Monday 5 September 2011

செய்திகள் 05/09


யார் பயங்கரவாதி?
இராணுவ முகாம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் எனவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இராணுவ முகாம்களை தாக்கமுற்பட்ட சுமார் 120 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஹாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்வதானது தீவிரவாத நடவடிக்கை என தெரிவித்த அவர் இவ்வாறான செயற்பாடு முற்றிலும் தவறானதொரு விடயம் எனவும் அதனை செய்பவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதத்தினை தோற்கடித்தது போலவே நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என அண்மையில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு தீவிரவாதத்தை ஒழிக்க இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பதனை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது என தெரிவித்த அவர் இராணுவத்தினருடன் கேலிக்கூத்தாடவும் முயற்சிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது போலியான மர்ம மனிதன் பதற்றம் யாழ்ப்பாணத்தில் இல்லை எனவும் காவல்துறையினரும் இராணுவத்தினரும் அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஹாராச்சி தெரிவித்துள்ளார்.
*****************

ஊடகவியலாளர்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்
ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் இறுதியில் கடத்தல் அல்லது கொலையாக மாறுவது சாதாரண சம்பவங்களாக இருப்பதால் லங்காதீப ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய ஊடக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப ஊடகவியலாளரான கிரிஷான் ஜயருக் என்பவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளருக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய ஊடக ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லங்காதீப சிங்கள நாளிதழின் மாத்தறை பிராந்திய செய்தியாளர் கிரிஷான் ஜயருக்கிற்கு, தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அருண குணவர்தனவினால் தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்
*****************


சான்றுகள் பதிவாகலாம் என அஞ்சும் படையினர்!
யாழ் நகரில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படுவது தொடர்பில் எதுவித தீர்மானங்கள் அறிவிக்கப்படவில்லை என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையிலும் முக்கிய பகுதிகளைக் கண்காணிக்கவும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான கருத்தை அடுத்து அவர் அவ்வாறு பதிலளித்தார்.
இந்நிலையில், கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அகற்றிய பின்னர், முக்கிய இடங்களில் கண்காணிப்பு காணொளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வடக்கில் மர்ம மனிதன் சர்சையால் பொதுமக்களுக்கும் - இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
*****************

ஐநா நடவடிக்கை எடுக்குமா?
அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீமூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் ஸ்ரீலங்கா அரசும் தனது எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
அந்த அமர்வில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரமே முக்கியமாக விவாதிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்டப் பல நாடுகள் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்குலகநாடுகளால் இந்தக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு மனித உரிமைகள் சபையில் இவ்வாறு மேற்கு நாடுகளால் கொண்டுவரப்பட்ட இதுபோன்றதொரு தீர்மானம் இலங்கையால் முறியடிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையில் போருக்குப் பிந்திய அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்று இலங்கை ஆதரவு நாடுகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு ஆதரவான அந்தத் தீர்மானத்தை அன்று இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் என்பன ஆதரித்தன.
எனினும் அதன் பின்னர் போர்க் குற்றச்சாட்டுக்களில் இலங்கை ஈடுபட்டது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை மற்றும் பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப்படம் என்பன வெளியாகிய நிலையில் உலகின் கருத்து இன்று பெருமளவில் மாற்றமடைந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணையை நடத்துமாறு மேற்குலக நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அவ்வாறான ஒரு விசாரணையை நடத்த அடியோடு மறுத்து வருவதுடன் போர்க் குற்றங்கள் எவையும் இங்கு இடம்பெறவில்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.
இத்தகைய பின்னணியிலேயே தற்போது மீண்டும் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறான ஒரு நிலையில் என்ன செய்வது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பன தொடர்பாகவே பான் கீமூன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிறைவேற்றப்படும் தீர்மானம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும்படி கோரும் என்றே அனேகமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் அத்தகைய குழுவை எவ்வாறு நியமிப்பது, அதற்கான சட்டதிட்டங்கள் என்ன, விசாரணைக்கான காலவரையறை, உள்ளடக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பன உட்பட்டப் பல விடயங்களையே ஐ.நா. செயலாளர் ஆராய்ந்திருக்கிறார் என்று தெரியவருகிறது.
ஐ.நா. செயலரின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவுக்கான இலங்கை தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
*****************


