Monday 7 November 2011

செய்திகள் 07/11


தொடரும் சந்திப்பு
லண்டன் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் லண்டனில் வந்திறங்கினர்.
முற்பகல் 10.40 மணிக்கு ஹீத்துறூ விமான நிலையத்தில் வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் நேற்று லண்டனில் அவர்களை வரவேற்கும் மதிய உபசார ஒன்று கூடல் இடம்பெற்றது.
இதில் லண்டனில் உள்ளவர்கள் எந்த வேறுபாடுமின்றி ஒற்றுமையுடன் பல நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு தமது மிகப் பெரும் ஆதரவை வழங்கினர்.
சகல அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொது அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்று கூடிய இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இனைத்து தரப்பினரும் வழங்கிய இந்த ஒத்துழைப்பையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர் எனவும் அங்கு கலந்து கொண்மடவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
மூன்று நாள்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
*******************

தவறை உணர்ந்த ஜே.வி.பி
அரசுத் தலைவர்த் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று ஜே.வி.பி கூறியுள்ளது.
ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது.
இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு அரசுத் தலைவர்த் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது.
2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.
தற்போது, கட்சியின் அந்த முடிவுகள் மகா தவறானவை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனோ தனி மனிதர்களுடனோ தேர்தல் கூட்டு ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க நேற்றுக் கொழும்பில் தெரிவித்தார்.
பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக திஸநாயக்க தொடர்ந்த போதும் இதனை நேற்று அறிவித்தார்.
கட்சியின் தவறுகளுக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பாகக் காணப்பட்ட சமநிலைத் தன்மை, போருக்குத் தமது கட்சி காட்டிய முழுமையான ஆதரவால் சமநிலை இழந்துபோனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அது மிகத் தவறான முடிவு என்று கட்சி இப்போது புரிந்துகொண்டுள்ளது.
பொதுவுடமையை நோக்கி நாட்டை முறையாக முன்னகர்த்துவதற்கு சிறிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் திஸநாயக்க பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
கட்சியின் தற்போதைய தலைமை கைக்கொண்ட கொள்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜே.வி.பி. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் மன்னிப்புக்கோரலும் வெளிவந்துள்ளன.
*******************

புரட்சிக்கு அழைப்பு
தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு டியூனிஷியா, எகிப்தில் நடந்ததைப் போன்று மக்கள் சக்தி பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. நேற்று வலியுறுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, டியூனிஷியா போன்ற நாடுகளில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கம் மக்கள் சக்தியினால் கவிழ்க்கப்பட்டது எனக் கூறினார்.
இலங்கையிலும் சர்ச்சைக்குரிய தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தை வாபஸ் பெறச் செய்வதற்கு மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது என அவர் கூறினார்.
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிப்பதில் நாடாளுமன்றத்தில் எம்.பிகளின் எண்ணிக்கையை கையாளாமல் மக்கள் சக்தி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய, செயற்பாடு குறைந்த நிறுவனங்கள், பயன்பாடு குறைந்த சொத்துக்கள் மீளாய்வு சட்டமூலம் குறித்து அவர் கூறுகையில், இதை அரசாங்கம் சட்டமாக்குவதற்கான எந்த காரணமும் இல்லை.
இது நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், எந்த சொத்துகளையும் வெறும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிப்பதற்கு அரசாங்கத்தினால் முடியும் எனக் கூறினார்.
சுவீகரிப்பதற்காக 37 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஏனயை தனியார் நிறுவனங்கiயும் இந்த சட்டத்தின்கீழ் வேறொரு வர்த்தமானி அறிவித்தலை விடுப்பதன் மூலம் சுவீகரிக்கலாம் என அவர் கூறினார்.
அரசாங்கத்தில் இவ்விவகாரங்களை கையாள்வதற்குப் பொறுப்பான தனிநபர், தனது சொந்த விருப்பு விருப்புக்கேற்ப தீர்மானம் மேற்கொள்ள முடியும்.
இது வர்த்தகர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையே அன்றி வேறல்ல.
இனிமேல் அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரங்களுக்கு நிதியளிக்காத தொழில்முனைவோர் மீது பாயும்.
இதுதான் இத்திட்டத்தில் மறைந்துள்ள நிகழ்ச்சி நிரலாகும் என அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
இது ஒரு ஹிட்லர் பாணி அரசாங்கமாகும். இதைத்தான் ஸிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபேயும் செய்தார் எனவும் அநுர குமார திஸாநாயக்க விமர்சித்தார்.
*******************

அரசுடமையாக்கும் திட்டம் தொடருமா?
நட்டத்தில் இயங்கும் அரசு, தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்குவது தொடர்பாக அரசின் உத்தேச சட்டமூலம் நாளைமறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதனை ஒத்திவைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது எனத் தெரியவருகிறது.
இந்த உத்தேச சட்டமூலம் நாளைமறுதினம் சபையில் சமர்ப்பிப்பதாக கடந்த வாரம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதனை எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனதீர்மானித்திருந்தமை தெரிந்ததே.
இதற்கிடையில், இந்த உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக பிக்கு ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியபோதும் குறித்த சட்டமூலத்திலுள்ள விளைவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவசர அவசரமாக இதனை செய்யக்கூடாது என்றும் அதில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தச் சட்டமூலத்தின்படி சுமார் 35இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை அரசுடைமையாக்க அரசு உத்தேசித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் அரசியற் கட்சிகளின் எதிர்ப்புகளை கருத்திற்கொண்டுள்ள அரசு, இதனை உடனடியாக சபையில் சமர்ப்பிப்பதா, இல்லையா என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சட்டத்துறை நிபுணர்களுடனும் இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
*******************

சுயாதீன விசாரணை?
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் அலிஸ் ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த வாரம் எழுப்பிய கேள்வி தொடர்பில் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் தான் மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான எந்த விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ் விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ‌ பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ‌­ மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கையின் மனிதவுரிமை விவகாரங்கள் குறித்து பிரித் தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சின் அலுவலகம் வெளியிட்ட மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயகம் -2010 என்ற அறிக்கையில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை கவலைக்குரிய நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனிதவுரிமை விவகாரங்கள் குறித்த தமது கரிசனைகளை தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விவகாரம் தொடர்பில் அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேசியதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்படக்கூடிய மக்களின் மனிதவுரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்பட வேண்டும் என்பதை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என அலிஸ்ரெயர் பேர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
*******************

இல்லாததை எதிர்பார்ப்பது!
உலக நடைமுறையில் உள்ள ஊடக முறைமைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் செயற்பட முனைவதாக, இணையத்தளங்களை தடைசெய்யும் நடவடிக்கைளுக்கு சுதந்திர ஊடக மையம் கண்டித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிறிலங்கா தொடர்பான செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அண்மையில் ஊடக அமைச்சு அறிவித்திருந்தது.
இந் நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் ஊடக அமைப்புக்களுடன் கலந்துரையாட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஊடக நடைமுறைகளுக்கு எதிராக செயற்பட அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக கண்டித்துள்ளார்.
அதேவேளை முடக்கப்பட்ட எந்த இணையத்தளங்களையும் புரொக்சி முறையின் மூலம் பார்க்க முடியும் என தொழில் நுட்ப நிபுணர் கிஹான் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************