Tuesday 8 November 2011

செய்திகள் 08/11


சனல்4 அம்பலமாக்கிய உண்மை
போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாது கழுத்தில் கம்பியைப் போட்டு சுருக்கிட்டு பின்னர் தண்ணீர் தொட்டி ஒன்றில் தன் தலையை மூழ்க்கவிட்டதாகவும் அப்போது தான் மூச்சுத் திணறி கிட்டத்தட்ட தான் இறக்கும் நிலைக்குச் சென்றதாகவும் ஒரு தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தமிழ் இளைஞர் தெரிவிக்கையில் தன்னைக் கட்டி வைத்து அடித்ததாகவும் பல நாட்களாக தான் சிறையில் வாடிய நிலையில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டவேளை சிறு நீரை இராணுவத்தினர் தந்து குடிக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனை விட தான் போரில் அகப்பட்டு இறந்திருக்கலாமே எனத் தான் எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையானது ஐ.நாவின் உறுப்பு நாடாக இருக்கின்ற போதும் அது ஐ.நா சாசனங்களை மீறி பாரிய சித்திரவதைகளை மனித குலத்துக்கு எதிராகச் செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
போர் குற்றம் மற்றும் இன அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க தற்போது தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்யும் மேலதிக குற்றச்செயல்களில் இலங்கை ஈடுபட்டும் வருகிறது என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் பலர் ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதன் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா வின் அதிகாரிகள் இது குறித்து ஆராய உள்ளனர்.
இதனால் இலங்கை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
போர்குற்றச்சாட்டு இன அழிப்பு என்று இலங்கை மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதை என்னும் ஒரு களமும் புதிதாகத் திறக்கப்பட்டு இலங்கை அரசு மீது மும்முனைத் தாக்குதல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது.
********************

தொடரும் சித்திரவதை
இலங்கையில் கைதிகள் மிகவும் மோசமான முறையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை முறையிட்டுள்ள போதும் இலங்கை அது குறித்து விசாரணை நடத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சித்திரவதைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுள்ள போதும் இடம்பெறும் சித்திரவதைகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை என உரிமைக் குழுவின் இலங்கை நிபுணர் யொலன்டா பொஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ளும் சித்திரவதைகளை விசாரணை செய்ய சுயாதீன அலகு ஒன்று இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கைதிகள் மீது காவல்துறையினர், துணை இராணுவக் குழுக்கள், சிறைச்சாலை அதிகாரிகள் சித்திரவதைகளை கட்டவிழ்த்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியிருந்தது.
********************

சார்க் அமைச்சர்கள் மகாநாடு
சார்க் மாநாட்டை முன்னிட்டு இடம்பெறும் வெளிவிவகார துறை அமைச்சின் செயலாளர் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
17 வது சாக் மாநாடு இந்த முறை மாலைதீவின் அட்டு நகரில் இடம்பெறவுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம கலந்து கொள்ளவுள்ளார்.
இதனிடையே, நாளையதினம் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், எதிர்வரும் 10ம் , 11ம் திகதிகளில் இடம்பெறவுள்ள சார்க் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளையதினம் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அரசுத் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரசின் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும், மற்றும் போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களை சார்க் வலயத்தில் இருந்து அகற்றுவது தொடர்பான யோசனையொன்றும் இலங்கையினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் செயற்பாடுகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படும் 5 செய்தி இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
பிரிவினைகளை தூண்டும்வகையிலும், ஒருவரின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையிலும் குறித்த இணையத்தளங்கள் செய்திகளையும், ஆக்கங்களையும் வெளியிட்டு வந்ததாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சு செயலாளர் டப்ளியு.பி.கனேகல தெரிவித்துள்ளார்.
********************

மகிந்தவை சந்திக்கும் மன்மோகன்
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இடைநிறுத்திய பேச்சுக்களை மீள ஆரம்பித்த போதும் எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில், அமெரிக்க, பிரித்தானிய, கனேடிய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் சிறிலங்கா அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.
சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற நிலையிலேயே, இந்தியப் பிரதமரும் சிறிலங்கா அதிபரும் மாலைதீவில் சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் பேர்த்தில் நடைபெற்ற கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
அதற்கு முன்னதாக கடந்த செப்ரெம்பர் மாதம் நியுயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போதே மகிந்த ராஜபக்சவும் மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இருவரும் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கை எதிர்வரும் 15ம் நாள் அளவில் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.
சார்க் மாநாட்டில பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபரும், இந்தியப் பிரதமரும் நாளை மாலைதீவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
********************

சார்க் மகாநாட்டில் பார்வையாளராக அமெரிக்கா
மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில், தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
அட்டு நகரில் எதிர்வரும் 10ம், 11ம் நாட்களில் 17வது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக றொபேட் ஓ பிளேக் இன்று மாலைதீவு பயணமாவதாகவும், இவர் எதிர்வரும் 13ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
********************

அதிகார மாற்றம் குறித்த முறைப்பாடு
பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை செயற்குழு நியமித்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவரின் அதிகாரங்கள் வேறு ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை கட்சியின் யாப்பை மீறும் செயலாகும் என தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய பிரதி எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு பிரதித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பதில் எதிர்க்கட்சித் தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட்டதன் மூலம் கட்சியின் தலைமைத்துவம், கட்சியின் யாப்பை மீறியுள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.
********************

அரசியல் மயப்படும் காவல்துறை
சட்டம் சீர்குலைக்கப்பட்டு காவல்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பன்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதாகவும், காவல்துறையினரை மக்கள் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையிலும், காவல்துறையினருக்கு மத்தியிலும் மோதல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாகவும் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
********************

சொத்துப் பறிப்பு சட்டம்?
குறைவருமானம் பெறும் வர்த்தகங்கள் மற்றும் உடமைகளை மீளமைப்பது குறித்து தயாரிக்கப்பட்ட சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அந்த சட்டமூலத்தின் மீதான விவாதம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நட்டத்தில் இயங்கும் வர்த்தக நடவடிக்கைகளை அரசிற்கு கையேற்கும் சட்டமூலம் பிரதமர் டி.எம்.ஜயரட்னவினால் மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகரினால் இன்று சபைக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதன்கீழ், குறைவருமானத்தில் இயங்குவதாக கூறப்படும் 37 வர்த்தக நடவடிக்கைகளை அரசு கையேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
செவனகல மற்றும் பெல்வத்தை சீனி தொழிற்சாலைகளும் இதில் உள்ளடங்குகின்றன.
இந்தநிலையில், நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் தொடர்பாக மேலும் பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
********************