Wednesday 9 November 2011

செய்திகள் 09/11


சார்க்கில் அமெரிக்க குழு
மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
இதன்போது, அங்கு மஹிந்த ராஜபக்ஷவை றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டு நகரில் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் நாள்களில் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்கக் குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கவுள்ள றொபேட் ஓ பிளேக், மாலைதீவில் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியாவும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளனர் எனவும் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், அரசுத் தலைவர் மஹிந்தவிடம் வலியுறுத்தவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*******************

சித்திரவதைகளை தொடரும் ஸ்ரீலங்கா
ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டினர்.
சிறிலங்கா படைகளின் இரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் கேர் அம்மையார் இந்த அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுக்களால் இயக்கப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இரகசியமாக இடம்பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதுவே அங்கு நடந்துள்ளது என்றும் அவர் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ஏழு இரகசிய தடுப்புமுகாம்கள் இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவற்றில் 5 முகாம்கள் வவுனியாவிலும், இரண்டு முகாம்கள் முல்லைத்தீவிலும் இருப்பதாகவும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தோட்டம் மகா வித்தியாலயம், 211 பிரிகேட் தலைமையகம், வெளிக்குளம் மகாவித்தியாலயம், புளொட் துணை ஆயுதக்குழு நிலையம், தர்மபுரம் ஆகிய 5 முகாம்கள் வவுனியாவிலும், மேலும் 2 முகாம்கள் முல்லைத்தீவிலும் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட 5 கட்ட்டங்கள், வீடுகளைக் கொண்ட தர்மபுரம் இரகசியத்தடுப்பு முகாமில் ஆண்களும் பெண்களுமாக 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 பேர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்களான 300 பொதுமக்களும் அதில் அடங்குவதாகவும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.
காணாமற் போதல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு சிறிலங்காவை உலகில் அதிகளவில் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.
பாரிய மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றதாக தனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளில் பலவந்தமாக காணாமல் போனது, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனிதஉரிமை குறித்த வழக்குகளில் முன்னிலையாகும் சட்டவாளர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும்.
சிறிலங்கா அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறியிருந்தது.
ஆனால் இதுபோன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் என்றும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டார்.
சித்திரவதை தொடர்பான ஐ.நா உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று, இந்த மாநாட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான, சிறிலங்கா அமைச்சரவையின் ஆலோசகரும், முன்னாள் சட்டமா அதிபருமான மொகான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்திரவதைகளை சகிக்கமுடியாது என்ற கொள்கையில சிறிலங்கா அரசாங்கம் 110 வீதம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.
*******************

இந்தோனிய குழு ஸ்ரீலங்காவுக்கு
இந்தோனேஷிய நாடாளுமன்றத்தின் உயர் மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதுவராலயம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எட்டு உறுப்பினர்களை கொண்ட இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாக இந்தோனேஷிய தூதுவராலய பேச்சாளர் தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பிற்கினங்க இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் இத்தூதுக்குழுவில் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்குழுவினர் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
*******************

பணத்தைக் கொட்டித் தீர்த்த தேர்தல்
மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ள உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு 195 கோடி ரூபா செலவாகியுள்ளது.
இதற்கமைய மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் காவல்துறை திணைக்களத்துக்கு 31 கோடி ரூபாவும், தபால் திணைக்களத்துக்கு 25 கோடி ரூபாவும், அரச அச்சகத்துக்கு 13 கோடி ரூபாவும் செலவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு மேலதிகமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த உதியோகத்தர்களுக்கான எரிபொருள் செலவினம் மற்றும் தேர்தல்கள் அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குக் கணிசமான தொகையொன்று செலவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த உள்ளூராட்சித் தேர்தல்களுக்காகத் தேர்தல் செயலகம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 200 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்தது.
மேலும் 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின் முதற்கட்டம் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியிலும், இரண்டாம் கட்டம் ஜூலை மாதம் 23 ஆம் திகதியிலும், மூன்றாம் கட்டம் ஒக்ரோபர் மாதம் 08 ஆம் திகதியிலும் இடம்பெற்றிருந்தது.
இந்த மூன்று கட்டங்களிலும் 322 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
*******************

மனோ கணேசனுக்கு பதவி
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனோ கணேசனுக்கு பாராளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என யானைச் சின்னத்தில் போட்டியிட்டன.
இத்தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட அவரது கட்சி சார்பில் பிரபா கணேசன் மற்றும் குமர குருபரன் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டனர்.
இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தபோதும் பின்னர் அது வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மனோ கணேசன் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கியது.
அதன் பின்னர் 18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றிற்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தன்னிச்சையாக அரசுடன் இணைந்து கொண்டார்.
இதன் பின்னர் பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாமல் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தற்போது புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியதுடன் ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களை பெற்றது.
இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்த்திரமாக கொழும்பு மாநகர சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மனோ கணேசன் கட்சியின் ஆதரவை நாடினார்.
இதன் ஒரு அங்கமாக ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனை தனது இல்லத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கைகள் சிலவற்றை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் செல்வதற்கு முன்னர் மனோ கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு 8ம் திகதி கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் தான் லண்டனில் இருந்து திரும்பியதும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.
உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் நிபந்தனைகள் அடங்கியுள்ளன என்று இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது என்ற உடன்படிக்கை உள்ளடங்கலாம் என நம்பப்படுகிறது.
மனோ கணேசனுக்கு ரணில் விக்ரமசிங்க வரலாற்றுத் துரோகம் இழைத்துவிட்டார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க பரிகாரம் தேடிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
*******************

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவரின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவரது மனைவியான சுமனா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
தனது கணவரின் கொலையுடன் தொடர்புடையோர் என சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசாகரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா உட்பட மேலும் பலரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
*******************