Sunday 13 November 2011

செய்திகள் 13/11


மகாநாட்டை புறக்கணித்த நாடுகள்
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை நடவடிக்கை பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன் ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த ஆய்வுரையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்காததும், பிரித்தானியா, தென்னாபிரிக்கா ஆகியன வெளியேறியதும் சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஜப்பான், மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்காளாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நாளை காலை இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
***************

அச்சத்துடன் அவதானிக்கும் அரசு
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பில் ஒளிபரப்ப தயாராக்கிக் கொண்டிருக்கும் அடுத்த காணொளி தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சனல் 4வின் புதிய காணொளி தொடர்பில் கூடிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் பொய் என நிரூபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக வெளிவந்த இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் 2வது பாகத்தினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இலங்கையின் கொலைக்களம்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் அதன் அடுத்த பாகத்திற்குரிய ஆவணப்படத்தினைத் தயாரிக்குமாறு சனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் சமகால விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் னுழசழவால டீலசநெஇ ஐவுN தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்புதிய ஆவணப்படத்தில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்; விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, போர்க்குற்றங்கள் பற்றி யாரெல்லாம் அறிந்திருந்தார்கள், போர்க்குற்றங்களைத் தடுக்க உலகம் ஏன் தவறியது என்பது குறித்தும் ஆராயப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் துழn ளுழெறஇனால் வழங்கப்படவுள்ள புதிய இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தில், போரின் இறுதி நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பதை வலுவான ஆதாரங்கள் நேரடிச் சாட்சியங்கள், காணொளி மற்றும் ஒளிப்படங்கள் மூலமாக ஆவணப்படத்தின் நெறியாளர் ஊயடடரஅ ஆயஉசயநயால் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
***************

நியாயம் கோரியே பயணம்
ஜே.வி.பி. காலத்தின்போது தமது மக்களுக்காக இன்றைய அரசுத் தலைவர் சர்வதேச அரங்கிற்குச் சென்று குரல் கொடுத்தார்.
அது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக நீதிகோரி வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தனர் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை ஏன் தோல்வி கண்டது. போர் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது.
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்தோ, காணாமல் போனோர் குறித்தோ ஆராய்ந்து தீர்வு காண முற்படவில்லை.
எனவே, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அலட்டிக் கொள்பவர்கள் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கண்ட தீர்வு என்ன என்பது குறித்துக் கூற முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அழுது புலம்புவதை விடுத்து இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண இந்தச் சக்திகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
***************

தோற்றுப் போன ஸ்ரீலங்கா
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள் முதலிடப்பட்ட முயற்சி ஒன்று தோல்வியடைந்துள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 2018 ஆண்டுக்குரிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300 தொடக்கம் 400 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்பட்டன.
முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன், முன்னாள் அழகுராணி அனார்கலி, உட்பட்ட பல கிரிக்கட் மற்றும் ஏனைய துறைகளை சார்ந்தோர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே 71 நாடுகளின் அமைப்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 27 வாக்குகளை மாத்திரமே இலங்கையால் பெறமுடிந்தது.
இந்த வாக்கெடுப்பின் பிரசாரங்களுக்காக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு, பிரித்தானியாவின் பொது உறவுகள் நிறுவனம் ஒன்றின் உதவியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***************

சுவீகரிப்பு ஆரம்பம்
நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் எதிர்வரும் வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பம் இட்டதோடு அது அதிகாரபூர்வமான சட்டமாக மாறியுள்ளதென அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் மூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி குறித்த சட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதன்போது நட்டமடைந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு உரிய அதிகாரிகளையும் உதவி அதிகாரிகளையும் நியமிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது
***************

சமாதானத்தை காணவில்லை
ஆயுதங்களைக் கொண்டு யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தாலும் நாட்டில் இன்னும் நிரந்தர சமாதானம் உருவாகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமாயின் மத படிப்பினைகளுக்கு அமைய புத்திசாதுர்யமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் சில தரப்பினரே அதன் பலாபலன்களை அனுபவிப்பதாக சசுனட அருண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்
***************

நீதி கோரி கனடாவில் முறைப்பாடு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் குடும்பத்தினர் நீதி வேண்டி கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாப்பரிடம் முறையிடவுள்ளனர்.
இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக பாரத லக்ஸ்மனின் சகோதரியான சுவர்ணா பிரேமசந்திர கனடாவில் இருந்து தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு இணங்கி ஹாப்பரை சந்திப்பதற்கு கனேடிய பிரதமர் காரியாலயம் இணக்கமான பதிலை வழங்கியுள்ளதாக சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
தமது சகோதரரின் கொலைக்கு பாதாள உலக கோஷ்டியினர் காரணம் என்பதற்கு ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது சகோதரரின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அரசாங்கம் இன்னும் சந்தேகநபராக பெயரிடவில்லை.
தமது சகோதரரின் கொலை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் நீதியை வேண்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் என்றும் சுவர்ணா தெரிவித்தார்.
***************