந்து கொண்ட பீரிஸ்!
புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதேவேளை விடுதலைப் புலிகளின் ஈழம் திட்டத்துக்காக செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை.
போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள போதும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்திச் செல்வதைத் தடுப்பதில் அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தமது மரபுவழி இராணுவ பலத்தை இழந்த போதிலும் வெளிநாடுகளில் தொடர்ந்து நிதி சேகரிக்கிறார்கள்.
இருந்தபோதும், விடுதலைப் புலிகளுக்கு தயவு காண்பிப்பதாக எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
மிக அண்மையில் பேர்த்தில் கொமன்வெல்த் மாநாட்டின்போது கூட விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள்.
பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் கூட தொடர்ந்து புலிகளின் கொடிகளை பகிரங்கமாக ஏந்திச் செல்கிறார்கள் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்
************