Friday 11 November 2011

செய்திகள் 11/11


மீண்டும் பேச்சு
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி அரசு - கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது சமர்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இலங்கையின் இனப்பிரச்சினை, தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடிய நிலையில் அரச தரப்புடனான அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கியம் வாய்ந்ததாக அமையுமென கருதப்படுகிறது.
***************

தொடரும் அறிக்கைகள்
இலங்கையின் சமாதான முன்னநகர்வுகள் குறித்து நோர்வேயில் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்குகொள்ளவென இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட நோர்வே சென்றுள்ளார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வே மிலிந்த மொறகொடவை நோர்வே அனுப்ப பணித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது கிறிஸ்டியன் மிச்சேல்சன் கல்வியகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம், 2009 சமாதான உடன்படிக்கை காலம், தமிழ் புனர்வாழ்வு அமையம், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவை குறித்து அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
***************

சந்திக்கும் உற்ற நண்பர்கள்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நேற்று மாலைத்தீவில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றம், இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரசுத் தலைவர் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கென இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இந்திய இச்சந்திப்பின்போது இணக்கம் வெளியிட்டுள்ளது.
***************

அறிவில்லாத அதிகாரி?
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்டு அரசுத் தலைவர் முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்ற குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசுத் தலைவர் தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார்.
அவரால் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.
வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சித்திரவதைகள் தொடர்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடர்ன ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
***************

அம்பலமாகும் அடாவடி
நட்டமடையும் சொத்துக்களை சுவீகரிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு அம்பலமாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இச்சட்டமூலத்திற்கு அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அரசாங்கம் பிடிவாதமாக இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்திருந்தால் சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருக்க முடியும்.
திடீரென இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு புலனாகியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
***************

கெஞ்சும் ஸ்ரீலங்கா
சர்வதேச சமூகம், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தாருஸ்மன் அறிக்கை அடிப்படையற்றது, அதனை உத்தியோகபூர்வமான ஆவணமாக பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதில் அர்த்தமில்லை.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மூலம் சுயாதீனமான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச அரங்கத்தில் ஸ்ரீலங்காவின் முகத்திரை கிழிந்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள முடியாத ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகள் இவ்வாறு கூக்குலிடுகின்றனர் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படித்தான் இவர்கள் முயன்றாலும் உண்மைகள் வெளிவருவதை அவர்களால் தடுக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
***************

கவலைப்படும் ஜே.வி.பி
தமது செயற்பாட்டினால் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கப்பட்டது என ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை போன்ற முதலாளித்துவ கட்சிகளுடன் ஜே.வி.பி கூட்டமைத்து செயற்பட்டமை காரணமாக நாட்டுக்கு பல வெற்றிகள் கிடைத்தன.
அதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்தியமை காரணமாக பல தீமைகளும் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கூட்டமைப்பினால் தமிழீழம் என்ற எண்ணத்தை கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடிந்தது எனவும், ஆனால் நாட்டில் சர்வதிகார முதலாளித்துவ அரசாங்கம் உருவாவதை ஜே.வி.பியினால் தடுக்கமுடியாமல் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது தமது கட்சியின் நோக்கம் சர்வதிகார ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதாகும் என்று லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
***************

தொடரும் கொலைகள்
யாழ்ப்பாணம் வரணி கரப்பன்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம்  இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்தனர்.
40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் அவரது வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியை சொந்த இடமாகவும் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தனது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்துசெல்வது வழக்கமாகும்.
அவ்வாறே இவர் தனது சொந்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை வந்த பின்னர் மீண்டும் மீசாலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லவில்லையெனவும் இதனால் அவரைத் தேடி கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது அவர் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
பின்னர் இது தொடர்பில் அவரது உறவினர்கள் யாழ். காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் கீழ்த்தளம் இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விடப்பட்ட நிலையில் அவ்வீட்டின் இரண்டாம் மாடியிலேயே குறித்த நபர் அவ்வப்போது தங்கிச்செல்வது வழமையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
***************