போர்க் குற்றவாளி நூல் இலவச விநியோகம்
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பான போர்க்குற்றவாளி என்ற நூலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆகியோருக்கு மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு அன்பளிப்பாக வழங்கி வருகிறது.
இதனடிப்படையில், முதலில் கம்ய+னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு 25 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அன்பளிப்பின் முதல் பிரதியை கம்ய+னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.
ஐ.நா.வின் அறிக்கை முதன் முதலில் தமிழில் கொண்டுவரப்பட்டு இவ்வாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதன் மூலம், மேலும் முழுதாக அறிக்கையைப் புரிந்து கொள்ள உதவும் என்றும் தேவைப்படும் காலத்தில் இதைச் செய்துள்ளதைப் பாராட்டி நன்றி தெரிவிப்பதாக தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தை மனிதம் அமைப்பின் சென்னைப் பொறுப்பாளர் சுரேஷ், தா.பாண்டியனிடம் கொடுத்தார்.
மனிதம் சென்னையின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும் சட்டத்தரணியுமான கோபால் மற்றும் மனிதம் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியமும் உடன் இருந்தனர்.
இதேவேளை, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் 30 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அன்பளிப்பின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
மனிதம் அமைப்பு எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல், ஐ.நா. அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை தங்களது கட்சியினருக்கு கொடுத்துள்ளதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரும் வாரங்களில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் போர்க்குற்றவாளி புத்தகங்கள் கொடுக்கப்பட உள்ளன.
*****************

அம்பலப்படுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்படுத்தப்போவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள், எப்போது இவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற தலைப்பில் மன்னிப்புச்சபையின் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை முன்வைக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச அனர்த்தக்குழு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த அழைப்பை மூன்று அமைப்புகளும் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது
*****************

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 24 ஆவது ஆண்டினை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வும், அடையாள உண்ணா விரதமும் பிரித்தானியாவில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிவயோகம் மண்டபத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கள் கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் ஒருபுறம் நடக்கும் அதே வேளை பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்றனவும் இடம்பெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வருடம் பிரித்தானியாவில் ஒருங்கிணைந்த வகையில் ஒரே இடத்தில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது.
முழுநாள் நிகழ்வு என்பதால் ஈழ உணர்வாளர்கள் தமது நேரத்திற்குத் தகுந்தவாறு தியாகி திலீபனுக்கும், இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தினை செலுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*****************


மன்மோகனை கெடுத்த நாரயணன்!
தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே.நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் கொள்கை தொடர்பாக பொய்யான அச்சமூட்டும் தகவல்களைக் கூறியே எம்.கே. நாராயணன், இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது ஜவர்கர்லால் நேருவை கிருஸ்ணமேனன் தவறாக வழிநடத்தியது போலவே மன்மோகன்சிங்கை எம்.கே.நாராயணன் வழிநடத்தியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த இருவருமே இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை தவறாக வழிநடத்தியதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதுவர் திமோதி ஜே ரோமர் கடந்த 2009 டிசம்பர் 17ம் நாள் அனுப்பிய தகவல் குறிப்பிலேயே எம்.கே நாராயணன் பற்றிய இந்தக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
*****************


காமக் களியாட்ட இனவழிப்புப் படை!
ஹெய்ட்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய 100 இற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் வயது குறைந்த பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அனைத்துலக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஹெய்டியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் பல்வேறு நாடுகளிதும் படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஐ.நா அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் நான்கு உருகுவே நாட்டுப் படையினர் ஹெய்டியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தும் காணொலிக் காட்சி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்தே 2007 இல் வயது குறைந்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் 100இற்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்காப் படையினர் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதாக அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
ஐ.நா அமைதிப்படைக்கு மேலதிகமாக 5000 படையினரை- 48 மணிநேர காலஅவகாசத்தில் அனுப்பத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற போதும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளாலேயே ஐ.நா புதிய உடன்பாடு எதையும் செய்யாதிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
*****************

தேடும் யுனிசெப்
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது காணாமல்போன பிள்ளைகளைப் தேடி மீளவும் அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைப்பதற்கான திட்டமானது தற்போது மேலும் விரிவாக்கப்பட்டு வருவதாக ஐ.நாவின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இத்திட்டமானது சிறிலங்காவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட 2009 இலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிறிலங்காவின் வட பகுதியிலுள்ள இரு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டமானது தற்போது வடபகுதியின் ஏனைய மாவட்டங்களுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டமானது தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், தொலைந்து போன சிறார்களைத் தேடிக் கண்டுபிடித்து மீளவும் அவர்களது குடும்பத்தவர்களுடன் ஒன்று சேர்ப்பதில் யுனிசெப் நிறுவனம் கணிசமானளவு வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் 45 சிறார்கள் மீளவும் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னமும் 582 சிறார்கள் காணாமற்போனோர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற்போன சிறார்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களது குடும்பங்களுடன் மீள ஒன்று சேர்ப்பதென்பது இணக்கப்பாட்டு முயற்சியின் போது தேவைப்பாடுடைய ஒன்றாகும் என சிறிலங்காவிற்கான யுனிசெப் பிரதிநிதி றேசா கொசாய்னி தெரிவித்துள்ளார்.
*****************