Tuesday 1 November 2011

செய்திகள் 31/10


பதிவின் அவசியம்
யாழ்ப்பாண மக்கள் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் கோரியுள்ளது.
வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை என தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ளவில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
வாக்காளா இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் 15ஆயிரம் மேலதிக வாக்காளர்கள் பதியப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் ஒன்றினால் உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் விரைவில் இரண்டு கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
******************

திட்டமிட்டபடி சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது.
இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீமூனைச் சந்திப்பதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள இலங்கையின் தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பை ஐ.நா பொதுச்செயலாளர் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த இலங்கை அரசுத் தலைவரின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இது தொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர் என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீமூனுக்கு எடுத்துக் கூறி இதன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பான் கீமூன் சந்திக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையிலேயே இலங்கை அரசின் கடுமையான அழுத்தங்களை பான் கீமூன் நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளார்.
இதேவேளை, நியூயோர்க்கில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட ஐ.நா. உயரதிகாரிகள் பலரையும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமிழ்மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக விளக்குவர் எனத் தெரிகிறது.
******************

பிரித்தானிய பிரதமரின் ஆலோசனை
அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டின் போது சிறிலங்கா அதிபரிடம், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு எதையும் மறைக்க வேண்டியதில்லை என்று தாம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாகவும் டேவிட் கமேரான் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடைபெறும் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை கனடா புறக்கணிக்கக் கூடும்.
இதுதொடர்பாக கனேடியர்களுடன் கலந்துரையடியுள்ளதாகவும், தாம் அனைவருமே ஒரேவிதமான கண்ணோட்டத்துடன் தான் இருப்பதாகவே தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமைகள் விடயத்தில் சிறிலங்கா நிறையவே செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிறைவே செய்ய வேண்டும். இது பற்றி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகவும் கூறினார்.
அதேவேளை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை பிரித்தானியா புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
******************

கனடாவின் உறுதியான நிலைப்பாடு
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை என்பவை குறித்து சுயாதீன விசாரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்காவிடின் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
இலங்கை படையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதென கனேடிய பிரதமர் ஸ்டீபர் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவருடன் கதைக்க தனக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாக அவுஸ்திரேலியாவில் வைத்து ஸ்டீபன் ஹார்ப்பர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய தவறியுள்ளார்.
இருந்த போதும் கனடா தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது அழுத்தங்களை பிரயோகிக்கும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கனடா இலங்கை விடயத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
******************

தமிழின செயற்ப்பாட்டாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாள்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் திகதி இதேபாணியில் பாரிசில் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச்சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன், ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்பொழுது இதேபாணியில் பருதி அவர்கள் மீது ஆயுதபாணிகளால் கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
******************

தொடரும் அரச பயங்கரவாதம்
நாட்டில் அரச பயங்கரவாதம் தொடர்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் குறித்த பிரதேச மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும்.
அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு மெய்யான சேவை ஆற்றியிருந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்திருக்க வாய்ப்பில்லை.
30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்த அரசியல் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விமல் வீரவன்ச, சம்பிக்க போன்றவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எந்தவிதமான முன்னேற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை.
இந்த அரசாங்கம் நாட்டின் தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஏமாற்றி வருகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்படும் நிதி அறிக்கைகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
******************

ஊழலின் சுமை
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளின் சுமை மக்கள் மீது திணிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஊழல், மோசடி மற்றும் வீண் விரயத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது சுமத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தை போன்றே மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை கொல்லாமல் கொல்லும் அரசாங்கத்தை விரட்டியக்க வேண்டும்.
வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு எந்தவொரு அரசாங்கமும் பொருட்கள் சேவைகளின் விலையை உயர்த்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என உறுதிமொழி வழங்கி சில வாரங்களில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றங்களை ஈடு செய்ய வேண்டுமாயின் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 10ஆயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
******************