Friday 4 November 2011

செய்திகள் 04/11


தொடரும் ஆராய்வு! தீர்வு எப்போது?
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கடுமையான தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது.
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்திருக்கும் இந்தக் குழு, அது குறித்தான சிபார்சுகளைக் கடந்த காலங்களில் இலங்கையிடம் கொடுத்திருந்தது.
இப்போது அந்தச் சிபார்சுகள் இலங்கை அரசால் கிரமமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்தக் குழு ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டில் ஆரோக்கியமான நிலைமை இல்லையென உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் செய்துள்ள முறைப்பாடுகளையும் சித்திரவதைகளுக்கெதிரான குழு இந்த முறை விரிவாக ஆராயவிருக்கிறது.
அதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்திருக்கும் விளக்கமும் இந்தக் கூட்டத்தின்போது தீவிரமாக ஆராயப்படவிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச ஜூரர்களுக்கான ஆணைக்குழு, இலங்கை அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட்ட நிறுவகங்கள் செய்திருக்கும் விமர்சனங்களும் இந்தக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.
*****************

அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வென்டி சேர்மனை சந்தித்துப் பேசியுள்ளது.
இந்த மாதம் வெளிவரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளோம் என்பதே சேர்மனின் பிரதான கண்ணோட்டமாக இருந்தது.
இந்த அறிக்கை உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி, அதனை நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தான் முக்கியமான செய்தி. அதனை தாம் சொல்லி விட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
அறிக்கை தொடர்பாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் மேலும் கூறியுள்ளார்
*****************

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய முயற்சி
போர்க்குற்றத்தை விசாரணை செய்து அக்குற்றச்செயல்களை புரிந்தவர்களை தூக்கில் போடுவதால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உண்மையில் போர்க்குற்றம் விசாரணை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்டார்கள் என்பது நிரூபிக்கப்படும்.
அத்துடன், சிங்கள அரசுகளினால் சிங்கள பெரும்பான்மை இனத்தால் தமிழினம் அழிக்கப்பட்டது என்ற செய்தி உலகத்திற்கு தெரியவரும்.
மேலும் தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழமுடியாது என்ற உண்மை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக புலப்படுத்தப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தமையானது அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பிரச்சினைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.
எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்வதற்கு அரசாங்கம் முயல்கின்றது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயவில்லை.
இலங்கையில் அமைதி, நிம்மதி வரவேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
வடக்கில் தமிழர் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர், தமிழர்களின் காணிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்களைச் செய்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
முறிகண்டிக் கோயிலுக்கு அருகில் உள்ள அறிவியல் நகர்ப்பகுதியில் சிங்கள மக்கள் காணிகளை விலைக்கு வாங்கி அங்கு குடியேறி வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாதுவிட்டால் அமைதியான நிம்மதியான சகவாழ்வும் சகோரத்துவமும் இலங்கையில் எக்காலத்திலும் நிலைக்காது.
இதனை சிங்கள தேசம் உணரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
*****************

உதவும் ரஷ்யா!
யுத்தத்தின்போது எவ்வளவு அர்ப்பணிப்புடன் ரஷ்யா உதவிபுரிந்ததோ அதேபோல் பொருளாதார அபிவிருத்தியிலும் உதவிசெய்யும் என்று ரஷ்ய தூதுவர் விளாடிமிர் பி.மிகேலோ குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே உள்ளது.
எனவே இவ்வுறவு மேலும் வலுப்பெற ரஷ்யா இலங்கையுடன் ஒன்றினைந்து செயற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட ரஷ்யா உதவி செய்யும் என்றும், பொருளாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றலிலும் உதவி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியொன்றில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
*****************

அனுப்பி வைக்கப்படும் பட்டியல்
ஜே.வி.பியின் அங்கத்தவர்களது பெயர் உள்ளடங்கிய புதிய பட்டியல் தேர்தல்கள் ஆணையளாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வாவினால் கடந்த தினத்தில் இந்த பட்டியல் ஆணையாளருக்கு அனுப்பட்டதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய பெயர் பட்டியலுக்கு கட்சியின் மத்திய செயற்குழு தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பியின் பொது சபை கூட்டமானது இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் மாதம் கூடியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பிரதான செயலாளரினால், கட்சியின் மத்திய செயற்குழு, அரசியல் சபை, மற்றும் கட்சியின் அங்கத்தவர்களது பெயர் உள்ளடங்கிய புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலே தற்சமயம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தேசிய சுதந்திர முன்னணியும் தமது புதிய உறுப்பினர்களது பட்டியலை தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்று கையளித்துள்ளது.
*****************

இனவாத தேரர்
தற்போது நடைமுறையிலிருக்கும் தேசவழமைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்யவேண்டும் எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர், வடக்கில் இன்று ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைக்கு இந்தச் சட்டமே மூலக் காரணம் என்றும் கூறினார்.
இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் இலங்கை நாட்டிலுள்ள அனைவரதும் காணிப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்தாலும், சிங்கள மக்களே பெரும்பான்மையின மக்களாக உள்ளனர்.
அனைவரும் இலங்கைப் பிரஜைகளே என்று தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே செறிந்து வாழ்கின்றனர்.
இதனால் அந்த மாகாணத்திலுள்ள காணிகள் அனைத்தும் வடக்கு மக்களுக்கே சொந்தம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது தவறாகும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
*****************

பழிவாங்க துடிக்கும் ஸ்ரீலங்கா
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறிலங்கா சட்டமாஅதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதக்கொள்வனவு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி தேடப்பட்டு வரும் அவரது மருமகன் தனுன திலகரட்ணவை, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே அனோமா பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அதுதொடர்பான கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
அத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தனுன திலகரட்ன தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது அறிக்கையில் கூறியுள்ளனர்.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான, வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 18ம் நாள் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
*****************